• Post category:CANADA
  • Post published:November 8, 2020
Spread the love

கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக, நவம்பர் 21 முதல், கனடாவுக்குள் விமானம் மூலம் பிரவேசிக்கும் பயணிகளுக்கெனப் புதிய விதிமுறைகளைக் கனடிய அரசு அறிவித்திருக்கிறது.

இவ்விதிமுறைகளின்படி, கனடாவுக்கு விமானம் மூலம் வரும் ஒருவர், விமானத்தில் ஏறுவதற்கு முன்னரே இணைய வழையாகச் சில தகவல்களைச் சமர்ப்பித்திருக்க வேண்டும்.

கனடாவுக்கு வரும் விமானப் பயணிகளின் தேவைக்காக, கனடிய அரசு இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ArriveCAN எனும் ஒரு திட்டத்தை அறிவித்திருந்தது. இந்த இணையவழித் தகவல் தளத்தில் எல்லைகளைக் கடக்கும்போது பின்பற்றவேண்டிய விடயங்களைப் பயணிகள் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவிருந்தது.

நவம்பர் 21 முதல், கனடாவுக்கு வரும் விமானப் பயணிகள், விமானத்தில் ஏறுவதற்கு முன்னர், இவ்விணையத் தளத்திற்குச் சென்று பயண மற்றும் தொடர்பாளர் விபரம், சுய தனிமைப்படுத்தலுக்கான திட்டம் (விதி விலக்கு கொடுக்கப்படாதபோது), கோவிட் தொற்று அறிகுறிகள் விபரக்கொத்து ஆகியவற்றுக்கான படிவத்தை நிரப்பியிருக்க வேண்டும். ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்கள் ArriveCAN செயலியை (App) தரவிறக்குவதன் மூலம் கேட்கப்படும் தகவல்களைச் சமர்ப்பிக்க முடியும்.



விமானப் பயணக் கடவையில் பற்றுச் சீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும்

இணையத் தளத்தில் மேற்குறிப்பிட்ட தகவல்களைச் சமர்ப்பிக்கும்போது அதற்கான பற்றுச்சீட்டொன்று வழங்கப்படும். இப் பற்றுச்சீட்டை விமானக் கடவையில் சமர்ப்பிக்கும்போது அதிகாரிகள் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைச் சரிபார்த்து அதன் பின்னரே பயணிக்க அனுமதிப்பார்கள். பற்றுச்சீட்டு இல்லாது கடவைக்கு வருவோருக்கு வாய் மூலம் எச்சரிக்கை அல்லது $1,000 அபராதம் விதிக்கப்படும். இணையத்தளத்தைப் பாவிக்க முடியாதவர்களுக்கும், இணையத் தொடர்பு வசதிகளற்றவர்களுக்கும், உடல் வலுப் பாதிப்புடையவர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்படும்.

நவம்பர் 4, 2020 முதல் விமானப் பயண நிறுவனங்கள் பயணிகளுக்கு இது தொடர்பான தகவல்களை வழங்க ஆரம்பிப்பார்கள்.

தரையாலும், கடலாலும் கனடாவுக்கு வரும் பயணிகள் இப்போதிருந்தே ArriveCAN செயலியைத் தமது போன்களில் தரவிறக்கி வைத்துக்கொள்ளும்படி கனடிய அரசு அறிவுறுத்துகிறது. இச் செயலிகளை, இலவசமாக, google play, iOS, android ஸ்டோர்களிலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

சுய தனிமைப்படுத்தலின்போது தினமும் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்

நவம்பர் 21, 2020 முதல், எந்த முறையினாலும் கனடாவுக்குள் நுழைந்தவர்கள் சுய தனிமைப்படுத்தல் காலத்தின்போது ArriveCAN தளம் மூலமாகவோ அல்லது 1 833 6421-0343 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்வதன் மூலமாகவோ கேட்கப்படும் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். தனிமைப்படுத்தல் செய்யப்படும் இடத்தை அடைந்து 48 மணித்தியாலங்களுக்குள் தாம் அங்கு சென்று சேர்ந்ததுபற்றி உறுதிப்படுத்த வேண்டும்.



சில விதிவிலக்குகள்

கனடாவுக்குள் செல்லாமல் விமான நிலையங்களூடு கடந்து செல்லும் பயணிகள் (transit passengers) இவ் விதிமுறைகளை அனுசரிக்கத் தேவையில்லை. ArriveCAN தளத்தைப் பாவிக்க முடியாதவர்கள் Canada.ca/ArriveCA என்ற இணையத் தளத்தை அணுகுவதலோ அலல்து phac.arrivecan.aspc@canada.ca என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்வதன் மூலமோ மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

ArriveCAN தளத்தைப் பாவிப்பவர்களுக்கென சில விமான நிலையங்கள் விசேட துரித கடவைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

இத் தளத்தின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் வேறெந்தத் தேவைகளுக்காகவும் பாவிக்கப்படவோ அல்லது வேறெவருக்கும் பரிமாறப்படவோ மாட்டாது என்பதைக் கனடிய அரசு உறுதிசெய்கிறது.

Print Friendly, PDF & Email