கனடிய மத்திய அரசின், புதுமை, விஞ்ஞானம், தொழில்துறை (Minister of Innovation, Science and Industry) அமைச்சர் நவ்டீப் பெய்ன்ஸ் தான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாகவும், அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை எனவும் அறிவித்ததைத் தொடர்ந்து அமைச்சரவையில் பல மாற்றங்களைக் கொண்டுவர பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ உத்தேசித்து வருவதாக அறியப்படுகிறது.
ஒன்ராறியோ மாகாணத்தின் மிஸ்ஸிசாகா-மால்டன் பாராளுமன்றத் தொகுதியின் பிரதிநிதியாக இருந்துவரும் நீண்டகால உறுப்பினரான பெய்ன்ஸின் திடீர் பதஹ்வி விலகல் அறிவிப்பிற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அமைச்சர் பதவியிலிருந்து விலிகினாலும், அடுத்த தேர்தல் வரை, அவர் தனது தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பார் என அறிவித்துள்ளார்.
தற்போது வெளிவிவகார அமைச்சராகவிருக்கும் ஃபிரான்ஸுவா ஃபிலிப்பி ஷாம்பெயின், பெய்ன்ஸ் இன் இடத்துக்கு நியமிக்கப்படலாமெனவும், போக்குவரத்துத் துறை அமைச்சர் மார்க் கார்ணோ வெளிவிவகார அமைச்சை எடுக்கவுள்ளதாகவும் ஒமார் அல்காப்ரா போக்குவரத்து துறைக்கு நியமிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
இன்று காலை 9:00 மணிக்கு நடைபெறவுள்ள இணையவழிக் கூட்டத்தில் இம்மாற்றங்கள் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாபி பெற்றோர்களுக்குக் கனடாவில் பிறந்த, 43 வயதுடைய நவ்டீப் பெய்ன்ஸ் ஒரு கணக்காளராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர். 2004 முதல் லிபரல் கட்சியில் பாராளுமன்றப் பிரதிநிதியாக இருந்துவரும் அவர் கனடிய தமிழர்களின் நண்பராக அறியப்பட்ட ஒருவர்.