• Post category:CANADA / MONEY
  • Post published:October 26, 2020
Spread the love

கோவிட்-19 காரணமாக வேலைகளை இழந்தவர்களுக்கும், வருமானம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கனடிய மத்திய அரசினால் கொடுக்கப்பட்டு வந்த அவசரகால நிதி (Canada Emergency Response Benefit) நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து கனடா மீட்பு நிதி (Canada Recovery Benefit) என்னுமொரு புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அக்டோபர் 12, 2020 முதல் இதற்கான விண்ணப்பங்களைக் கனடிய வருமானவரித் திணைக்களம் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

கனடிய மீட்பு நிதியைப் பெறத் தகுதியுள்ளவர்கள், வாரம் ஒன்றுக்கு $500 வீதம் 26 வாரங்களுக்கு, மொத்தமாக $13,000 டாலர்களை ஒருவர் பெறமுடியும்.

தகுதிகள் என்ன?

கனடா மீட்பு நிதியைப் பெறுபவர்களுக்கு இருக்கவேண்டிய தகமைகளைக் கனடிய வருமானவரித் திணைக்களம் பட்டியலிட்டிருக்கிறது. அவை:

  • வேலையற்றோர் காப்புறுதி (EI) பெறுவதற்குத் தகுதியற்றவர்களாக இருக்க வேண்டும்
  • செல்லுபடியாகக்கூடிய சமூகக் காப்புறுதி இலக்கத்தை (SIN) வைத்திருக்க வேண்டும்
  • கோவிட்-19 காரணமாக வேலை கிடைக்காதவராகவோ அல்லது சுய தொழில் செய்ய முடியாதவராகவோ (self-employed) இருக்க வேண்டும்
  • வேலையில் இருப்பினும், சராசரி கிழமை வருமானம் 50% மாவது குறைவடைந்திருக்க வேண்டும்
  • 2019, 2020 ஆண்டுகளிலோ அல்லது முதலாவது மீட்பு நிதி விண்ணப்பம் செய்வதற்கு 12 மாதங்களுக்கு முன்னதாகவோ குறைந்தது $5,000 வருமானத்தைப் பெற்றிருக்க வேண்டும்
  • குறைந்தது 15 வயதுடையவராகவும், கனடாவில் வதிபவராகவும் இருக்க வேண்டும்
  • வேலையற்றோர் காப்புறுதிப் பணம் (EI), காயமுற்றோர் நட்ட ஈடு (workers’ compensation), குறுங்கால ஊன நிதி (short-term disability benefits), கியூபெக் பெற்றோர் காப்புறுதித் திட்ட நிதி (Quebec Parental Insurance Plan benefits), கனடா மீட்பு சுகவீன நிதி (Canada Recovery Sickness Benefit (CRSB)), கனடா மீட்பு பராமரிப்பு நிதி (Canada Recovery Caregiving Benefit (CRCB)) ஆகியவற்றுக்கு விண்ணப்பித்தவர்களாகவோ அல்லது பெறுபவர்களாகவோ இருக்கக்கூடாது
  • செப்டெம்பர் 27, 2020 இற்குப் பின்னர், சரியான காரணமில்லாமல், வேலையிலிருந்து சுயமாக விலகியவர்களாக இருக்கக்கூடாது
  • கனடா மீட்பு நிதிக்கு விண்ணப்பிக்கும் இரண்டு தவணைக் காலத்தில் வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களாகவும், இயலக்கூடிய வேலை வாய்ப்பை உதாசீனம் செய்யாதவர்களாகவும் இருக்க வேண்டும்


கனடா மீட்பு நிதியை, வருமானவரித் திணைக்களம் இருவாரத் தவணை முறையில் $1,000 டாலர்களை ஒதுக்கி அதில் 10% வரியைக் கழித்து $900 டாலர்களைத் தருகிறது. இரண்டு வாரம் முடிந்தவுடன் வேலை ஏதும் கிடைக்காவிட்டால், விண்ணப்பதாரி மீண்டும் இன் நிதியைக் கோரி விண்ணப்பிக்க வேண்டும். மொத்தமாக இன் நிதி $13,000 த்தை எட்டியதும் (26 வாரங்கள்) கொடுப்பனவு நின்றுவிடும். இத் திட்டம் செப்டம்பர் 27, 2020 முதல் செப்டம்பர் 25, 2021 வரை நடைமுறையிலிருக்கும். ஒரு வாரம் என்பது ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி சனிக்கிழமையில் முடிவடையும். எனவே விண்ணப்பதாரிகள் திங்கட்கிழமை விண்ணப்பித்தால் நேரவிரயமில்லாது கொடுப்பனவைப் பெறமுடியும்.

விண்ணப்பம் செய்வதற்கான இணைப்பு: கனடா மீட்பு நிதி விண்ணப்பம்

Print Friendly, PDF & Email