கனடா | தமிழ்ச் சமூக மையம் அமைப்பதற்கு மத்திய, மாகாண அரசுகள் $26.2 மில்லியன் நிதியுதவி
நகராட்சி $25 மில்லியன் பெறுமதியான நிலம் ஒதுக்கீடு
$35.9 மில்லியன் செலவில் அமையவிருக்கும் தமிழ்க் கலாச்சார மையம்

கனடாவில் தமிழர்கள் செறிந்து வாழும் நகரமான ரொறோண்டோவில் (ஸ்காபரோ) தமிழர்களுக்கெனத் தனியான ஒரு சமூக மையத்தை அமைப்பதற்கென மத்திய, மாகாண அரசுகள் $26.2 மில்லியன் நிதி ஒதுக்கிடை அறிவித்துள்ளன. இம் மையம் அமைக்கபடுவதற்கான $25 மில்லியன் பெறுமதியுள்ள நிலத்தை நீண்டகாலக் குத்தகைக்கு ரொறோண்டோ நகராட்சி அரசு வழங்குகிறது.

311 ஸ்ரெய்ன்ஸ் (Staines Ave.) அவெனியூவில் அமையவிருக்கும் இத் தமிழ்ச் சமூக மைய நிர்மாணத்திற்க்கென நிதி ஒதுக்கப்படும் இவ்வறிவிப்பை, உள்ளக, சமூக நிர்மாண அமைச்சர் கெளரவ கதறீன் மக்கென்னா சார்பில், கனடிய உதவிப் பிரதமரும், நிதி அமைச்சருமான கெளரவ கிறிஸ்ரியா ஃப்றீலாண்ட், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ பில் பிளையர், சிறுதொழில் அமைச்சர் கெளரவ மேரி இங், அரச-பூர்வகுடி விவகார அமைச்சுக்கான பாராளுமன்றச் செயலாளரும் ஸ்காபரோ ரூஜ் பார்க் பாராளுமன்ற உறுப்பினருமான கரி ஆனந்தசங்கரி, ஒன்ராறியோ மாகாண அரசின் சார்பில், உள்ளக நிர்மாண அமைச்சர் கெளரவ கிங் சூமா, மாகாணசபை உறுப்பினர் விஜே தணிகாசலம், ஒன்ராறியோ போக்குவரத்து அமைச்சின் பாராளுமன்ற உதவியாளரும் மாகாணசபை உறுப்பினருமான லோகன் கணபதி, ரொறோண்டோ நகரபிதா ஜோன் ரோறி, ஸ்காபரோ ரூஜ் பார்க் கவுன்சிலர் ஜெனிஃபர் மக்கெல்வீ, தமிழ் சமூக மையத்துக்கான சபையின் தலைவர் சிவா விமலச்சந்திரன் ஆகியோர் இணைந்து நேற்று (16) வெளியிட்டுள்ளனர்.
இம் மையத்தின் நிர்மாணத்திற்கான மொத்த ($35.9 மில்லியன்) நிதித் தேவையின் $14.3 மில்லியன்களை கனடிய மத்திய அரசும், $11.9 மில்லியன்களை ஒன்ராறியோ மாகாண அரசும், மீதி $9.6 மில்லியன்களை தமிழ்ச் சமூக மையமும் பொறுப்பேற்கின்றன. இக் கட்டிடம் அமைவதற்கான $25 மில்லியன் பெறுமதியான நிலத்தை வருடமொன்றுக்கு $1 + HST, நீண்டகாலக் குத்தகையில் ரொறோண்டோ நகராட்சி அரசு வழங்குகிறது.
ரொறோண்டோ பெரும்பாகத்தில் வாழும் தமிழ் மக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்யவென நிர்மாணிக்கப்படும் இச் சமூக மையக் கட்டிடத்தில், அப்பியாச நிலையம், வெளிக்கள விளையாட்டு நிலம், நூலகம், அருங்காட்சியகம், கலைநிகழ்வுக்கூடம், கல்வி மற்றும் இதர கலாச்சார நிகழ்வுகளை நடத்துவதற்கான மண்டபம் ஆகியன உள்ளடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
- ஒன்ராறியோ | ஒரே வாகனத்தில் பயணம் செய்த ஐந்து வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அபராதம்!
- அஸ்ட்றாசெனிக்கா தடுப்பு மருந்தின் பாவனையை ஒன்ராறியோ தற்காலிகமாக் நிறுத்துகிறது – பாதுகாப்பு, வழங்கல் சீரின்மை காரணமாம்
- நாடுகடத்தப்படவிருக்கும் பிலிப்பீனோ சுகாதாரப் பணியாளருக்கு இரண்டாம் தடுப்பூசியைத் தர மறுக்கும் கனடா
- இது கனடா | ‘ஒன்றுக்கிருந்து’ கமராவில் மாட்டிய லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலகுகிறார்..