கனடா | கடும் வெப்பம் காரணமாக 233 பேர் மரணம்

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வெப்பநிலை 47.9 பாகை செல்சியஸ்

வரலாறு காணாத வெப்பநிலை உயர்வு காரணமாக, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், கடந்த வெள்ளி முதல், நான்கு நாட்களில் 233 பேர் மரணமடைந்துள்ளார்கள்.

கனடாவின் மேற்குப் பிரதேச மாகாணங்களான பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அல்பேர்ட்டா ஆகியவற்றில் வெள்ளி (25) முதல் அதீத வெப்பநிலை உயர்வு தொடர்பான காலநிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஞாயிறு, திங்கள் ஆகிய தினங்களில் வெப்பநிலை மிக மோசமான அளவுக்கு உயர்ந்திருந்தது. இதன் காரணமாக பலர் திடீர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன என அம் மாகாண மரண விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இறந்தவர்கள் தொடர்பான தகவல்களை அவர்கள் மிகவும் கவனமாக ஆராய்ந்து வருவதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சராசரி கோடைகால வெப்பநிலை குறைவாக இருப்பதால் அங்குள்ள பல வீடுகள் குளிரூட்டிகளைக் கொண்டிருப்பதில்லை.

இவ்வதீத வெப்பநிலை உயர்வுக்குக் காரணமான வெப்பக் கூடாரம் (heat dome) தற்போது கிழக்கு நோக்கி (அல்பேர்ட்டா, வடமேற்கு பிரதேசம்) நகர்ந்துகொண்டிருக்கிறது என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் லிட்டந் என்ற கிராமத்தில் நேற்று (29) செவ்வாய்க் கிழமை வெப்பநிலை 47.9 பாக செல்சியஸாகக் காணப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.