Spread the love

பெப்ரவரி 29, 2020

ஒரு நற்குடி மகனின் (கனடிய) செய்கையால் பல கனடியர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது.

கனடாவின் வரித் திணைக்களம் அவர்கள் செலுத்திய வருமானவரியின் உபரியான தொகையை அவரவர்க்கு மீளத் தருவது வழக்கம். வருட இறுதியில் தமது வரிக்கணக்குகளை முறையாகப் பதிவு செய்பவர்களுக்கு கிடைக்கக்கூடிய மீள் பணத்தை அது காசோலையாக அனுப்பியோ அல்லது அவரவரது வங்கிக் கணக்குகளில் நேரடி இடுகையின் மூலமோ செலுத்துகிறது. இப்படி அனுப்பப்பட்ட பல காசோலைகள் உரியவர்களுக்குக் கிடைக்காமையாலோ அல்லது அவை காசாக்காப்படாமையாலோ வரித் திணைக்களத்திற்குத் திரும்பி வந்துவிடுகின்றன.

இப்படியான பலரது காசாக்கப்படாத காசோலைகள் பற்றிய விபரங்களை வருமானவரித் திணைக்களம் தனது இணையத்தளத்தில் பதிவேற்றியிருந்ததை நமது ‘நற்குடி மகன்’ தற்செயலாகக் கண்டுபிடித்து தநது ருவிட்டர் மூலம் வெளிப்படுத்திவிட்டார். இச் செய்தி கனடாவின் பிரதான ஊடகமான சி.பி.சி. யில் வஏலிவந்திருக்கிறது.


இவ் விடயம் வெளியே வந்ததும், அதைப்பற்றி மூச்சே விடாத வருமானவரித் திணைக்களம் “பல நூற்றுக்கணக்கான பணம் இப்படி முடங்கிக் கிடக்கிறது. அவை மக்களின் பணம் அவை முறையாக அவர்களிடம் சேர்ப்பிக்கப்படவேண்டுமென தன் பாட்டுக்குக்குத் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறது.

ரொறோண்டோ மேப்பிள் லீஃப்ஸ் ரசிகரான @3rdperiodsuits என்ற ருவீட்டர் கணக்காளர் தான் இவ் விடயத்தை வெளிக்கொணர்ந்தவர். அவரது பெயரில் காசாக்கப்படாத காசோலை இருப்பதை வருமானவரித் திணைக்களத்தின் இணையத்தளத்தில் கண்டு ‘தாம் பெற்ற பலனை இதர கனடியர்களும் பெற்று அனுபவிக்கும்படி’ அறிவித்திருக்கிறார்.


இதைப் பார்த்த பல ருவீட்டர் பாவனையாளர்கள் பின்னர் தமது பெயர்கள் சிலவும் அவ்விணையத்தளத்தில் இருந்தது கண்டு தமது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்கள். ஒருவர் 2006 ஆம் ஆண்டுக்குரிய, தனக்குக் கிடைக்க வேண்டிய $12,000 பெறுமதியான காசோலையை அதில் கண்டதாக ருவீட் செய்திருக்கிறார்.

இது குறித்து கனடிய வருமான வரித் திணைக்களத்தைச் சேர்ந்த எரியேன் பிறாம், “அது கனடியர்களுக்குச் சொந்தமான பணம். வரியிறுப்பாளர்கள் ‘இழந்த’ மீள்பணத்தைத் திருப்பிப் பெறுவதற்காக நாங்கள் இப் புதிய அறிவிப்பை எமது இணையத்தளத்தின் மூலம் “soft launch’ பண்ணினோம்” எனத் தெரிவித்ததாக சி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்திருகிறது.

@3rdperiodsuits இதை அடக்கி வாசிக்கிறார். தனது உண்மையான பெயரைக்கூடச் சொல்லிப் பெருமை தேடிக்கொள்ள அவர் விரும்பவில்லை.

“எல்லோரும் என்னை ஓப்ராவுக்கும், றொபின் ஹூட்டுக்கும் ஒப்பிடுகிறார்கள். நான் இதில் ஒன்றும் செய்யவில்லை. மக்கள் தமக்கு வரவேண்டிய பணத்தைப் பெறுவதற்கு என்னாலான மூறையில் உதவி செய்திருக்கிறேன்” என்கிறார் அவர்.

மக்கள் தமது விலாசங்களை மாற்றியதாலோ, அல்லது காசோலைகளைத் தொலைத்துவிடுவதனாலோ இது நடக்கலாம் என வருமானவரித் திணைக்களம் கூறுகிறது.

Related:  கோவிட்-19 | ஒன்ராறியோ மாகாணத்தின் இயல்புவாழ்வை நோக்கிய முதல் படி

அரசாங்கக் காசோலைகள் ஒருபோதும் காலாவதியாவதில்லை. வருமானவரித் திணைக்களமும் அவற்றை ‘அறவிடாக் காசோலை’ (void) என்று நிராகரிப்பதுமில்லை. மக்கள் கேட்டுக்கொண்டால் திணைக்களம் புதிய காசோலைகளை வழங்குகிறது.


நீங்களும் கனடிய வரியிறுப்பாளராகவிருந்து உங்கள் பெயரில் காசாக்கபடாத காசோலைகள் இருக்கலாமென்ச் சந்தேகித்தால் பின்வரும் நடைமுறையைப் பின்பற்றுங்கள்:

  • வருமானவரித் திணைக்களம் என்ற தொடுப்பை அழுத்தி அதில் காணப்படும் <<log in>> தொடுப்பின் மூலம் log in செய்யுங்கள்.
  • இப்போது நீங்கள் நிற்கும் பக்கத்தின் அடியில் ‘related services section’ என ஒரு பகுதி வலது பக்கத்தில் தென்படும். இப் பகுதியில் உங்களது காசாக்கப்படாத காசோலைகள் உங்களுக்கு வரவேண்டிய தொகையுடன் காணப்படும்
  • அப் பணத்தை மீளப்பெற, அதில் காணப்படும் படிவத்தைத் தரவிறக்கி, கையொப்பமிட்டு, சாட்சியத்தின் கையொப்பத்துடன் வருமானவரித் திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும்.
  • இப் பணம் உங்கள் கைகளுக்கு வந்து சேர 60 நாட்கள் வரை பிடிக்கலம் எனத் திணைக்களம் சொல்கிறது.
Print Friendly, PDF & Email