கனடா: குடிவரவின் காரணமாகக் குடிசன அதிகரிப்பு
2025 இல் இரு மடங்கு ஆகலாம்?
கடந்த ஆண்டு (2022) மட்டும் கனடாவில் குடிபுகுந்த வெளிநாட்டவரின் காரணாமாக அதன் சனத்தொகை 1.05 மில்லியனால் அதிகரித்திருக்கிறது என அதன் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கை கூறுகிறது. இப்படியான அதிகரிப்பு கனடாவின் வரலாற்றில் முதல தடவையாகும்.
இதன் காரணமாகக் கனடாவின் தற்போதைய சனத்தொகை 39,566,248 ஆக இருக்கிறது. இவ்வதிகரிப்பில் 95.9% புதிய குடிவரவாளர்களால் ஏற்பட்டதாகும். குடிசன அதிகரிப்பில் G7 நாடுகளில் கனடாவே முதன்மையானதாகவும் உலக ரீதியில் 20 ஆவது இடத்திலும் இருக்கிறது.
இறப்பு, பிறப்புவீதத் தாழ்வு, வெளியேற்றம் ஆகியவற்றை ஈடுசெய்ய வருடமொன்றுக்கு 300,000 பேர் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்படவேண்டுமென நிபுணர்கள் சிபார்சு செய்துவருகின்றனர். ஆனால் கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட வேலைக் கலாச்சார மாற்றம் காரணமாகவும் அரச உதவிகள் காரணமாகவும் ஏற்பட்ட பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. இருப்பினும் சிரிய, யூக்கிரெய்ன் அகதிகளைப் பெருவாரியாக உள்வாங்கியதன் காரணமாக கடந்த வருடம் 437,180 பேர் புதிய குடிவரவாளர்களாக அனுமதிக்கப்பட்டனர்.
இதே வேளை கடந்த பலவருடங்களாக கனடிய வதிவிடக்கோரிக்கைக்கு விண்ணப்பித்து நிலுவையிலுள்ளோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 1.5 மில்லியன் என குடிவரவு வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. சோவியத் குடியரசின் உடைவிற்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பிய அகதிகள் பலரை கனடா உள்வாங்கியிருந்தது. தற்போது யூக்கிரெய்ன் அகதிகளைத் துரித கதியில் வதிவிட அனுமதிகளைக் கொடுத்தபடியால் தான் இவ்வெண்ணிக்கை திடீரென் உயர்ந்திருக்கிறது.
கனடிய தொழில் முகவர்கள் தமது நிறுவனங்களில் பணிபுரிய செயற்திறன் கொண்டவர்கள் வேண்டுமென அரசிடம் முறையிட்டுவரும் காரணத்தால் கனடிய குடிவரவை 2025 வாக்கில் 1,500,000 ஆக அதிகரிக்க கனடிய அரசு முடிவுசெய்திருந்தது. ஆனால் கனடிய பெருநகரங்களில் நிலவும் வீடு பற்றாக்குறை காரணமாக இது பாரிய நெருக்கடியைக் கொண்டுவருமென நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இப்பற்றாக்குறை காரணமாக வீடுகளின் விலை அதிகரிப்பு ஏற்பட்டதும் இளைய தலைமுறைக் கனடியர்கள் புற நகரங்களுக்குக் குடிபெயர்வதும் பணியாளர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம். இதன் காரணமாக எழும் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ள கனடிய மத்திய அரசிடம் திட்டங்கள் எதுவுமில்லை என பல முறையீடுகள் எழுந்துமுள்ளன. (Photo by Jason Hafso on Unsplash)