OpinionUS & Canadaமாயமான்

கனடா: கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருக்கான தேர்தல்

ஒரு மங்கிய பார்வை

மாயமான்

கனடிய மத்திய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் இந்த வருடம் செப்டம்பர் 10 இல் நடைபெறவுள்ளதாகப் பிரசித்தம் செய்யப்பட்டிருக்கிறது. எங்கு போனாலும், கிராமம் முதல் நாடு வரை, தமிழர் இல்லாது ஒரு அரசியல்வாதியைத் தெரிவு செய்ய முடியாது என்ற அளவுக்கு நம்மாட்கள் புகுந்து விளையாடுகிறார்கள் என்பது ஒரு வகையில் பெருமைதான். அதுவும் வழமை போல எல்லா வேட்பாளர்களுடனும் எப்போதும் வேலை செய்யவும் நம்மவர்கள் தயார். தாராளமான மனசு!

ஜூன் 2 ல் ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதை இதனோடு கலந்து குழப்ப விரும்பாததால் இப்போதைக்குத் தவிர்க்கிறேன்.

இந்தத் தடவை, இன்று வரை 11 வேட்பாளர்கள் தமது பெயர்களை அறிவித்திருக்கிறார்கள். ஜான் சறே, பட்றிக் பிரவுண், பியெர் பொலிவ், லெஸ்லின் லூவிஸ், ஜோசெஃப் பொர்கோ, லியோன அலிஸ்லேவ், மார்க் டால்ற்றன், றோமன் பேபர் மற்றும் ஸ்கொட் அற்கின்சன், மேலும் இருவர். இவர்களில் முதல் நால்வரும் தமிழ்ச் சமூகத்திற்கு ஓரளவு அறிமுகமானவர்கள். அதனால் இவர்கள் நால்வருக்காகவும் ஆதரவு தேடி உங்கள் கதவுகளைத் தட்ட நம்மவர்கள் வரக்கூடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னணி

2021 கனடிய பொதுத் தேர்தலில் 119 ஆசனங்களைப் பெற்று கன்சர்வேட்டிவ் கட்சி அதிகாரபூர்வமான எதிர்க்கட்சி ஸ்தானத்தைப் பெற்றுக் கொண்டது. அதன் தலைவராக இருந்த எரின் ஓற்றூல் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தேர்தலின்போது கட்சிக்குள் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றதெனக்கூறி ஒரு உள்ளக மீள்பார்வையை ஓற்றூல் கோரியிருந்தார்.

ஓற்றூலின் தலைமையில் நம்பிக்கை இல்லாத, கட்சியின் செனட்டர்களில் ஒருவரான டெனீஸ் பட்டெர்ஸ் என்பவர் நவம்பர் 2021 இல் கட்சித் தலைவர் ஓற்றூலின் தலைமைக்கு எதிராக உட்கட்சி முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார். இம் முறைப்படு முறையாக இல்லை என்ற குற்றச்சாட்டில் கட்சியின் தவிசாளரான றொபேர்ட் பாதெர்சன் பட்டெர்ஸைக் கட்சியிலிருந்து விலக்கி விட்டார்.

ஜனவரி 2022 இல் உள்ளக விசாரணை முடிவுகல் வந்தன. தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது கட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை எனவும் ஓற்றூல் தேவைக்கு அதிகமாக ‘நிர்வகிக்கப்பட்டார்’ எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. பிரசார காலங்களில் ஓற்றூல் தனது சொந்த கருத்துக்களைச் சுதந்திரமாகக் கூற கட்சி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்பதுவும் கட்சியின் தோல்விக்கு அதுவும் ஒரு காரணமென்பதும் ஓற்றூலின் தரப்பின் வாதம். அதை இந்த விசாரணை உறுதி செய்திருந்தது.

ஜனவரி 31, 2022 இல் கன்சர்வேட்டிவ் பா.உ. பொப் பென்சென், 35 உறுப்பினர்களின் கையெழுத்துக்களுடன் கட்சித் தலைமையை மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கினார். லிபரல் பிரதமர் ட்றூடோவின் கார்பன் வரி, துப்பாக்கிகள் மீதான தடை போன்ற கொள்கைகளுக்கு ஓற்றூல் அதிக எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை என்பது பென்செனினின் குற்றச்சாட்டு.

