கனடா: ஏமாற்றம் தரும் பாப்பரசர் ஃபிரான்சிஸ் வருகை – யாருக்கு மன்னிப்பு?
சிவதாசன்
பாப்பரசர் ஃபிரான்சிஸ் ஜூலை 24 அன்று கனடாவுக்கு வந்திருக்கிறார். கனடாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் வரவு இது. வழக்கமான பாப்பரசர்களின் வரவுகளைப் போலல்லாது இவரது வரவு ஒரு விடயத்தில் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. கனடாவை ஐரோப்பியர்கள் ஆக்கிரமித்த காலத்திலிருந்து அங்கு வாழும் சுதேசிய சமூகக்ங்களுக்கு கத்தோலிக்க திருச்சபை இழைத்த கொடுமைகளுக்கு மன்னிப்புக் கேட்க அவர் வந்திருக்கிறார் என்ற பலத்த எதிர்பார்ப்பு கனடியர்களிடம், குறிப்பாக சுதேசிய சமூகங்களிடம் கட்டிவளர்க்கப்பட்டிருந்தது. ஏனைய பாப்பரசர்களைப் போலால்லாது முற்போக்கு எண்ணம் கொண்ட, மனிதாபிமானம் கொண்ட நல்ல மனிதர் என்ற பிம்பம் அவர்மீது கட்டியெழுப்பப்பட்டிருந்தது. அதன் காரணமாகவே இந்த எதிர்பார்ப்பு. மன்னிப்புக் கேட்பதன் மூலம் சுதேசிகளுக்குப் பெருந்தொகையான நட்ட ஈடு கிடைத்துவிடுமென்று பொருளல்ல. கொதித்துக்கொண்டிருக்கும் அவர்களது மனங்களுக்கு அது சற்றே ஆறுதலைத் தரும் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பாது. அவர் வந்து இரண்டு நாட்கள் கழிந்து விட்டன. பெரும்பாலான சுதேசியர்களின் கருத்துப்படி அவர்கள் ஏமாந்து போனார்கள் என்பதே, இதுவரை கிடைத்த முடிவு.
பின்னணி

கனடாவின் முதலாவது குடிகள் என அழைக்கப்படும் சுதேசி மக்களை ‘நாகரீகப் படுத்துதல்’ என்ற போர்வையில் மதமாற்றம் செய்யும் முயற்சியில் கத்தோலிக்க, கிறிஸ்தவ மத ஸ்தாபனங்கள் திட்டமிட்டுச் செயலாற்றின. இந்த ‘நாகரீகப் படுத்துதல்’ என்ற பாசாங்கில் தமது தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் பணிபுரிவதற்காக அவர்களுக்குத் தமது கலாச்சாரத்தைப் புகுத்துவதே அவர்களது நோக்கம். மதத்தின் மூலம் அச்சத்தையும் ஒழுக்கத்தையும் கற்பித்தால் தமக்குத் தேவையான வினைத்திறனுள்ள பணியாளர்களை உருவாக்கிவிடலாம் என்பதே அவர்களது எண்ணம். இந் நடைமுறை ஏற்கெனவே தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசீலந்து, அயர்லாந்து, சுவீடன் போன்ற நாடுகளில் ஏற்கெனவே வெற்றிகரமாகக் கையாளப்பட்ட ஒன்று. பள்ளிக்கூடங்கள் என அழைக்கப்பட்ட இப் பயிற்சி முகாம்களில் விடுதிகளைக் கட்டி அங்கு பலாத்காரமாகக் கைப்பற்றிய சுதேசிகலின் குழந்தைகளைத் தங்க வைத்து ஒழுக்கம் கற்பித்தனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே பாடப் புத்தகம் பைபிள் எனப்படும் விவிலிய நூல். இங்கு பாடம் சொல்லிக் கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் மதகுருமாரும் கன்னியாஸ்திரிகளுமே தான். இப் பள்ளிகளுக்கான செலவை அரசாங்கம் வழங்கி வந்தது.
