கனடா: சஸ்கச்செவன் மாகாணத்தில் 10 பேர் குத்திக் கொலை
13 வெவ்வேறு இடங்களில் 25 பேருக்குக் குத்து – இரு சந்தேக நபர்கள் இன்னும் பிடிபடவில்லை
கனடாவின் சஸ்கச்செவன் மாகாணத்தில் நேற்று (ஆகஸ்ட் 04) நடைபெற்ற தொடர் கத்திக்குத்துச் சம்பவத்தின்போது 10 பேர் கொல்லப்பட்டும் 15 பேர் காயமடைந்துமுள்ளதாக கனடாவின் தேசிய காவல்துறையான ஆர்.சீ.எம்.பி. அறிவித்துள்ளது. கிராமப் புறமொன்றில் 13 வெவ்வேறு இடங்களில், இரண்டு சந்தேகநபர்களால் இச்சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நபர்கள் தற்போது மாகாணத்தின் தலைநகரான றிஜைனாவில் தங்கியிருப்பதாக காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.
தாக்கப்பட்ட சிலர் ஆயுததாரிகளால் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஏனையோர் மேலெழுந்தவாரியாகக் காணப்பட்ட இடங்களில் தாக்கப்ப்ட்டிருக்கலாமெனவும் காவற்துறை சந்தேகப்படுகிறது.
டேமியன் சாண்டெர்சன், 31, மைல்ஸ் சாண்டெர்சன், 30, ஆகியோர் சந்தேக நபர்களாகக் காவல்துறையினால் இனம்காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 119 MPI என்ற இலக்கத் தகடு பொருத்தப்பட்ட கறுப்பு நிசான் றோக் வாகனத்தில் பயணம் செய்வதாகக் கூறப்படுகிறது. இவ்விருவர் குறித்தும் மிகவும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறும் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இவர்களது வாகனத்தில் ஏறவேண்டாமெனவும் காவற்துறை கேட்டுள்ளது.