இதைத் தொடர்ந்து பெப்ரவரி 2, 2022 இல் நடைபெற்ற கட்சி பா.உறுப்பினர்களின் வாக்கெடுப்பின்போது ஓற்றூலை அகற்றுவதென 73 பேரும், அவரைத் தக்கவைப்பதென 45 பேரும் வாக்களித்தார்கள். இதன் பிரகாரம் ஓற்றூல் உடனடியாகப் பதவியிலிருந்து அகற்றப்பட்டு காண்டிஸ் பேர்கன் என்பவர் தற்காலிகத் தலைவரானார்.

கட்சி அங்கத்தவராதல்

இப்போது வேட்பாளர்கள் அனைவரும் தமக்கான வாக்குகளைத் தேடிப் படையெடுத்து வருகிறார்கள். $15 கட்டணம் கட்டி கட்சியின் அங்கத்தவர்களாக வருபவர்கள் மட்டுமே வாக்களிக்கலாம். கட்சியில் அங்கத்தவராக வர விரும்புபவர்கள் www.conservative.ca என்ற இணையத்தளத்திற்குச் சென்று படிவத்தை நிரப்பி அங்கத்தவராகலாம்.

அங்கத்தவர்களாகப் பதிவுசெய்தவர்களுக்கு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் வாக்குச் சீட்டுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஒரு வாக்காளர் அதிக பட்சம் 4 வேட்பாளர்களைத் தமது விருப்பு ஒழுங்கில் தெரிவு செய்யலாம். முதலிரு வேட்பாளர்களிடையே போட்டி வரும்போது மூன்றாம், நான்காம் நிலையிலுள்ளவர்களுடன் பேரம் பேசி அவர்களது வாக்குகளை முதல், இரண்டாம் நிலைகளிலுள்ளவர்கள் பெற முயற்சிப்பார்கள். இப்படியாக முதல், இரண்டாம் நிலைகளிலுள்ளவர்களிடையே இறுதி வாக்குக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளர் முடிசூட்டப்படுவார்.

வேட்பாளர் பட்டியலில் இடம்பெறத் தகுதியானவர்களது பெயர்களை அறிவிக்கும் இறுதித் திகதி ஜூலை 29. அதன் பின்னரே வாக்குச் சீட்டுகள் தயாரிக்கப்படும்.

வேட்பாளருக்கான தகமைகள், விதிமுறைகள் பற்றி அறிய இத் தொடுப்பை அழுத்தவும்.

வேட்பாளர்கள்

வழக்கம் போல சில வேட்பாளர்கள் தேர்தலில் வெல்ல வேண்டுமென்பதற்காகப் போட்டியிடுவார்கள். சிலர் இரண்டாவது அல்லது மூன்றாவது (தேவையேற்படின் நான்காவது) ரவுண்டுகளில் தமக்குக் கிடைத்த வாக்குகளைக் கொண்டு பேரம் பேசுவதன் மூலம் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இதன் போது வெற்றிபெறும் வேட்பாளர் தனக்கு ஆதரவளித்த வேட்பாளருக்குச் சில சலுகைகளைச் செய்யலாம். அதில் ஒன்று அமைச்சர் பதவி அல்லது அவர் முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தை நிறைவேற்றிக் கொடுப்பது.

வரலாறு

பிறையான் மல்றோனியில் காலத்தில் கொள்கை ரீதியாக முற்போக்குப் பழமைவாதத்தில் இருந்த கனடிய கன்சர்வேட்டிவ் கட்சி (fiscal conservatism) பிரதமர் ஹார்ப்பர் காலத்தில் மேற்கு கனடாவின் தீவிர பழமைவாதத்தின் பிடிக்குள் (social conservatism) தள்ளப்பட்டது. ஆனாலும் 60-70 வீதமான கனடியர்கள் மிதவாத அல்லது முற்போக்கு வலதுசாரி நிலைப்பாட்டை எடுப்பவர்களாதலால் ஹார்ப்பருக்குப் பின்னர் கன்சர்வேட்ட்டிவ் கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. எரின் ஓற்றூல் கட்சித் தலைமைக்கான தேர்தலில் நின்றபோது தீவிர வலதுசாரித் தளத்தில் நிற்பதற்குத் தள்ளப்பட்டார் எனவும் வெற்றியை ஈட்டியதும் அவர் தனது இயல்பான முற்போக்கு வலதுசாரித் தளத்திற்குத் திரும்பியமையால்தான் அவர் தூக்கி எறியப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. எனவே கட்சித் தலைமையை வெல்வதற்கு தீவிர வலதுசாரியமும், பொதுத் தேர்தலில் வெல்வதற்கு மிதவாத வலதுசாரியமும் தேவைப்படும் இக்கட்டான நிலையில் வேட்பாளர்கள் தமது கொள்கைகளை மிகவும் லாவகமாக நகர்த்த வேண்டியிருக்கிறது.

