Spread the love

ஜனவரி 2, 2020

கனடாவில் கஞ்சாவை லிபரல் அரசாங்கம் சட்ட ரீதியாக்கி ஏறத்தாழ ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. அது அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றாக இருந்தாலும் முறையான தயாரிப்புகளைச் செய்யாது, ஆய்வுகளை மேற்கொள்ளாது அவசரம் அவசரமாக லிபரல் அரசாங்கம் கஞ்சா விற்பனை மீதான தடையை நீக்கியது.

வன்முறைக் கும்பல்களும், கனடிய சுதேசிய மக்களுமே பெரும்பாலும் கனடாவில் களவாக இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருபவர்கள். கனடிய பெரும்பான்மை இன மக்களும், இளைய சமுதாயமும் பெரும்பாலும் இலை மறை காய்போல் இருந்த இந்த வர்த்தகத்தில் பெருமளவு பணத்தைக் கொட்டினார்கள். இதை முறியடித்து அந்த வருமானத்தை அரசாங்கம் தனக்கு எடுப்பதற்கான முயற்சியே இது எனப் பலர் அப்போது விமர்சித்திருந்தார்கள்.

வரலாறு

கனடாவில், கஞ்சாவை மருத்துவத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்பது ஜூலை 30, 2001 இல் சட்டமாகியது. பொழுது போக்குக்காகக் கஞ்சா பாவிக்கலாம் என்ற சட்டம் (Cannabis Act C-45) ஜூலை 2018 இல் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, அக்டோபர் 17, 2018 இல் சட்டமாக்கப் பட்டது. 18 வயதுக்கு மேலானோரே இப் பாவனைக்கு அனுமதிக்கப் பட்டனர்.

கனடாவில் கஞ்சாவின் பாவனை சட்டமாக்கப்படுவதற்கு முன்னரே பல வியாபாரிகள் முதலீடுகளை ஆரம்பித்து விட்டனர். ஒன்ராறியோவில் ஒரு காலத்தில் கஞ்சா வுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய கன்சர்வேட்டிவ் கட்சிக் காரர் சடுதியாக கஞ்சா விற்பனை நிறுவனமொன்றில் முக்கிய பதவியை ஏற்றார். ஒரு லிபரல் கட்சி அரசியல்வாதி கஞ்சா நிறுவனமொன்றுக்கு ‘லொபிய்ஸ்ட்’ ஆகினார். இப்படி அரசியல்வாதிகளெல்லாம் கஞ்சாக் கடலில் முத்தெடுக்கவெனப் பாய்ந்தார்கள்.

தற்போது ஏறத்தாள 200 நிறுவனங்கள் கஞ்சா வளர்ப்பிலும், தயாரிப்பிலும், விநியோகத்திலும் தங்கியுள்ளன. இவர்களது வருட வியாபாரம் 1 பில்லியன் டாலர்களை மிஞ்சுகிறது. பாவனையாளர்களும் அதிகரித்து வருகிறார்கள். 2030 இல் உலக வியாபாரம் வருடமொன்றுக்கு 75 பில்லியனைத் தாண்டுமென்று எதிர்வு கூறப்படுகின்றது. அப்படியிருந்தும் பல கனடிய வர்த்தகர்கள் விரைவிலேயே கடைகளைப் பூட்ட வேண்டி வரலாமென்று சந்தை அவதானிகள் கூறுகிறார்கள்.

காரணம் என்ன?

‘குதிரைக்கு முன் வண்டியைப் பூட்டுவதென்று’ ஒரு பழமொழியுண்டு. கனடாவைப் பொறுத்தவரையில் லிபரல் கட்சி அரசு அப்படித்தான் செய்திருக்கிறது போலத் தெரிகிறது.

கஞ்சாப் பாவனை சட்டமாக்கப்பட்ட வேகத்திற்கு இணையாக வேகத்தில் அதற்கான அனுமதி வழங்கலுக்கான தயாரிப்புகள் எதுவும் செய்யப்படவில்லை. முதலீட்டாளர்களின் உற்பத்தி வண்டிகள் சுமையேற்றப்பட்டும் குதிரைகள் வாங்குபவர் இன்னும் பேரம் பேசிக்கொண்டிருந்தார். ஒன்ராறியோவில் முதலாவது கஞ்சா விற்பனைக் கடை திறப்பதற்கு 6 மாதங்கள் எடுத்தன. இதற்கு முக்கிய காரணம் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள்.

Related:  இந்தியாவில் 'டிஜிட்டல் மயமாக்கும்' பணிகளுக்கு கூகிள் 10 பில்லியன் டாலர்களை ஒதுக்குகிறது

அரசாங்கக் கட்டுப்பாடுகள், வரிகள், தரக் கட்டுப்பாடுகள் என்பனவற்றின் சுமைகளுடன் சட்ட ரீதியான கஞ்சாக் கடைகளில் ஒரு கிராம் $10.23 க்கு விற்கப்படுகிறது. ஆனால் பின்னொழுங்கையில் கள்ளக் கஞ்சா ஒரு கிராம் $5.59 போகிறது. அவர்களுக்கு அனுமதிப் பத்திரம் தேவையில்லை, தரக்கட்டுப்பாடுகள் இல்லை. அக்டோபர் 2018 இல் ‘கல்லப்’ கருத்துக் கணிப்பின்படி 66 வீதமானவர்கள் தமது கஞ்சாவுக்காகக் கள்ள் வியாபாரிகளிடம்தான் போகிறார்கள்.

இந்த நிலையில் கஞ்சாக் கடைக்காரர் தூங்காமல் என்ன செய்யலாம்?.

முதலீட்டாளர்கள் தமது பணம் வருடக் கணக்காகத் தூங்கி வழிவதை விரும்ப மாட்டார்கள். பல நிறுவனங்கள் முதலீடுகள் வற்றிப்போனதால் கடைகளைப் பூட்ட ஆரம்பித்துள்ளனர். மக்கார்த்தி ரெறோல்ட் சட்ட நிறுவனத்தின் பங்காளி ரஞ்சீவ் டிலன் இந் நிலவரத்தை மிகவும் அழகாக விபரிக்கிறார். “கடந்த சில வருடங்களாக நாங்கள் படு பிசியாக இருந்தோம். அடுத்த வருடம் நாம் வேறொரு காரணத்துக்காக பிசியாக இருப்போம். அது வங்குரோத்துக்குப் போகும் கஞ்சா நிறுவனங்களினது கருமங்களுக்காக”.

Print Friendly, PDF & Email