160 வருடங்களாக நடைபெற்றுவந்த இந்த மார்க்கப் பாடசாலைகளில் சுமார் 150,000 சுதேசிகளின் குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது. உண்மையான தொகை இதைவிடப் பன்மடங்கு அதிகம் எனவும் அவர்களைப் பற்றிய தகவல்கள் திருச்சபையால் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறதென்றும் அதைப் பகிரங்கப்படுத்தினால் திருச்சபைக்கு அவமானமாகப் போய்விடுமென்றும் சுதேசி மக்கள் கருதுகிறார்கள்.
இதில் அநியாயம் என்னவென்றால் கனடாவின் பரந்த கிராமப்புறங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு மத குருமாரின் இறுக்கமான கட்டுப்பாடுகளையும், புதிய பழக்கவழக்கங்களையும் அனுசரித்துப்போக முடியாமல் பல குழந்தைகள் தப்பியோடிக் காடுகளில் மரணமடைந்தும், சிலர் விடுதிகளிலேயே தற்கொலைசெய்துகொண்டும், சிலர் அந்நியமான நோய்த்தொற்றுகளுக்கு உள்ளாகி மரணமடைந்தும் போயினர் என்பதும் இப்படியாக மரணமடைந்த பல குழந்தைகளின் உடல்களை விடுதியின் வளாகங்களிலேயே எதுவித அடையாளங்களையும் கொடுக்காது கத்தோலிக்க நிர்வாகம் புதைத்துவிட்டது எனவும் சுதேசிய மக்கள் குமுறுகிறார்கள். இறந்த உடல்களின் எச்சங்கள் கிடைத்தாலேயே தாம் தமது சடங்குகளைச் செய்து அந்த ஆன்மாக்களைத் திருப்திப்படுத்த முடியும் எனவும் அவர்கள் நம்புகிறார்கள். இந்துக்களைப் போலவே அவர்களும் இயற்கை வழிபாட்டிலும் சடங்குகளிலும் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால் திருச்சபை அத் தகவல்களைத் தருவதற்கு மறுத்துவிட்டது. பாப்பரசர் ஃபிரான்சிஸ் இவ் விடயத்தில் கொஞ்சம் இரக்கம் காட்டியவர் என்பதால் சென்ற வருடம் சில சுதேசிய சமூகத் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் வத்திக்கானுக்குச் சென்று பாப்பரசருக்கு கனடா வருமாறு அழைப்பையும் விடுத்திருந்தார்கள். அதன் பெறுபேறாகவே அவ்ர் இப்போது கனடா வந்திருக்கிறார். அதனால் அவரது வருகையைப் பெரும் ஆர்ப்பாட்டங்களோடு சுதேசிய மக்கள் வரவேற்றார்கள். கனடா முழுவதும் இருக்கும்சுதேசியச் சமூகங்களை ஆங்காங்கே உள்ள பெருநகரங்களில் வைத்து பாப்பரசர் சந்திப்பதாகத் திட்டம் தீட்டப்பட்டது. அதன் பிரகாரம் கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் முதலாவது நிகழ்வு ஜூலை 25 அன்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்திந்தார்கள். ஏறத்தாழ ஒரு சுதேசிய சடங்கு போலவே நடைபெற்ற இந் நிகழ்வில் இதர கத்தோலிக்கர்களின் முழுமையான பங்களிப்பு இருக்கிறதோ தெரியவில்லை. அவர்து வரவிற்காகப் $15 மில்லியன் செலவாகியதெனவும் அதைக் கத்தோலிக்க திருச்சபை தனது பக்தர்களிடமே வசூலிக்கிறதெனவும் பேசப்படுகிறது.
