US & Canada

கனடா-இந்தியா முறுகல்: சதியில் சிக்குப்பட்டாரா ட்றூடோ?

காளிஸ்தான் பயங்கரவாதி என இந்தியாவால் அடையாளப்படுத்தப்பட்டிருந்த ஹார்டீப் சிங் நிஜார் கொலையின் பின்னால் இந்தியா உள்ளது என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ குற்றம் சாட்டியமை தொடர்பாக இரு நாடுகளிடையேயும் எழுந்த பிரச்சினை இப்போது தூதுவர்களை வெளியேற்றும் அளவுக்குச் சென்றிருக்கிறது. இவ்விடயத்தில் ட்றூடோ பாராளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக அவற்றை அவர் அவசரப்பட்டு வெளியிட்டு விட்டாரோ என்ற ரீதியில் பல வெளிநாட்டு ராஜதந்திரிகள், ஊடகங்கள் பலவும் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர். அதற்கான காரணம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கசிய ஆரம்பித்திருக்கிறது.

நிஜாரின் கொலையின் பின்னால் இந்திய அரசு இருக்கிறது என்ற விடயத்தை கனடிய பிரதமர் ட்றூடோ அவசரப்பட்டு அறிவிக்கவில்லை ஆனால் அவர் நிர்ப்பந்திக்கப்பட்ட அல்லது மிரட்டப்பட்ட நிலையில்தான் அப்படிச் செய்யவேண்டி ஏற்பட்டது எனத் தற்போது வெளிநாட்டு ஊடகங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நெருக்கடிக்குக் காரணம் கனடிய உளவு நிறுவனமான சீஸிஸ் எனக் கூறப்படுகிறது.

சீஸிஸ் எனப்படும் கனடிய உளவு நிறுவனம் பிரதமர் ட்றூடோவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கவேண்டிய நிறுவனமாயினும் கடந்த பல வருடங்களாக அது தன்னிச்சையாக இயங்கிவருகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இதில் பணிபுரியும் சில அதிகாரிகள் கனடிய வலதுசாரி பத்திரிகையான தி குளோப் அண்ட் மெயிலில் இருக்கும் ஊடக நண்பர்கள் சிலர் மூலம் சில செய்திகளைக் கசிய விட்டு வந்தனர் எனக் கூறப்படுகிறது. இச்செய்திகள் பெரும்பாலும் ஆளும் லிபரல் கட்சிக்கு அல்லது பிரதமர் ட்றூடோவுக்கு தொந்தரவு தரக்கூடியதாக அமைந்திருந்தன. அண்மையில் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த மைக்கேல் ச்சொங் என்பவர் மீது சீன அரசு அவதூறுகளைப் பரப்பியது எனவும் லிபரல் கட்சி அங்கத்தவர்கள் பலர் சீனாவின் கைக்கூலிகளாக இயங்குகின்றனர் எனவும் பலவகையான குற்றச்சாட்டுகளை கனடாவின் வலதுசாரிப் பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. இப்படியான தேசிய பாதுகாப்பு விவகாரங்களுடன் தொடர்புடைய விடயங்கள் உளவு நிறுவனங்களுக்கே முதலில் தெரிவதற்கு வாய்ப்புண்டு.

நிஜார் கொலை தொடர்பான பல தகவல்கள் ‘ஐந்து கண்கள்’ எனப்படும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலந்து, பிரித்தானியா என்ற ஆங்கிலோ சாக்ஸன் நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கே முதன் முதலில் தெரிந்திருந்தன எனவும் இவ்வமைப்பின் மூலம் கனடிய உளவு அமைப்பான சீஸிஸுக்கு இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டிருந்தது எனவும் கூறப்படுகிறது. சீஸிஸ் அமைப்பின் சில அதிகாரிகள் ‘தி குளோப் அன்ட் மெயில்’ பத்திரிகைக்கு இத்தகவலை வெளிப்படுத்தியதும் அப்பத்திரிகை டூறூடோவின் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு இவ்விடயத்தைத் தாம் பிரசுரிக்கவுள்ளோம் என எச்சரித்துள்ளது. இதனால் குழப்பமடைந்த பிரதமர் அலுவலகம் இத்தகவலைத் தாம் விசாரித்து பாராளுமன்றத்தில் அறிவிக்க ஒரு வாரம் கால அவகாசம் கோரியிருந்தது. ஆனால் பத்திரிகை அதற்கு மறுத்து ஓரிரு நாட்கள் மட்டுமே தரமுடியுமெனக் கூறியிருந்தது. இதனால் மறுநாளே அவசரம் அவசரமாக ட்றூடோ பாராளுமன்றத்தில் இந்தியா மீதான தனது சந்தேகத்தை வெளியிட்டுவிட்டார். ஆனால் குளோபல் மெயில் பத்திரிகையோ இரண்டு நாட்கள் பொறுத்திராமல் அன்றே அச் செய்தியைப் பிரசுரித்துவிட்டது.

கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடுகிறது என்ற விடயத்திலும் உளவு நிறுவனங்கள் மூலம் கசியும் விடயங்களை வலதுசாரிப் பத்திரிகைகள் வெளியிட அவற்றை கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரும் உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் கேள்விமேல் கேள்விகளாகத் துளைத்தெடுத்திருந்தார்கள். இதற்குத் தனியானதொரு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்ததன் மூலம் டூறூடோ தப்பிக்க முயற்சித்தாலும் பிரச்சினை இன்னும் முடிந்தபாடில்லை. இதனால் ஏமாற்றமடைந்த சீஸிஸ் இப்போது நிஜார் கொலை மூலம் ட்றூடோவைச் சங்கடத்திற்குள்ளாக்கியிருக்கிறது.

நிஜார் கொலையின் பின்னால் இந்தியா இருக்கிறது என்பது பற்றி தனக்கு ‘தகவல்’ தரப்பட்டது என ‘தி குளோப் அன்ட் மெயில்’ பத்திரிகை செய்தியாளர் ஒத்துக்கொண்டிருக்கிறார். இவ்விடயத்தைப் பாராளுமன்றத்தில் பிரதமர் பேசவிருப்பதாகவும் அதுவரை செய்தியைப் பிரசுரிக்க வேண்டாமெனக் கேட்டும் குளோப் அண்ட் மெயில் பத்திரிகையின் வேறு பல செய்தியாளர்கள் மூலம் பிரதமர் அலுவலகம் பகீரதப் பிரயத்தனம் எடுத்திருந்தும் அது வெற்றியளிக்கவில்லை எனத் தெரியவருகிறது.

இக் கொலைக்குப் பின்னால் இந்தியா இருந்திருந்தாலுங்கூட பிரதமர் ட்றூடோ இந்தியாவைக் குற்றஞ்சாட்டுவதற்கு முன்னர் அதற்கான ஆதாரங்களுடன் குற்றச்சாடுகளை முன்வைத்திருக்க வேண்டும் என பெரும்பாலான ராஜதந்திரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜாக் சுலிவன் கூட “ட்றூடோவின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். ஆனால் ஆதாரங்களைத் திரட்டுவதற்கு பிரதமர் ட்றூடோவிற்கு கால அவகாசம் கொடுக்கப்படவில்லை என்பது இதற்குப் பின்னால் ஒரு சதி இருக்கலாமென்பதையே காட்டுகிறது.