US & Canada

கனடா: கணவர் மனைவியைத் திட்டமிட்டுக் கொலை செய்தார் – ஜூரர் தீர்ப்பு

கனடா, ஸ்காபரோவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கொலைகாரர்களைக்கொண்டு தனது மனைவியைத் திட்டமிட்டுக் கொலைசெய்தார் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இரண்டு குழந்தைகளின் தாயாராகிய தீபா சீவரட்ணம் என்பவரை மார்ச் 13, 2020 அன்று கொலையாளி ஒருவரின் மூலம் அவரின் வீட்டில் வைத்துச் சுட்டுக் கொலைசெய்ததாக இறந்தவரின் கணவரான விஜேந்திரன் பாலசுப்ரமணியம் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தார். இவ்வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

நீதியரசர் அன்ட்றாஸ் ஷிறெக் முன்னிலையில் 11 வாரங்கள் நடைபெற்ற இவ்விசாரணையின்போது 26 பேர் சாட்சியமளித்திருந்தார்கள். நேற்று இவ்விசாரணையின் தீர்ப்பு வெளியாகியிருந்தது. இதன் பிரகாரம் தனது மனைவியைக் கொலைசெய்வதற்கு முற்கூட்டியே திட்டமிட்டுச் செயற்பட்டாரென கொலைசெய்யப்பட்டவரின் கணவரான விஜேந்திரன் பாலசுப்ரமணியம் மீது முதல்நிலைக் கொலையாளி என்ற தீர்ப்பையும், அவரால் சம்பளத்துக்கு அமர்த்தப்பட்ட கொலையாளியான ஸ்ரெட்லி கேர் முதல் நிலைக் குற்றவாளி எனவும், கொலைசெய்தவரை வாகனத்தில் ஏற்றி இறக்கிய அவரின் நண்பரான கெரி சாமுவேல் உடந்தைக் கொலைக் குற்றவாளி எனவும் ஜூரர்கள் தீர்ப்பு வழங்கியிருந்தனர்.

இச்சம்பவத்தின்போது கொலைசெய்யப்பட்டவரின் வீட்டுக்கு பொதியொன்றை விநியோகிப்பவர் என்ற கோதாவில் கொலையாளி சென்று அழைப்பு மணியை அழுத்தியபோது கொலைசெய்யப்பட்டவரின் தாயார் கதவைத் திறந்திருந்தார் எனவும் அப்போது பொதியை விநியோகித்தமைக்கான பற்றுச்சீட்டில் கையெழுத்திடவேண்டுமென கொலையாளி நிப்பந்தித்தார் எனவும் அப்போது கையெழுத்திட வந்த தீபாவையும் அவரது தாயாரையும் கொலையாளி சுட்டார் எனவும் தெரியவருகிறது. இச்சூட்டின் காரணமாக தீபா மரணமடைந்துவிட அவரது தாயார் காயங்களுடன் பிழைத்துக்கொண்டார்.

இக்குற்றங்களோடு, கொலையாளிகள் மீது தாயாரைக் கொலைசெய்ய முயற்சித்தமை மற்றும் கொலை செய்யத் திட்டமிட்டமை என இதர குற்றப்பதிவுகளையும் ஜூரர்கள் பரிந்துரைத்துள்ளனர். கடந்த வெள்ளியன்று முடிவுக்கு வந்த இந்த விசாரணை மீதான தண்டனைகள் பற்றி முடிவுகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.