மூத்த குடிகள்
கனடாவில் 10 மாகாணங்களும் 3 பிரதேசங்களும் (territories) இருக்கின்றன. இம் மூன்று பிரதேசங்களும் வட துருவத்தை அண்டிய குளிர் அதிகமான பிரதேசங்கள். இங்கு வாழும் சுதேசிகள் இனுவிட்ச் (inuits) என அழைக்கப்படுகிறார்கள். முன்னர் அவர்கள் எஸ்கிமோவர் என அழைக்கப்பட்டாலும் அது தரக்குறைவாகப் பார்க்கப்படுவதால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கனடாவின் தற்போதைய ஆளுனர் மேரி சைமன் ஒரு இனுவிட் சமூகத்தவர். இவர்களை விடப் பல குலப்பெயர்களுடன் வாழும் சுதேசிகளை ‘முதலாம் தேசத்தவர்” (First Nations People) என அழைக்கிறார்கள். கிரீ, அனிஷ்னாபே, மோஹோக் எனப் பல குலங்கள் தமக்கே உரிய மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பின்பற்றுகிறார்கள். இவர்களில் கிரீ குலத்தவரே சடங்குகளின்போது இறக்கைகளைக் கொண்ட தலைப்பாகையைச் சூடுபவர்கள். இக் குலங்கள் அனைத்தும் சேர்ந்து ஐரோப்பியருடன் போரிட்டு இறுதியில் 13 ஒப்பந்தங்களுடன் உடன்படிக்கை செய்திருந்தார்கள். இந்த ஒவ்வொரு உடன்படிக்கையும் ஒரு பிரதேசத்தை வரையறுக்கும். இவ்வொப்பந்தங்களின் பிரகாரம் சுதேசிய மக்களின் பிரதேச வளங்களைப் பெறுவதற்காக மத்திய அரசு அவர்களுக்கு சில வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும். ‘இந்தியச் சட்டம் ‘ (Indian Act) எனப்படும் இச்சட்டம் முதல் தேசத்துப் பல்குல மக்களுக்கு விசேட அந்தஸ்தை வழங்குகிறது. இதனால் இவர்களை Status Indians எனவும் அழைப்பார்கள். இதற்காக அவர்களுக்கு விசேட அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. இவ்வந்தஸ்துகளுடன் வாழும் மக்கள் தமது பிரதேசங்களைத் தாமே நிர்வகித்துக் கொள்கிறார்கள். இப் பிரதேசங்களை Indian Reserves எனவும் அழைப்பார்கள். மத்திய அரசு இப் பிரதேசங்களுக்கான வீட்டு வசதிகள், நீர்வழங்கல், மின்சாரம் வழங்கல் எனப் பல வசதிகளையும் செய்துகொடுக்கவேண்டும் என்பது இந்தியச் சட்டத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான றிசேர்வ்களில் மூன்றாம் உலக நாடுகளை விட மோசமான நிலையே காணப்படுகிறது. இக் குலத்தவரின் பாரம்பரிய வேட்டையாடும் பழக்கம் அருகிவிட்டதால் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் மதுப் பாவனையும், போதை வஸ்து பாவனையும் விபச்சாரப் பழக்கங்களும் கொண்டவர்களாக மாறிவிட்டார்கள். மத்திய அரசும் இம் மக்களை ஏறத்தாழ உதாசீனம் செய்யப்பட்ட குடிமக்களாகவே பார்க்கிறது.
மேற்குறிப்பிட்ட இரண்டு சுதேசியக் குழுமங்களை விடவும் இன்னுமொரு முலம் தன்னையும் ‘சுதேசியக் குழுமம்’ என வரையறுத்திருக்கிறது. அதற்குப் பெயர் Metis. ஐரோப்பியர்களும் சுதேசிகளும் கலந்து பிறந்தவர்களைக் கொண்டது இக்குலம். இவர்களில் பெரும்பாலானவர்கள் தோற்றத்தில் ஐரோப்பியவர்களைப் போலவே இருப்பார்கள். இவர்கள் ஏனைய கனடியர்களைப் போல தமக்கென்று ஒரு பிரதேசத்தைக் கொண்டிராது பரந்து வாழ்கிறாகள். இஅவர்களை ஒரு தனிகுலமாக கனடிய மத்திய அரசு அங்கீகரிக்காததால் முதல் தேசத்தவர் அனுபவிக்கும் சில வளங்கள் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. இவர்களில் பலரும் தாமும் சுதேசியப் பண்புகளைக் கொண்டவர்கள் எனவும், தமக்கென்று தனி மொழி, பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் உண்டெனவும் கூறி விசேட சலுகைகளைக் கேட்டு மத்திய அரசுடன் போராடி வருகிறார்கள். ஆனால் முதற் தேசத்தவர் இதற்கு மறுப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