தமிழர் பங்கு

இந் நிலையில் நமக்கு (தமிழருக்கு) நன்கு பரிச்சயமான வேட்பாளர்கள் இருவர் இப் பட்டியலில் இருக்கிறார்கள். வெளிநாட்டில் எங்கு தேர்தல்கள் நடைபெற்றாலும் அவற்றை நமது ஊருக்குள்ளால் வடிகட்டி எடுத்து வாக்களிக்கும் மனப்பான்மை நமது இரண்டாவது, மூன்றாவது தலைமுறைகளையும் பற்றிக்கொண்டிருப்பது பற்றி ஆச்சரியப்படத் தேவையில்லை. அரசியல் என்று வரும்போது வயதுக்கு இடமில்லை. ஆனாலும் நம் தாயக அரசியலில் ஒரு விடிவு வரும்வரை, முள்ளிவாய்க்கால் நினைவுகளை நாம் மறக்க முடியாதவரை, எத்தனை தலைமுறைகள் ஆனாலும் இவ்வெண்ணம் எங்களை விட்டுப் போகாது. யூதர்களும், ஐரிஷ் காரர்களும், ஆர்மீனியர்களும் கூட பல்வேறு தசாப்தங்கள் தாண்டியும் இதே மனநிலையுடந்தான் தாம் வாழும் நாடுகளில் வாக்களிக்கிறார்கள். எனவே இவ்விவாதத்தை இப்போதைக்கு விட்டு விடுவோம்.

வேட்பாளர்கள்

நமக்குப் பரிச்சயமான வேட்பாளர்களான பற்றிக் பிரவுண், ஜான் ஷாரே ஆகிய இருவரிலும், ஒப்பீட்டளவில் பலருக்கும் அதிகம் தெரிந்தவர் பற்றிக் பிரவுண். அவர் மத்திய பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போதே எமக்காகப் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவர். இத்தனைக்கும் அவரது தொகுதியில் 5 பேர்களைக் கொண்ட ஒரேயொரு தமிழ்க் குடும்பம் மட்டுமே இருந்தது என அவர் அடிக்கடி சொல்வார். தான் பிரதமராக வந்தால் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவேன் என்பது அவர் இப்போது கூறிவரும் வாசகம். போர்க்குற்றம், இனப்படுகொலை என்ற வாசகங்களும் வேறு. இவை எல்லாம் தமிழ் வாக்காளர்களின் உள்ளங்களைக் குளிர வைக்கின்றன என்பதிலும் சந்தேகமில்லை.

ஜான் ஷாரே, ஒப்பீட்டளவில் பற்றிக் பிரவுணைப் போல தமிழர் விவகாரங்களில் தனது குரலை உரத்து ஒலிக்கவில்லை. ஆனால் அவர் ஒரு மனிதாபிமானி என்பதைப் பல இடங்களில் காட்டி வந்திருக்கிறார். பிரதமர் மல்றோனியைப் போல் அவரும் ஒரு மிதவாத வலதுசாரி. ஒரு fiscal conservative. இவரது பிரச்சார அணியிலும் தமிழர்கள் இருக்கிறார்கள்.

