US & Canada

கனடா: கன்சர்வேட்டிவ் தலைவர் போட்டியிலிருந்து பற்றிக் பிரவுண் விலக்கப்பட்டார்!

நிதி விதிகளை மீறினார் எனக் குற்றச்சாட்டு

விரைவில் நடைபெறவிருக்கும் கனடிய மத்திய கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைப் போட்டியில் முன்னணி வேட்பாளர்களில் ஒருவராக இருந்த பிறம்டன் மேயர் பற்றிக் பிரவுண் வேட்பாளர் தமையற்றவரெனத் தீர்மானிக்கப்பட்டு போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய் இரவன்று (ஜூன் 05), கட்சியின் தேர்தல் ஒழுங்கமைப்புக் குழுவினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் கட்சியின் நிதி கையாள்தல் விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக பற்றிக் பிரவுணைத் போட்டியிலிருந்து விலக்குவதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இது ஒரு ஆதாரமற்ற முடிவு எனவும் தனது பிரதான போட்டியாளரான பியெர் பொலியெவ்வை வெல்ல வைப்பதற்கான ஒரு முயற்சியே இது எனவும் பற்றிக் பிரவுண் இன்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவ்த்துள்ளார்.

“சகல வேட்பாளர்களும் அவர்களுடைய பிரச்சாரக் குழுக்களும் கட்சியினதும் நாட்டினதும் விதிகளை அனுசரிக்க வேண்டுமென்பது கடப்பாடு என்பதோடு இவ்விதிகள் மீறப்படாமல் பார்த்துக்கொள்வது எமது கடமையுமாகும். இந் நடவடிக்கையை எடுக்கவேண்டி ஏற்பட்டதற்கு நாம் மனம் வருந்துகிறோம்” என கட்சியின் தலைப்பதவிக்கான தேர்தல் குழுவின் ஒழுங்கமைப்பாளர் குழுவின் தலைவர் இயன் புரோடி அறிக்கயொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

“பற்றிக் பிரவுணை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்குவது பற்றிய செய்தியை நாங்கள் ஊடகங்கள் மூலமாகவே அறிய முடிந்தது” என அவரது பிரச்சாரக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

“பற்றிக் பிரவுண் தேர்தல் விதிகளை மீறினார் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அநாமதேயமானவையும் ஆதாரமற்றவையுமாகும். இக் குற்றச்சாட்டுகள் பற்றி பிரவுணினின் தேர்தல் பிரச்சாரக் குழுவுக்கு முழுமையான தகவல்கள் கொடுக்கப்படவில்லை. அப்படியிருந்தும் கட்சியின் கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்க குழு முழு முயற்சிகளையும் எடுத்திருந்தது” என பிரவுணின் பிரச்சாரக் குழு தெரிவித்துள்ளது.

கட்சித் தலைவர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் பல்லாயிரக் கணக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு தபாலில் அனுப்பப்படுவதற்குத் தயாராக இருப்பதாகவும் அதில் பற்றிக் பிரவுணின் பெயர் தொடர்ந்தும் இருக்குமெனவும் பெயர் குறிப்பிட விரும்பாத கட்சித் தேர்தல் அதிகாரி குறிப்பிட்டதாக சீ.பீ.சீ. செய்தி வெளியிட்டடுள்ளது.

இறுதியாகக் கிடைத்த அங்கத்துவ வாக்காளர் பட்டியலின்படி பியெர் பொலியேவுக்கு எதிர்பார்த்த அங்கத்தவர் எண்ணிக்கை கிடைக்கவில்லை எனவும் இது அவரை வெல்ல வைப்பதற்காக எடுக்கப்படும் ஜனநாயகமற்ற நடைமுறை எனவும் பிரவுண் தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இத் தேர்தலில் வாக்களிக்கவென 675,000 அங்கத்தவர்கள் தயாராக இருக்கிறார்கள் எனக் கட்சித் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இப் போட்டியில் பற்றிக் பிரவுண், ஜான் ஷாரே போன்றோர் மிதவாதப் போக்குடையவர்களாகவும், பியெர் பிலொயெவ் போன்றோர் தீவிர வலதுசாரிப் போக்குடையவர்களாகவும் அறியப்பட்டவர்கள். மேற்கு கனடாவைத் தளமாகக் கொண்ட தீவிர வலதுசாரிகள் மற்றும் மதவாதிகள் ஆதிக்கத்தினால் கடந்த மூன்று கடசித் தலைவர்களின் தெரிவும் தீவிர வலதுசாரி சார்புடையதகவே இருந்து வருகிறது. இத் தேர்தலில் பியெர் பொலியெவ் வென்று கட்சித் தலைவராக வந்தாலும் பொதுத் தேர்தலில் அவரது தலைமையில் கட்சி ஆட்சியைப் பிடிப்பது மிகவும் கடினம் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பற்றிக் பிரவுணின் வேட்பாளர் தகமை மறுக்கப்பட்டதனால் அவருக்கு இணையாகத், தமிழர்கள் மத்தியில் வெகுவாக அறியப்பட்ட மிதவாதியான் ஜான் ஷரே இப்போட்டியில் வெல்வது இலகுவாக்கப்பட்டிருகிறது எனக் கருதப்படுகிறது.

அங்கத்தவர்களாகப் பதிந்தவர்கள் விரைவில் தபால் மூலம் வாக்குச் சீட்டுகளைப் பெறுவார்கள் எனவும் அத்தோடு முத்திரை இணைக்கப்பட்ட தபாலுறையும் அனுப்பப்படுமெனவும் தமது வேட்பாளரைத் தெரிவு செய்து வாக்காளர் இவ்வாக்குச்சீட்டைத் தபாலில் சேர்த்துவிட்டல் போதுமானது என்றும் கட்சியின் தேர்தல் விதிகள் கூறுகின்றன்.