US & Canada

கனடா | எரின் ஓ’ரூல் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகிறார்!


மூன்றாவது சுற்றில் வெற்றி

இன்றிரவு நடைபெற்று முடிந்த கனடா கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப்பதவிக்கான போட்டியில் எரின் ஓ’ரூல், மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.

வாக்குகள் சேகரிப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக முடிவுகள் 6 மணித்தியாலங்கள் தாமதமாகவே அறிவிக்கப்பட்டன. இதில் ஓ’ரூல் 57 வீதம் வாக்குகளையும், பீட்டர் மக்கே 43 வீதமான வாக்குகளையும் பெற்றிருந்தனர். இவர்களிம் பீட்டர் மக்கே முந்நாள் புறோகிறெசிவ் கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வந்தவர். அவரது தலைமையில் அடுத்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி இடதுசாரியத் தன்மை கொண்ட லிபரல் கட்சியைத் தோற்கடிக்குமெனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. எரின் ஓ’ரூல் தீவிர வலதுசாரிய (social conservative) தன்மையைக் கொண்டிருப்பவர் எனக் கருதப்படுபவர்,

இப் போட்டியில் நால்வர் போட்டியிட்டாலும், முதலாவது சுற்றில் டெறெக் சிலோன் ஆதரவு குறைவாக இருந்தமையால் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள, எதிர்பாராத வகையில் கறுப்பினப் பெண்ணான லெஸ்லிந் லூவிஸ் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நிலைக்கு வந்திருந்தார். லெஸ்லின் லூவிஸும், ஒரு வகையில் தீவிர வலதுசாரியக் கொள்கைகளைக் கொண்டவர் என்ற வகையில் அவரது ஆதாரவாளர்களின் வாக்குகள் மூன்றாவது சுற்றில் ஓ’ரூல் பக்கம் சாய்ந்தன. இதனால் ஓ’ரூல் இலகுவாகப் போட்டியில் வெற்றியைத் தேடிக்கொண்டார்.

வெற்றியை அங்கீகரித்துப் பேசியபோது எரின் ஓ’ரூல், “நீங்கள் கறுப்போ, வெள்ளையோ, மண்ணிறமோ, எந்த இனத்தைச் சேர்ந்தவர்களோ, ஒருபாலினத்தவரோ இல்லையோ, சுதேசிகளோ அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னர் கனடிய பிரஜாவுரிமை பெற்றவர்களோ அல்லது மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் பிரஜாவுரிமை பெற்றவர்களோ, நீங்கள் வசதியுடையவர்களோ அல்லது வறுமைப்பட்டவர்களோ, வெள்ளியோ, சனியோ, ஞாயிறோ அல்லது தொழுகையே செய்யாதவர்களோ, எல்லோரும் கனடாவிந் பங்காளிகள். உங்கள் எல்லோருக்கும் கனடிய கன்சர்வேட்டிவ் கட்சி கூரையாகவிருக்கும்” எனத் தெரிவித்தார்.