மூன்றாவது வேட்பாளர், தமிழருக்கு அதிகம் பரிச்சயமில்லாதவர் ஆனாலும் தந்னை ஒரு தீவிர வலதுசாரியாகவும் ஒரு social conservative ஆகவும் காட்டிவரும் பியர் பொலிவ். ஒரு துடிப்புள்ள கறாரான பேர்வழி. தன் மனதில் பட்டதை மெருகூட்டாமல் சொல்பவர். மேற்கு கனடாவின் மனநிலையைப் பிரதிபலிப்பவர். கனரக வண்டிகளின் தலைநகர் முடக்கத்தின் போது அவர்களுக்கு ஆதரவாக ஆர்மபத்திலிருந்தே குரல் கொடுத்து வந்தவர். இக் கனரக வண்டிக்காரர் இனத்துவேஷம் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் என்ற கருத்து நிலவியபோதிலும் அவர்களது ‘சுதந்திர வேட்கையில்’ நாம் தலையிடக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்து இறுதிவரை அதிலிருந்து வழுவாதிருந்தவர். இவர் பினாலும் தமிழர்கள் சிலர் பணியார்றுகிறார்கள்.

ஏனைய வேட்பாளர்களில் லெஸ்லின் லூவிஸ் என்பவர் ஒரு கறுப்பினப் பெண். சென்ற கட்சித் தலைமைக்கான தேர்தலிலும் தனக்குக் கிடைத்த கணிசமான வாக்குகளை எரின் ஓற்றூலுக்கு வழங்கியதன் மூலம் அவர் தலைவராக வருவதற்கு வழிசெய்தவர். இந்தத் தடவையும் அவர் அதைச் செய்யலாம். மற்றையவர்கள் அதிகம் அறியப்பட்டவர்களல்லர். அவர்களது ஆதரவு எப்படியானது எனவும் எனக்குத் தெரியாது. கருத்துக் கணிப்புகளும் அவர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எனவே அவர்களைத் தற்காலிகமாக விட்டு விடுவோம்.

இப்போது மேற்குறிப்பிட்ட மூன்று பெயர்களில் தமிழர்கள் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.

தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது வேறு யார் இப் போட்டியில் வென்று கட்சியின் தலைவராக வருவார்கள் என்பது வேறு. அந்த வகையில் இம் மூவரிலும் தமிழர் மத்தியில் மிகவும் பரிச்சயமானவர் பட்றிக் பிறவுண் தான். அவர் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கடமையுணர்வுடன் கைகளில் சீட்டுக்களுடன் இப்போதே வரிசையில் நிற்பவர்கள் பலர். வெகு நாட்களுக்கு முன்னரே இதற்கான மாபெரும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ஷாரேயின் முகாம் இவ்விடயத்தில் சாதாரண வேகத்தில் தான் இயங்குகிறது. பொலீவ் தரப்பிலும் சில தமிழர்கள் இயங்குகிறார்கள். மற்றப்படி பொலிவ் முகாம் தமிழர்களுக்கு எந்தவித அனுகூலங்களைப் பெற்றுத்தர்மென்ற எந்த விஞ்ஞாபனமும் இதுவரை வெளியிடப்படவில்லை.

கருத்துக் கணிப்பு

6 நாட்களுக்கு முன்னர் IPSOS நிறுவனத்தால் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி கனடியர்கள் மத்தியில் அறியப்பட்டவர்கள் ஷாரேயும், பொலிவும் தான். 70% மான வாக்காளர்கள் மீதி 9 வேட்பாளர்களையும் தமக்கு அதிகம் தெரியாது என்கிறார்கள். பிரவுணைத் தமிழர்களும் சீக்கியர்களும் அறிந்திருக்குமளவுக்கு ஏனையோர் அறிந்திருக்கவில்லை. கட்சித் தலைமை மற்றும் அங்கத்துவ அரசியலுக்கு வாக்குகளை அள்ளிக் குவிக்கும் பண்பு தென்னாசிய சிறுபான்மையினரிடம் அதிகமுண்டு. அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய பலரில் பிரவுணும் ஒருவர். தமிழர் மத்தியில் தன்னை ஒரு தமிழராகவும் சீக்கியர் மத்தியில் தன்னை ஒரு சீக்கியராகவும் காட்டுபவர் அவர். இதுவரை அவர் மேற்கொண்ட தந்திரோபாய நகர்வுகளில் அப் பண்பு வெற்றியை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. ஆனால் இப்சோஸ் கருத்துக்கணிப்பின்படி அவரது இந்த ‘சிறுபான்மை விசுவாசமே’ பெரும் சமூக அரசியலில் அவருக்கு எதிரியாக ஆகிவிடக்கூடும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகிறது. அந்த வகையில் மற்ற இருவரும் சிறுபான்மை விசுவாசத்தை வெளிப்படையாகக் காட்டுவது போலத் தெரியவில்லை.

