Spread the love

ஜனவரி 25, 2020

கனடா | கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருக்கான போட்டி - பீட்டர் மக்கே களத்தில் குதிக்கிறார்! 1
கனடா மத்திய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் பீட்டர் மக்கே

கனடாவின் மத்திய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப்பதவிக்கான தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. கடந்த வருடம் நடைபெற்ற மத்திய பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து அதன் அப்போதய தலைவர் தான் பதவியைத் துறக்கவிருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து அக் கட்சிக்கான புதிய தலைவரைத் தெரியும் தேவை கட்சிக்கு ஏற்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் பல கட்சிப் பிரமுகர்கள் தாம் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர்.

கன்சர்வேட்டிவ் கட்சியினர் ஒற்றுமைப்படாமல் இருந்தால் என்ன நடக்குமென்ற என்ற நிலைமையை நாம் பார்த்துவிட்டோம்

– பீட்டர் மக்கே

ஹார்ப்பர் கன்சர்வேட்டிவ் அரசில் அமைச்சராகவிருந்த பீட்டர் மக்கே, தானும் போட்டியில் இணவதாக இன்று அறிவித்திருக்கிறார். கடந்த சில நாட்களாக அவரது பெயர் அடிபட்டிருந்தாலும் இன்று அவர் தனது ஆதரவாளர் முன், உத்தியோகபூர்வமாக அதை அறிவித்திருக்கிறார்.

யாரிந்த பீட்டர் மக்கே?

நோவா ஸ்கோஷியா மாகாணத்தைச் சேர்ந்த பீட்டர் மக்கே 20 வருடங்களுக்கு முன்னர், முன்னாள் புறோக்கிரெஸ்ஸிவ் கன்சர்வேட்டிவ் கட்சியில் முதன் முதலாகப் பாராளுமன்றதுக்குத் தெரிவானார். அதற்கு முன் அவர் முடிக்குரிய வழக்குத் தொடுநராகப் பணியாற்றியிருந்தார். பீட்டர் மக்கேயின் தந்தையார் எல்மெர் மக்கே 70, 80 பதுகளில் மத்திய பாராளுமன்ற உறுப்பினராகப் பாணியாற்றியிருக்கிறார். பீட்டர் மக்கே தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இல்லாவிடினும், மத்திய நோவா ஸ்கோஷியா தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் வரலாறு

முன்னாள் பிரதமர் பிரையான் மல்றோனியின் காலத்தில் முற்போக்குக் கன்சர்வேட்டிவ் கட்சியாக இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி அவர் தேர்தலில் தோற்றதும் பிளவுற்றது. சில தீவிர வலதுசாரிகள் தனியாகப் பிரிந்து சென்று ரிஃபோர்ம் என்றொரு கட்சியை உருவாக்கினார்கள். அது பின்னர் கனடியன் அல்லயன்ஸ் என்ற கட்சியாகியது. முற்போக்கு கன்சர்வேட்டிவ் அணியின் தலைவராக பீட்டர் மக்கே தொடர்ந்தும் இருந்தார். இதனால் பலமிழந்துபோன கன்சர்வேட்டிவ் இயக்கத்தைச் சேர்ந்த சில மூத்த உறுப்பினர்கள், இரண்டு அணிகளையும் மீண்டும் ஒன்று சேர்த்து, கட்சியின் ‘முற்போக்கு’ என்ற அடையாளத்தை விட்டு விட்டு, 2003 இல் ‘கன்சர்வேட்டிவ் கட்சி’ என்ற பெயரில் ஒரு கட்சியானார்கள். இதற்கு முன்னின்று உழைத்தவர்களில் பீட்டர் மக்கேயுக்குத் தனியிடமுண்டு.

அடுத்த தடவை புதிய கன்சர்வேட்டிவ் கட்சி, ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஸ்டீபன் ஹார்ப்பர் அரசுகளில் பீட்டர் மக்கே வெளிவிவகாரம், நீதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தார்.