நமது ஈழத்தில் போலவே இங்கும் சுதேசிகளின் இளம் சமுதாயம் கல்வியில் முன்னேற்றம் கண்டு தமது மொழி கலாச்சாரத்தைப் பேணவேண்டும் எனவும் தாம் ‘இந்திய சட்டத்தை அங்கீகரிக்கப் போவதில்லை எங்கள் வளம் எங்களுக்குரியது எனப் போராடி வருகிறார்கள். கனடிய மத்திய அரசின் சட்டங்கள் தம்மைக் கட்டுப்படுத்தாது எனக்கூறி மிக நீண்ட காலமாக கனடிய மத்திய அர்சியல் நீரோட்டத்தில் அவர்கள் கலந்துகொள்ள மறுத்து வந்தார்கள். இதுவும் அவர்களது பிரதேசங்கள் முன்னேற்றம் காணாமற் போனதற்குக் காரணம் (அபிவிருத்தி அரசியல்?). ஜஸ்ரின் ட்றூடோவின் லிபரல் அரசு முதல் தடவை ஆட்சியைக் கைப்பற்றியபோது சுமார் 10த்துக்கும் பேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதேசிய மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். இளைய சுதேசிய சமூகத்தின் குரல் இப்போது பல தளங்களிலும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. இருப்பினும் ஒரு பகுதியினர் இன்னும் கடும் தேசிய சுதேசிய விடுதலைக்காகப் போராடி வருகிறார்கள். ட்றூடோ ஆட்சிக் காலத்தில் சுதேசிகளுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்காக அரசாங்க சார்பில் மன்னிப்புக் கோரப்பட்டது. தென்னாபிரிக்க ஆயர் டூட்டூவின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி இங்கும் உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணையம் ஒன்று நிறுவப்பட்டது. அதன் செயற்பாட்டின் காரணமாக சுதேசிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு ஒரு முடிவைக் கட்டிவிடவேண்டுமென இரு தரப்பினரும் முயன்று வருகிறார்கள். இம் முயற்சியின் ஒரு வெளிப்பாடே சில மாதங்களுக்கு முன்னர் சுதேசியத் தலைவர்கள் வத்திக்கான் சென்று பாப்பரசருக்கு அழைப்பு விடுத்தமை.
மார்க்கப் பள்ளிகள்
1870 இலிருந்து மத்திய அரசின் நிதி ஆதரவோடு திருச்சபையினால் நிர்வாகிக்கப்பட்ட மார்க்கப் பள்ளிகளின் தொகை 139 எனக் கனடிய அரச தரவுகள் குறிப்பிடுகின்றன. இப் பள்ளிகளில் எப்படியான போதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதைத் திருச்சபை தனது குறிப்புகளில் வைத்திருக்கிறது. இப் பள்ளிகளின் விடுதிகளில் வாழ்ந்தவர்கள் குருமார்களால் பாலியற் சித்திரவதைக்குட்படுத்தட்டது முதல், கொலை, தற்கொலை, காணாமலாக்கப்படுதல், தப்பியோட்டம் எனப் பலவழிகளினாலும் விடுதி மாணவர்கள் மாயமாகினர். சுதேசிகளின் கணக்கின்படி குறைந்தது 6,000 இருக்கலாம் எனப்படுகிறது. ஆனால் இது பற்றிய முழுமையான தரவுகளும் திருச்சபையிடம் உண்டு. பாப்பரசர் ஃபிரான்ஸிஸ் இக் குற்றங்களுக்காக திருச்சபையின் சார்பில் கனடிய மண்ணில் வைத்துத் தம்மிடம் மன்னிப்புக் கோருவார் என்ற எதிர்பார்ப்பு சுதேசிகளிடம் இருந்தது. ஏப்ரல் மாதம் அவர்கள் வத்திக்கனுக்குச் சென்றபோது அவர்களைத் தனியாகச் சந்தித்த பாப்பரசர் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக மன்னிப்புக் கோரியிருந்தார்.
