கனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம்

Spread the love
சிவதாசன்

பல மேற்கத்தய நாடுகள் வெளிநாட்டு மாணவர்களின் வரவை ஊக்கப்படுத்த ஆரம்பித்துள்ளன. பிரித்தானியா, கனடா அவற்றில் சில.

கனடாவின் சனத்தொகை குறையாமல் வைத்திருக்க வேண்டுமானால் வருடமொன்றுக்கு 350,000 குடிவரவாளர்களை அனுமதிக்க வேண்டும். பிறப்பு வீதம் குறைவதனாலும், அகதிகள் வரவு குறைந்ததனாலும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து முன்னர் போல் குடிவரவாளர்கள் வருவது ஏறத்தாழ நின்றுபோய் விட்டதாலும் கனடா எப்படியாவது சுமார் மூன்றரை இலட்சம் குடிவரவாளரைக் கொண்டு வந்தேயாக வேண்டும்.

இதனடிப்படையில் கனடிய குடிவரவமைச்சு வெளிநாட்டு மாணவர்கள் மீது கண்வைக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்காக அவர்களின் வரவை இலகுவாக்க சில முயற்சிகளை எடுத்து வருகிறது. அரசியல் காரணங்களுக்காக அவற்றை அரசாங்கம் வெளிப்படையாகச் சொல்ல முடியாவிட்டாலும் தூர நோக்கான பொருளாதாரக் கொள்கைகளைப் புரிந்துகொள்பவர்கள் அரசின் நோக்கங்களையும் அங்கீகரிக்கிறார்கள்.

வெளிநாட்டு மாணவர்களின் வருகையை ஊக்குவிப்பதும் ஒரு வகையில் சிறந்த வியாபாரம் தான். 2018 இல் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி மற்றும் உணவு, உறைவிடங்களுக்காகக் கனடாவில் செலவழித்த பணம் $21.6 பில்லியன். இதில் அரைவாசியைக் கொண்டுவந்தது இந்திய, சீன மாணவர்கள்.

கனடாவின் புதிய ஐந்தாண்டுத் திட்டத்தின்படி, வெளிநாட்டு மாணவர்களின் பல்லினக் கட்டமைப்பை (diversify), அதாவது அவர்கள் எந்த நாடுகளிலிருந்து வருகிறார்கள் என்பதைச் சமநிலைப்படுத்துவதிலும் அம் மாணவர்கள் எந்தெந்தப் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் கல்வி கற்கிறார்கள் என்பதைத் திட்டமிட்டுச் செயலாற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.

இத் திட்டத்தின் பின்னணியில் இரட்டை நோக்கங்களுண்டு. இங்குள்ள பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் வெளிநாட்டு மாணவர்களின் பணத்தில் சுகபோகம் கண்டுவிட்டன. உள்நாட்டு மாணவர்களின் அனுமதிப் பணத்தைவிடப் பல மடங்கு அதிகமாக வெளிநாட்டாரிடம் அறவிடலாம். வெளிநாட்டுப் பணம் வராதபோது இப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அரசின் கைகளைத் தான் எதிர்பார்க்க வேண்டி வரும். எனவே உள்நாட்டு மாணவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கினாலும் வெளிநாட்டு மாணவர்களைக் கொண்டு வருவதால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தலாம் என்பது அரசின் கணிப்பு.

இரண்டாவதாக, வெளிநாட்டு மாணவர்கள் படிப்பு முடிந்ததும் இங்குள்ள தனியார் நிறுவனங்களின் புத்திப் பசிக்கு, பிச்சைச் சம்பளத்துடன் ஆட்களைச் சேர்க்க இலகுவாக அமைந்து விடுகிறது. இதில் இந்திய, சீன மாணவர்களின் திறமையும் பணிவும், குறைந்த சம்பளத்தில் பணிகளைப் புரியத் தயாராகவிருக்கும் தன்மையும் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும் இலாபத்தை ஈட்டிக் கொடுக்கும். வேலயில்லாதவர்களின் விகிதம் 6க் குக் குறைவாகின்றபோது சம்பள உயர்வும் அதன் விளைவாக பண வீக்கமும் அதிகரித்து அரசைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளீ விடும். எனவே அரசுக்கும் இது இலாபம் தரும் விடயம் தான்.

இதை விட இன்னுமொரு விடயம், கனடாவில் அதிகரிக்கும் வயோதிபர். இவர்களைப் பராமரிக்க இவர்களால் முதலீடு செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டங்களில் தேங்கியிருக்கும் பணம் போதாது. 70 வயதுவரை வாழமாட்டார்கள் எனத் திட்டமிட்ட ஓய்வூதியம் இப்போது 95 வயதையும் தாண்டி அவர்கள் வாழும் போது அதுவும் வரி எதுவும் செலுத்தாமல் வாழ்கின்றபோது அது அரசுக்குப் பாரிய பொருளாதாரச் சுமையாகவே (மருத்துவச் செலவு வேறு) இருக்கும். இதை ஈடு செய்ய அரசுக்கு வரி செலுத்தவல்ல மத்தியதரக் குடிமக்கள் தேவை. எனவே குடி வரவு அதிகரிக்கப்பட வேண்டுமென்பது கட்டாயமாகிறது.

லிபரல் அரசின் ஐந்தாண்டுத் திட்ட அறிவிப்பின்படி, வெளிநாட்டு மாணவர்களைப் பல நாடுகளிலிருந்தும் ‘இறக்குமதி’ செய்ய $148 மில்லியன்களை ஒதுக்குகிறது. இம் மாணவர்களைக் கொண்டுவருவதற்கான ‘ஆட் சேர்ப்பு’ முயற்சிகளுக்காக மட்டும் $30 மில்லியன்களை ஒதுக்கியிருக்கிறது.

இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் வருகின்ற மாணவர்கள் கனடாவின் பெரிய நகரங்களான ரொறோண்டோ, கல்கரி, வான்கூவர் போன்ற இடங்களுக்குச் செல்வதால் இதர நகரங்கள் புலம்ப ஆரம்பித்துள்ளன. வீடுகளின் விலைகள், வாடகை இந் நகரங்களில் அதிகரிப்பதனால் அரசுகளுக்கு வேறு வகையான அழுத்தங்களும் வர ஆரம்பித்துள்ளன. இதனால் அரசாங்கம் முறையான திட்டமிடலுடன் இந்த ஐந்தாண்டுத் திட்டத்தை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.

இதன் பிரகாரம் அரசு மாணவர்களை எடுப்பதற்கு வேறெந்த நாடுகளைக் குறிவைத்துள்ளது என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

தொடரும்….
Print Friendly, PDF & Email
>/center>