ColumnsNewsOpinionUS & Canadaமாயமான்

கனடா: அவசரகால நடவடிக்கைகள் சட்டம் (Emergency Measures Act) – விளைவுகள் என்ன?

ஒரு அலசல்: மாயமான்

ஜனவரி 28 கனடிய பாரவண்டி ஓட்டுனர்களால் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வாரங்களாகக் கனடாவின் தலைநகரையும், இதர பிரதான நகரங்கள், அமெரிக்க கடவுத்துறை போன்றவற்றையும் முடக்கிவரும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவென நேற்று (15) கனடிய மத்திய அரசு அவசரகால நடவடிக்கைகள் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியிருக்கிறது.

வரலாறு

போர் நடவடிக்கைகள் சட்டம் (War Measures Act) முன்னர் அழைக்கப்பட்ட சட்டம் இப்போது அவசரகால நடவடிக்கைகள் சட்டம் (Emergency Measures Act) எனப் பெயர்மாற்றம் பெற்றிருக்கிறது. கனடாவின் வரலாற்றில் மூன்று தடவைகள், போர்க்கால நடவடிக்கைகள் சட்டம் என்ற பெயரில், இரண்டு உலகப் போர்களின்போதும், 1970 இல் தற்போதைய பிரதமர் ட்றூடோவின் தந்தையார் பியர் எலியட் ட்றூடோவினாலும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. 1970 இல் கியூபெக் பிரிவினைவாதிகள் பிரித்தானிய ராஜதந்திரி ஒருவரையும், கியூபெக் மாகாணசபை அங்கத்தவர் ஒருவரையும் கடத்தியதைத் தொடர்ந்து இச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்குப் பின் அவசரகால நடவடிக்கைகள் சட்டம் என்ற பெயரில் மகன் ட்றூடோவினால், பாரவண்டி ஓட்டுனர்களால் மேற்கொள்ளப்பட்ட நகர் முடக்கங்களிலிருந்து நாட்டை விடுவிக்க, இப்போது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

சட்டம்

இச் சட்டம் இன்னும் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளான கன்சர்வேட்டிவ் மற்றும் புளக் கியூபெக்குவா ஆகியன இதற்கு எதிராகவும் என்.டி.பி. கட்சி ஆதரவாகவும் வாக்களிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. சட்டத்தின் பிரகடனத்துக்கான அங்கீகாரம் அரசுக்குக் கிடைக்கும் பட்சத்தில் கனடிய மக்களை அது எப்படிப் பாதிக்கும் என இங்கே பார்க்கலாம்.

சுதந்திரப் பேரணி

ஜனவரி 28 இல் ஆரம்பிக்கப்பட்ட இந் நகர் முடக்கப் போராட்டம் ‘சுதந்திரப் பேரணி’ (Freedom Convoy) என்ற சுலோகத்துடன் கனடிய பாரவண்டி ஒட்டுனர்களால் ஆரம்பிக்கப்பட்டதெனினும் இதற்கான ஆதரவும் பணமும் பெரும்பாலும் அமெரிக்காவிலுள்ள தீவிர வலதுசாரி மற்றும் வெள்ளை இனத்துவேசக் குழுக்களாலும் வழங்கப்படுகிறது எனச் சந்தேகிக்கப்படுகிறது. கோவிட்-19 தொடர்பான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தனி மனித சுதந்திரத்தில் தேவையற்ற தலையீடுகளைச் செய்கின்றன என்பது இப்போராட்டத்தின் மையப் பொருளாக இருந்தாலும் இப்போராட்டத்தை வேறு பல குழுக்களும் தமக்கு இயைபாகக் கடத்திச் சென்றதற்கான ஆதாரங்களும் உண்டு.

கோவிட் கட்டுப்பாடு தொடராக அரசாங்கம் எடுதத பல நடவடிக்கைகள் 90% த்துக்கும் மேலான மக்களின் அங்கீகாரத்துடனும், விஞ்ஞானிகள், கல்விமான்கள், பொருளாதார நிபுணர்கள், சுகாதாரப் பணியாளர் ஆகியோரின் ஆலோசனையுடனுமே எடுக்கப்பட்டது. ஆனாலும் இந்நடவடிக்கைகள பலரது இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது என்பதிலும் உண்மை இல்லாமலில்லை. ஆனால் இம் மக்கள், இதர மக்களின் நலன்களுக்காகத் தமது சுதந்திரத்தை விட்டுக்கொடுத்துமிருந்தனர்.

