Technology & Science

கனடாவுக்கு வாருங்கள்! – அமெரிக்க தொழில்நுட்ப பணியாளர்களை அழைக்கின்றன கனடிய நிறுவனங்கள்


ட்றம்ப் நிர்வாகத்தின் விசா மறுப்பினால் அச்சமுற்றிருக்கும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு கனடிய நிறுவனங்கள் அறைகூவல்

ஆகஸ்ட் 13, 2020: அமெரிக்க ஜனாதிபதியினால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான விசா தடையினால் அச்சமுற்றிருக்கும் வெளிநாட்டுத் தொழில்நுட்பப் பணியாளர்களைக் கனடாவுக்கு வருமாறு அழைக்கும் விளம்பரப் பதாகைகள் கலிபோர்ணியாவில் தெருவோரங்களில் எழுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதி பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் அரைவாசிக்கு மேல் வெளிநாடுகளிலிருந்து குடிபெயர்ந்தவர்களாலோ அல்லது அவர்களது பிள்ளைகளினாலோ தான் ஆரம்பிக்கப்பட்டன. அவர்களுக்கு அனுமதி மறுப்பது நாளைய ‘கூகிள்களுக்கு’ அனுமதி மறுப்பதற்குச் சமம்

பேராசிரியர் மைக்கேல் ஹான், வெஸ்டேர்ண் பல்கலைக்கழகம்

ஒன்ராறியோவின் வாட்டர்லூ பிரதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் 100,000 டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டுவரும் இவ் விளம்பரப் பதாகைகள் அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கையைக் கேலி செய்யும் அதே வேளை கனடாவின் தேவைகளையும் நிவர்த்திசெய்யுமென இந்நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

கனடிய தொழில்நுடப நிறுவனங்களின் விளம்பர தேவைகளைப் பார்த்துக்கொள்ளும் கிச்சினரில் உள்ள கொம்யூனிரெக் என்னும் நிறுவனம், $100,000 செலவில், 9 முழு நீள விளம்பரப் பதாகைகளை, கலிபோர்ணியாவில், சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சான்ர கிளாரா போகும் 101 நெடுஞ்சாலையின் முக்கிய புள்ளிகளில் நிறுவியிருக்கிறது.

அவற்றில் காணப்படும் வாசகங்கள் சில: “எனது விசா ரத்துச் செய்யப்பட்டால் என்ன செய்வது?”; “எனது வேலையையும், சுகாதாரக் காப்புறுதியும் இல்லாமற் போனால் என்ன செய்வது?” . கனடிய தேசியக் கொடியின் வெள்ளை-சிவப்புப் பின்னணியில் பொறிக்கப்பட்ட இவ்வாசகங்களின் கீழே கொம்யூனிரெக்கின் இணய முகவரி காணப்படுகிறது.

ஜனாதிபதி டொனால்ட் ட்றம்பினால் சமீபத்தில், அமெரிக்காவில் வேலைசெய்வதற்காக வழங்கப்படும் விசா நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டுத் தொழில்நுட்பப் பணியாளர்கள் பெரும்பாலும் விரும்பும் H-1B விசாவும் இதில் அடங்குகிறது.“அமெரிக்காவிற்கான விசா மறுக்கப்பட்ட பணியாளர்கள் எல்லோரும், உலகம் முழுவதிலுமிருந்து பொறுக்கியெடுக்கப்பட்ட அதி சிறந்த திறமையாளர்கள். நாம் அப் பணியாளர்களுக்குக் கூறுவது, “அங்கு உங்கள் வேலை பறி போனால் அல்லது விசா மறுக்கப்பட்டால், கனடாவை மனதில் கொள்ளுங்கள்” என்பதையே” என கொம்யூனிரெக் முதன்மை நிர்வாகி ஐயென்கிளக்மான் தெரிவித்தார்.

கொம்முனிரெக் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளும் பணியாளர்களுக்கு கனடிய பணி அனுமதி, நாடு தழுவிய ரீதியில் பணிகளுக்கான சந்தர்ப்பங்கள் ஆகியன பற்றிய விபரக் கொத்து அனுப்பி வைக்கப்படுகிறது.

வருடாந்தம் 85,000 பேர்களுக்கு அமெரிக்க H-1B விசா வழங்கப்படுகிறது. குறைந்தது இளமானிப் பட்டத்தை வைத்திருக்கும், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கற்பித்தல், கணக்காள்மை ஆகிய துறைகளில் அதி விசேட தொழில் திறமைகளைக் கொண்டிருப்பவர்களுக்கு இவ் விசா வழங்கப்படுகிறது.

“ஜனாதிபதியின் இந் நடவடிக்கை மிகவும் குறும்பார்வை கொண்டது. பல தொழில்நுட்ப நிறுவனங்கள் இதனால் அதிருப்தியடைந்திருக்கின்றன” என சான் பிரான்சிஸ்கோ குறோணிக்கிள் பத்திரிகையைச் சேர்ந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்காவின் அதி பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் அரைவாசிக்கு மேல் வெளிநாடுகளிலிருந்து குடிபெயர்ந்தவர்களாலோ அல்லது அவர்களது பிள்ளைகளினாலோ தான் ஆரம்பிக்கப்பட்டன. அவர்களுக்கு அனுமதி மறுப்பது நாளைய ‘கூகிள்களுக்கு’ அனுமதி மறுப்பதற்குச் சமம். வேறு நாடுகளுக்கு நகர்வதன் மூலம், இப்படியானவர்கள் உள்ளக அரசியல் கொந்தளிப்புகளுக்கு மிகவும் பலமாக எதிர்வினையாற்றுகிறார்கள். ” என்கிறார் லண்டன், ஒன்ராறியோவிலுள்ள வெஸ்டேர்ண் பல்கலைக்கழகச் சமூகவியற் பேராசிரியர் மைக்கேல் ஹான்.

1997 ஹொங் கொங் கை மாறியதைத் தொடர்ந்து ,1980கள், 1990களின்போது ஹொங் கொங்கிலிருந்து 2,000 குடிவரவாளர்கள் கனடாவுக்குக் குடிபெயர்ந்திருந்தார்கள். அமெரிக்காவின் தற்போதய சூழலும் இப்படியான ஒரு நிலைக்கு இட்டுச் செல்ல வாய்ப்புண்டு என்கிறார் அவர்.

ஜூலை 27 இல் ஆரம்பித்த கொம்யூனிரெக் விளம்பரத்தைத் தொடர்ந்து இதுவரை 75 பேர் விபரக் கொத்துகளுக்காகப் பதிந்திருக்கின்றனர். ஆகஸ்ட் இறுதி வரை இவ் விளம்பரம் ந்டைமுறையிலிருக்கும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது விண்ணப்பிக்க விரும்பினால் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.