2015 ம் ஆண்டு தேர்தலில் ஹார்ப்பரின் கன்சர்வேட்டிவ் கட்சி ஜஸ்டின் ட்றூடோவின் லிபரல் கட்சியிடம் தோற்றபோது, பீட்டர் மக்கே அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாக அறிவித்திருந்தார். அப்போது அவருக்குத் திருமணமாகியிருந்ததால் இளம் குடும்பத்தைக் காரணம் காட்டி அவர் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்தார்.

தேர்தல் இழப்பைத் தொடர்ந்து ஸ்டீபன் ஹார்ப்பரும் பதவி விலகியதால் ஆண்ட்றூ ஷியர் அப்பதவியை ஏற்று எதிர்க்கட்ட்சியில் இருந்தாலும் 2019 தேர்தலில் அவரால் கட்சிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இதனால் அவரும் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததால், கட்சித் தலைவருக்கான போட்டி புதிய தலைவரைத் தேடிப் போட்டியொன்றை நடத்துகிறது.

Related:  கோவிட்-19 தடுப்பு மருந்து | 114 மில்லியன் அளவுகள் மருந்துகளைக் கனடா வாங்குகிறது

கன்சர்வேட்டிவ் கட்சியின் சூழல், மனித உரிமைகள், மத நம்பிக்கை, குடிவரவு சார்ந்த விடயங்களில் கால, கலாச்சார மாற்றங்களுக்கேற்ப மாறிக்கொள்ளது தீவிர பழமைவாதக் கொள்கைகளைப் பின்பற்றியதால் தான் கடந்த தேர்தலில் வெற்றிகொள்ள முடியவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் முன்னாள் முற்போக்கு கன்சர்வேட்டிவ் அணியைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் ஒருவரைத் (54 வயது) தலைவராக்குவது கட்சிக்கு நல்லது எனக் கன்சர்வேட்டிவ் கட்சியினர் கருதுவதால் பீட்டர் மக்கே அடுத்த பிரதமராக வருவதற்குச் சாத்த்தியங்கள் உண்டென நம்பப்படுகிறது.

பீட்டர் மக்கேயை விட மேலும் சில பிரபலங்கள் தலைமைக்கான தேர்தலில் குதித்திருந்தன. அவர்களில் மக்கேயுக்குப் போட்டியாக இருந்தவர்களெனக் கருதக்கூடிய முன்னாள் அமைச்சர் றோணா அம்புரோஸ், முன்னாள் கியூபெக் லிபரல் கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான ஜான் ஷாரே, மற்றும் முன்னாள் அமைச்சரான பியர் பொலிவ்றே ஆகியோர் கடந்த சில நாட்களில் போட்டியிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்து விட்டார்கள். தற்போது போட்டியில் எஞ்சியிருப்பது மரிலின் கிளாடு, எரின் ஓட்டூல் போன்றவர்களே. இவர்களோடு ஒப்பிடும்போது மக்கே இலகுவாக வெல்வார் எனப் பரவலாக எத்ரிபார்க்கப்படுகிறது.

பீட்டர் மக்கேயின் முற்போக்குக் கொள்கைகளும், குடிவரவாளரிடம் இருக்கும் ஆதரவும், அவரது அனுபவமும், இளமையும், அடுத்த தேர்தலில் லிபரல் கட்சியிடமிருந்து ஆட்சியை பறிப்பதற்கு பெரும் துணையாகவிருக்குமெனக் கட்சி ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.

பிரதமர் மல்ரோனியின் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியின்போதுதான் 150 தமிழர்கள் நியூபவுண்லாந்து கடற்கரையில் வந்து ஒதுங்கினார்கள். மக்களிடமிருந்த பலத்த் எதிர்ப்புக்கு மத்தியிலும் ” அவர்களை நான் திருப்பி அனுப்பப் போவதில்லை” என உரத்துக்கூறிய மல்றோனியின் கட்சியைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கேயிற்குத் தமிழர்களின் ஆதரவு அதிகமாகவிருக்குமென எதிர்பார்க்கலாம்.

Print Friendly, PDF & Email
கனடா | கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருக்கான போட்டி – பீட்டர் மக்கே களத்தில் குதிக்கிறார்!

கனடா | கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருக்கான போட்டி – பீட்டர் மக்கே களத்தில் குதிக்கிறார்!