கனடிய வானொலியான சீ.பி.சீ. யில் இதுபற்றிய மக்கள் கருத்து கேட்கப்பட்டபோது பெரும்பாலானோர் இக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தந்த போதிலும் எதிர்த் தரப்பினர் தெரிவித்த முரண்பாடான சில கருத்துக்கள், பொதுப்பரப்பில் இடம்பெற்றுவரும் உரையாடல்களின் வெளிப்பாடாக இருப்பதை அவதானிக்க முடிந்தது. அதில் ஒன்று ‘உலக வணிக நிறுவனங்கள் வேண்டுமென்றே, ஒரு சாதாரண நோயைப் பெரிதுபடுத்தி தமது இலாபங்களை அதிகரிக்க முயல்கின்றன. அரசியல்வாதிகளை அவர்கள் ‘வாங்கிவிட்டதனால்’ அரசாங்கங்கள் இதற்கு உடன்பட்டுப் போகின்றன’. ‘கூட்டுச் சதிக் கோட்பாடு’ (conspiracy theory) எனப் பொதுவாக அழைக்கப்படும் இப்படியான கருத்துருவாக்கங்களைப் பலர் நம்புவதுமுண்டு.

கோவிட் கட்டுப்பாடு விடயத்தில் பாவிக்கப்படும் தடுப்பு மருந்துகள் சில, குறிப்பாக ஃபைசர், மொடேர்னா போன்றவை இலாப நோக்கத்திற்காக மக்களிடம் திணிக்கப்படுகின்றன எனவும் இந்நிறுவனங்களால் இலாபமடைபவர்கள் பெரும்பாலும் யூதர்களாக இருப்பதால் இது அவர்களின் கூட்டுச்சதி என்ற ஒருவகைக் கருத்துருவாக்கத்தை தீவிர வலதுசாரிகள், வெள்ளை இனவாதிகளிடத்தே இலகுவாக விதைக்கக்கூடியதாக இருந்தது. அதே வேளை, செயற்கையான மருந்துகளை உட்கொள்ளக்கூடாது என்ற சித்தாந்தத்தை வரித்துக்கொண்டிருக்கும் குறிப்பிட்ட மதப் பிரிவினர். சிலர் இயற்கையாகவே உடலின் எதிர்ப்புசக்தியில் மட்டும் நம்பிக்கையுள்ளவர்கள், தடுப்பு மருந்துகள் உடலுக்கு ஆரோக்கியமானவை அல்ல என மனப்பூர்வமாக நம்புபவர்கள். இப்படியான மனக்குழப்ப நிலையிலிருக்கும் பலரை அரசியல்வாதிகளும், குழப்பவாதிகளும் ‘சுதந்திரப் போராட்டம்’ என்ற உணர்வு வலைக்குள் சிக்கவைத்து ஒழுங்கு செய்ததே கனடிய நகர் முடக்கப் போராட்டம் என அனுமானிக்கப்படுகிறது.

விளைவுகள்

மூண்று வாரங்களுக்குப் பின்னர் பிரகடனப்படுத்தப்பட்ட இச் சட்டம் தொடர்பாகப் பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. இரண்டு பிரதான எதிர்க்கட்சிகள் மாத்திரமால்லாது அரசாங்கத்துக்கு ஆதரவான சிலரும் இப் பிரகடனத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள். அதாவது, தற்போது இருக்கக்கூடிய பொலிஸ் அதிகாரங்கள் (police powers) இதற்குப் போதும் தானே, விண்ட்சர்-மிச்சிகன் எல்லை முடக்கத்தை விண்ட்சர் பொலிசார் வெற்றிகரமாக முறியடித்தார்கள் தானே. அப்படி ஏன் ஒட்டாவா தலைநகரில் பொலிசார் செய்ய முடியாது என்பது சிலரது வாதம்.

உண்மையில் விண்ட்சர் எல்லை முடக்கத்தை அமெரிக்க இழுவை வண்டிகளைக்கொண்டு பொலிசார் முறியடித்தனர் என்றாலும், அதற்கு முன்னர் அல்பேர்ட்டாவில் துப்பாக்கிகள், ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்ட சில போராட்டக்காரர்களது நடவடிக்கைகளினால் வெறுப்புக்குள்ளாகிய பல அமைதிப் போராட்டக்காரர்கள் தாமாகவே களங்களிலிருந்து விலக ஆரம்பித்திருந்தனர். எப்படி 1970 இல் கியூபெக் ஆயுததாரிகளால் மனிதக் கடத்தல் போர்க்கால நடவடிக்கைகள் சட்டத்தைக் கொண்டுவரச் செய்ததோ அதே போன்று தற்போதய அரசுக்கும் இச்சட்டத்தைக் கொண்டுவர அல்பேர்ட்டா சம்பவம் உதவிசெய்திருக்கலாம்.

