Uncategorized

கனடா | எதிர்க்கட்சித் தலைவர் அண்ட்ரூ ஷியர் பதவி விலகுகிறார்

பிள்ளைகளின் தனியார் பாடசாலைக்கு கட்சியின் பணத்தைப் பாவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் அன்ட்ரூ ஷியர் எதிர்க் கட்சி மற்றும் கட்சித் தலைமைப் பதவிகளிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்ற பொதுச் சபையில் உறுப்பினர்கள் மத்தியில் அதிரடியாக அவர் இச் செய்தியை வெளியிட்டார். தன் முடிவை இன்று காலை அவர் தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்த பின்னர் பொதுச் சபையில் தனது பதவி விலகல் உரையை நிகழ்த்தினார்.

இவரது திடீர் பதவி விலகலுக்குக் காரணம் இவரது தனது கட்சியின் (கன்சர்வேட்டிவ்) பிரச்சாரத்துக்காக ஒதுக்கப்பட்ட பணத்தைத் தனது பிள்ளைகளின் பிரத்தியேக கல்விச் செலவுக்காகப் பாவித்தார் எனவும் இவ்விடயம் தெரிய வந்ததும் கட்சி உறுப்பினர்கள் இவரைப் பதவியிலிருந்து விலகும்படி வற்புறுத்தியதாகவும் ‘குளோபல் நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

கட்சிப் பணத்தைப் பிள்ளைகளின் கல்விக்காகப் பயன்படுத்தியது பற்றி ஷியர் தனது பேச்சில் குறிப்பிடவில்லை.

கட்சிப் பணத்தை முறையற்றுக் கையாண்டதற்காகத் தான் ஷியர் பதவி விலகுகிறார் என்பதைக், கன்சர்வேட்டிவ் கட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டஸ்ரின் வான் வுட் மறுத்திருக்கிறார்.

” ஒரு தேசியக் கட்சியின் தலைவர் தன் வதிவிடத்தை மாற்றும்போது அதற்கான செலவுகளைக் கட்சி ஏற்றுக்கொள்வது வழக்கம். இது சகல கட்சிகளுக்கும் பொருந்தும். ஷியரின் விடயத்தில் கட்சியின் தலைவராகத் தெரியப்பட்டதும், சஸ்கச்செவன் (றிஜைனா) மாகாணத்திலிருந்து அவரது குடும்பம் ஒட்டாவாவுக்கு இடம்பெயர்ந்திருந்தது. இதனால் அவரது பிள்ளைகளின் பாடசாலைச் செலவுகளில் ஏற்பட்ட வித்தியாசத்தைக் கட்சி கொடுத்திருந்தது” என வான் வுட் கூறுகிறார்.

பொதுத் தேர்தலில் வென்றிருக்கக்கூடிய சாத்தியங்களிருந்தும் கட்சி தோற்றதற்கு அதன் தலைவர் அண்ட்ரூ ஷியர் தான் காரணமெனவும் அதற்காக அவர் பதவி விலக வேண்டுமெனவும் கட்சி அங்கத்தவர்கள் பலர் நாடு தழுவிய அளவில் இயக்கமொன்றைச் சமீபத்தில் ஆரம்பித்திருந்தனர். அப்படியிருந்தும் தான் பதவி விலகப் போவதில்லையென ஷியர் மிகவும் உறுதியாக இருந்தார்.

ஏற்கெனவே கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு வளர்ந்துவரும் வேளையில் கட்சிப் பணத்தைக் கையாடியதாக ஊடகம் செய்தி வெளியிட்டமை அவரின் இறுதி முடிவுக்குக் காரணமாகவிருக்கலாம் எனப் பல ஊடக அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

40 வயதுள்ள அண்ட்ரூ ஷியர் 2004 ம் ஆண்டிலிருந்து றிஜைனா – கெஅப்பெல் தொகுதியின் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதிநிதியாக இருந்து வருகின்றார். மே 2017 இல் அவர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குடும்பத்தை முன்னிலைப்படுத் தன் எதிர்காலத்தைத் தீர்மானித்திருப்பதாகவும், கட்சி தனது அடுத்த தலைவரைத் தெரிவு செய்யும் வரைக்கும் தான் தலைமைப் பதவியில் இருக்கப்போவதாகவும் இன்று அவர் பொதுச் சபையில் தெரிவித்தார்.

லிபரல் கட்சியின் தலைவர் ஜஅஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல தலைவர்களும் தமது இரங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.