முதலாம் நாள் நிகழ்வுகள் அல்பேர்ட்டாவில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான முன்னாள் மார்க்கப்பள்ளி மாணவர்கள் கனத்த இதயங்களோடு அவர் மன்னிப்புக் கோருவதைக் கேட்கத் காத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் காதுகளும் மனங்களும் விரும்பியவை அங்கு கிடைக்கப்பெறவில்லை. சுதேசிய மக்கள் அனுபவித்த துன்பங்களுக்காகத் தான் மன்னிப்புக் கேட்பதாக மட்டுமே பாப்பரசர் கூறினார். திருச்சபை குற்றம் இழைத்தது என்றோ அதற்காக அதன் தலைவர் என்ற வகையில் தான் மன்னிப்புக் கோருவதாகவோ அவர் கூறவில்லை. பல சுதேசியத் தலைவர்கள் மத்தியில் இது கடும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. நமது தமிழ்த் தலைவர்களைப் போலவே சில சுதேசியத் தலைவர்களும் “இது ஒரு ஆரம்பம் மட்டுமே” என்ற கணக்கில் தமக்குத் தானே ஆறுதல் கூறிவருகிறார்கள். ஆனால் அவர்களது முகங்களும் கோணித்தான் இருக்கின்றன. முன்னாள் மாணவர்களும் அவர்களது பரம்பரையினரும் மீண்டுமொருதடவை தாம் அனுபவித்த துன்பங்களை மீட்டெடுக்க மட்டுமே பாப்பரசர் உதவி செய்தார். உளவியல் ஆறுதல்களுக்கும் ஆலோசனைகளுக்குமென தொலைக்காட்டி ஒரு தொலைபேசி இலக்கத்தை அடிக்கடி ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. ஆனால் கிடைக்க வேண்டிய, எதிர்பார்த்த ஆறுதல் வார்த்தைகளைப் பாப்பரசர் உதிர்க்கவில்லை.
இரண்டாம் நாள் நிகழ்வு எட்மன்ரனில் ஜூலை 26 அன்று நடைபெற்றது. சுமார் 65,000 மக்கள் கலந்துகொண்டார்கள். முன்வரிசைகளிலிருந்த சுதேசிய முன்னாள் மாணவர்களும், தலைவர்களும் எந்தவித உனர்வுகளையும் வெளிப்படுத்த முடியாத உறைவு நிலையில் இருந்தது தெரிந்தது. இதர கத்தோலிக்கர்கள் வத்திக்கானில் பாப்பரசரின் தரிசனத்ததைப் பெற்ற உற்சாகத்தில் ஒரு திருவிழாவாகக் கொண்டாடினர். இன்றைய நாள் அவர்களுக்கானது போலவே ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
நாளை பாப்பரசர் கியூபெக் போகிறார். கனடாவின் கத்தோலிக்க சமூகத்தின் பெரும்பங்கு கியூபெக் மாகாணத்தில் வாழ்கிறது. எனவே அதுவும் ஒரு பெரிய திருவிழாவாகவே இருக்குமென எதிர்பார்க்கலாம். ஜூலய் 29 அவர் வத்திக்கனுக்குத் திரும்புகிறார்.
பாப்பரசர் ஃபிரான்ஸிஸ் மீது கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல இதர சமூகத்தவர்களும் பெருமதிப்பு வைத்திருக்கிறார்கள். அவர் ஒரு பண்பாளர் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஆனால் திருச்சபை வல்லரசுகளுக்கு இணையான ஒரு எல்லைகளற்ற அரசு. சுதேசிகளிடம் மன்னிப்புக் கோருவதானால் அது தனது அழுக்குத் துணிகளைக் கொடியில் காயவிட்டதற்குச் சமம். ஏறத்தாள 2,000 வருடங்களாக வத்திக்கன் என்ற கோட்டைக்குள் அது எத்தனை விதமான அழுக்குத் துணிகளைப் புதைத்திருக்கும். பாப்பரசர் ஃபிரான்ஸிஸ் காலத்தில் கனடிய சுதேசிகளின் மனங்கள் குளிராவிட்டால் அது ஒருபோதுமே நடக்கப் போவதில்லை எனவே பலரும் கருதுகிறார்கள். இன்னும் சில நாட்கள் இருக்கிறது. எதுவும் நடக்காவிட்டால் திருச்சபையின் விலங்குகளை அவராலும் உடைக்க முடியவில்லை என்பதே அர்த்தம்.