அதே வேளை ஒட்டாவா தலைநகரிலும், ரொறோண்டோ நகர மையம், விண்ட்சர் பாலம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற நகர் முடக்க நடவடிக்கைகளின்போது பல பொலிஸ் அதிகாரிகள் போராட்டக்காரருக்கு ஆகாரங்கள், கோப்பி, தேநீர் போன்றவற்றை வழங்கியது, அவர்களது வண்டிகளை பொலிசாரின் ஆதரவுடன் உள்ளே நகர அனுமதித்தது போன்ற நடவடிக்கைகள், இபோராட்டக்காரர்கள் பொலிஸ் திணைக்களம் போன்ற பாதுகாப்பு அமைப்புக்களுள்ளும் ஊடுருவி விட்டதற்கான தடயங்களாகப் பார்க்கப்பட்டன. இதைவிட சில ஓய்வு பெற்ற ஆர்.சீ.எம்.பி. மற்றும் இராணுவ அதிகாரிகளும் போராட்டக்காரர்களுக்கு ஆலோசனை வழங்கிவந்த விடயமும் தெரிய வந்தது. இதன் காரணமாகவே அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப் படுத்தவேண்டி வந்தது எனக் கூறப்படுகிறது.

இச் சட்டப் பிரகடனத்தின் நேரடி விளைவுகளாகப் பின்வருவனவற்றை எதிர்பார்க்கலாம்:

  • இச்சட்டம் நாடுதழுவிய ரீதியிலல்லாது, குறிக்கப்பட்ட பிரதேசங்களில் மட்டும் பிரகடனப்படுத்தப்பட அனுமதியுண்டு
  • இப் பிரகடனத்துக்கு கால வரையறையுண்டு
  • அத்தியாவசிய சேவைகள் எவை என்பதை அரசு தீர்மானிக்க முடியும்
  • சட்டத்தை மீறுபவர்கள் மீது அபராதங்கள் விதிக்கப்படலாம்
  • இப் பிரகடனத்தினால் பொருளாதாரப் பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு அரசு நட்ட ஈடுகள் வழஙகும்
  • இந் நகர்முடக்க செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குபவர்களது வங்கிக் கணக்குகளை, நீதிமன்ற அனுமதி பெறாமலேயே, முடக்குவதற்கு வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் அனுமதியுண்டு
  • பொது நிதிசேர் நிறுவனஙகள் தாம் சேர்க்கும் பணம் மற்றும் அப்பணத்தைப் பெறுபவர் பற்றிய தகவல்களை அரசாங்கத்தின் பணச்சலவைத் தடுப்பு நிறுவனத்துக்கு (Anti Money Laundering Agency (FINTRAC)) அறிவிக்க வேண்டும்.
  • சதேகத்துக்குரிய பண மாற்றஙகளை வங்கிகளும், நிதி நிறுவனஙகளும் அரசுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்
  • தெருக்களில் இருக்கும் சட்டவிரோதமாகத் தரிக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்றுவதற்கு வண்டி இழுவை நிறுவனஙகள் (Towing Companies) தமது சேவைகளை அரசுக்கு வழஙக வேண்டும்

இந் நகர் முடக்கப் போராட்டத்தின் அரசியல் விளைவுகள்

இந் நகர் முடக்கப் போராட்டம் உண்மையான ‘சுதந்திரப் போராட்டத்தில்’ இருந்து நாளடைவில் திசை திருப்பப்பட்டுவிட்டது என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தடவை அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் தீவிர வலதுசாரிகள் அமைப்புகள் இப் போராட்டத்தைப் பாவித்துக்கொண்டன எனப் பரவலாக நம்பப்படுகிறது. கனடாவில் இதன் நேரடி அரசியல் விளைவுகளாகப் பினவருவனவற்றைப் பார்க்கலாம்:

மத்திய கன்சர்வேட்டிவ் கட்சி:

இப் போராட்டத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கட்சி இதுவாகும். பிரதமர் மல்ரோனியின் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு மத்திய கன்சர்வேட்டிவ் கட்சி மேலும் வலது புறமாக நகர்ந்துகொண்டது. பிரதமர் ஹார்ப்பரின் ஆட்சியில் பொருளாதாரத்துக்கு அக்கட்சி கொடுத்த முக்கியத்துவம் பின்னர் வந்த அண்ட்றூ ஷியர் போன்றவர்களால் மதம் சார்ந்த வலதுசாரி நிலைப்பாட்டை எடுக்கத் தள்ளப்பட்டதுடன் ‘சோஷியல் கன்சர்வேட்டிசம்’ என்ற இன்னுமொரு பரிமாணத்திற்கு நகர்த்தப்பட்டது. இதனால் பீற்றர் மக்கே போன்ற மிதவாத கன்சர்வேட்டிவ் அரசியல்வாதிகளை அது புறந்தள்ளிவிட்டது. தற்போது நடைபெற்றுவரும் இப் பாரவண்டி ஓட்டுனர்களின் போராட்டத்துக்குப் பகிரங்க ஆதரவை அளித்ததன் மூலம் அது மிதவாத கன்சர்வேட்டிவ் ஆதரவாளர்களின் ஆதரவை மேலும் இழந்து, ஒதுக்கப்பட்ட கட்சியின் நிலைமைக்கு வந்திருக்கிறது.

என்.டி.பி. கட்சி

மத்திய என்.டி.பி. கட்சி இவ் விடயத்தில் மிகவும் சாதுரியமான (practical) நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டதன் மூலம் தனது வாக்குவங்கியைத் தக்கவைத்திருக்கிறது. பிரதமர் ட்றூடோவின் இந்த அவசரகாலச் சட்டம் மக்களிடையே எதிர்ப்பைச் சம்பாதிக்கும் பட்சத்தில் அரசின் பல ஆதரவாளர்கள் என்.டி.பி. வாக்காளர்களாக மாறுவதற்கும் சாத்தியமுண்டு.

லிபரல் கட்சி

இப் போராட்டம் லிபரல் கட்சிக்கு மேலும் ஆதரவைத் திரட்டித் தந்துள்ளதெனவே பார்க்கலாம். போராட்டக்காரர்களைச் சந்தித்துப் பேசியிருக்க வேண்டுமென கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர்கள் முதலைக்கண்ணீர் வடித்தாலும் அவர்களைச் சந்திக்க மறுத்தமையால் அவரது வாக்கு வங்கி ஊதிப்பெருதிருப்பதாகவே ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ட்றூடோ கொண்டுவந்த இந்த அவசரகாலச் சட்டம் உடனடியான தீர்வுகளைக் கொண்டுவருமெனினும் சில அம்சங்கள், குறிப்பாக பணச்சலவைக்கெதிரான நடவடிக்கைகள் மற்றும் சந்தேகத்துக்குரிய பண மாற்றம் போன்றவை பரவலாக அமுலாக்கப்டும் சாத்தியமுண்டு. இதனால் வீடு மற்றும் முதலீடுகளைச் செய்யவென மேற்கொள்ளப்படும் பல வெளிநாட்டுப் பண மாற்றங்கள் இச்சட்டத்தின் கரங்களில் அகப்படவும் வாய்ப்புண்டு. எனவே நீண்ட காலத்துக்கு இச் சட்டம் பாவனையில் இருக்குமானால் லிபரல் கட்சிக்கான ஆதரவு குறைய வாய்ப்புண்டு. இப்போதைக்கு அவரது தலைமைக்கு ஆபத்துவரச் சாத்தியமில்லை.

ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்

கோவிட் 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பாரவண்டி ஓட்டுனர்களின் போராட்டம் போன்றவற்றில் மிகவும் சாதுரியமாகவும் பொறுப்புணர்வோடும் நடந்துகொண்ட அரசியல் தலைவர்களில் டக் ஃபோர்ட் முன்னிலையில் நிற்கிறார். அவர் ஒரு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் மக்களின் மனநிலையை உணர்ந்து அதன் அடிப்படையில் தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளத் தயங்காதவர் என்ற பெயர் பெற்றிருக்கிறார். ஆட்சியின் ஆரம்பத்தில் சில விக்கல்கள் சிக்கல்களைக் கொண்டுவந்திருந்தாலும் தற்போது அவர் முன்னேற்றம் கண்டிருக்கிறார். ‘சுதந்திரப் போராட்டக்காரர்கள்’ அவரை இன்னுமொரு தடவை ஆட்சியில் ஏற்றியுள்ளார்கள்.