இப்ஸோஸ் கருத்துக்கணிப்பின்படி 20% கனடியர்களும், 37% கன்சர்வேட்டிவ் வாக்காளர்களும் பியெர் பொலிவுக்கு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். அதே வேளை ஜான் ஷாரேயுக்கு 12% கனடியர்களும் 14% கன்சர்வேட்டிவ் வாக்காளர்களும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு காரணம் பலரும் ஷாரேயை ஒரு லிபரல் கட்சியின் கொள்கையை வரிப்பவராகவே பார்க்கிறார்கள் எனவே இக்கருத்துக்கணிப்பு காட்டுகிறது. கியூபெக் மாகாணத்தில் ஷாரேயிற்கு அதிகம் ஆதரவு இருப்பது போல பொலிவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெர்விக்கப்படவில்லை. சிலவேளைகளில் முதலாவது வேட்பாளர் விவாதம் இதையெல்லாம் மாற்றிப் போடலாம்.

இப் பின்னணியில் வெல்லும் குதிரையில் காசு கட்டும் தந்திரோபாய அரசியலா அல்லது விசுவாச அரசியலா; எது தமிழ் வாக்காளருக்கு அவசியமானது என்பதே இப்போது தமிழ் வாக்காளர் முன்னுள்ள கேள்வி.

தமிழர்கள் பொதுவாக பேச்சில் மிதவாதப் போக்கையும் நடைமுறையில் வலதுசாரிப் போக்கையும் காட்டுபவர்கள். அந்த வகையில் அவர்களது ஆதரவு இந்த இரண்டு பண்புகளையும் கலவையாகக் கொண்ட பிரவுண் மற்றும் ஷாரேயிற்கே இருக்கும் என எதிர்பார்க்கலாம். ட்றம்ப் ரக அரசியலைப் பகிரங்கமாகப் போதிக்கும், ஒரு social conservative ஆன பியெர் பொலிவை ஆதரிக்க அவர்கள் முன்வர மாட்டார்கள் என்பது எனது கணிப்பு. ஆனாலும் எங்கள் ஆதரவை மட்டும் நம்பி அவரும் செயற்படமாட்டார் என்பதால் அவரை இங்கு கணக்கில் எடுக்காமல் விட்டுவிடலாம். மீதி இரண்டு பேர்களிலும், தேசிய ரீதியில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்படி பிரவுண் வெல்லவே மாட்டார் என்ற வாதத்தை அனுசரித்தால் தமிழர்களது வாக்கு ஷாரேயுக்குப் போகவேண்டும் என்பது எதிர்பார்ப்பு. இல்லை, கட்சித் தலைவராக யார் வந்தாலும் எமக்கு அதனால் பிரயோசனமில்லை எமது விசுவாசம் பிரவுணுக்கே என வாக்களித்தால் அதுவும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒன்றே.

மத்திய அரசியலில் எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும் அக் கட்சிகளில் தமிழரது செல்வாக்கு இருப்பது அவசியம் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒன்று. அக் கட்சிகளால் என்களுக்கு நன்மை ஏதும் கிடைக்கிறதோ இல்லையோ பாரதூரமான தீமைகள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவாவது அந்த ஆதரவைக் கொடுப்பது நல்லது. கனசர்வேட்டிவ் கட்சியைப் புறக்கணித்தமையால் தான் ஹார்ப்பர் அரசு தமிழருக்குத் தீமைகளை விளைவித்தது எனக்கூறி கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஒரு குழு ஆதரவளிக்கத் தொடங்கியது வரலாறு. இக்கலாச்சாரத்தைப் பின்பற்றிய ‘இந்து’ இந்தியரும் சில அனுகூலங்களைப் பெற்றதுமுண்மை. அந்த வகையில் எல்லாக் கட்சிகளிலும் தமிழரது பங்களிப்பு இருக்க வேண்டும்.

இப்போது எமக்கு முன்னால் இரண்டு வேட்பாளர்கள் இருக்கிறார்கள். பிரவண், ஷாரே. இவர்களில், தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? வெல்லும் குதிரைமீதா அல்லது விசுவாசத்துக்காகவா? அடுத்த கட்டுரையில் இதற்கான ‘மறுமொழி’ கிடைக்கும்.