Spread the love

ரொறோண்டோ ஜூன் 12, 2020: கோவிட்-19 நோய்த் தொற்று உலகத்தின் மொத்த பொருளாதாரத்தையுமே சீர்குலைத்து வைத்திருக்கும் இன் நிலையில், கடந்த வாரம் கனடாவின் அடமானக் காப்புறுதி நிறுவனமான Canada Mortgage and Housing Corporation – CMHC குறைந்த முற்கூறுடன் (down payment) வீடு வாங்குபவர்களுக்கு இருந்து வந்த வரையறைகளை மேலும் இறுக்கமாக்கும் திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் இம் மாற்றங்கள் கனடிய வீட்டுச் சந்தையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவின் பொருளாதாரத்தை இயக்கும் பல்வேறு காரணிகளில் வீட்டுச் சந்தை முக்கியமான ஒன்று. சந்தை சீராக இயங்காதபோது முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை இலாபம் தரும் வேறு துறைகளுக்கு மாற்றி விடுவார்கள். கட்டுமானத்துறையும் அதைச் சார்ந்துள்ள உற்பத்தித் துறைகளும் சரிவடைந்து வேலைவாய்ப்புகள் அருகிப்போகும். இதனால் வீடுகளை வாங்குபவர்களுக்கு மட்டுமல்ல, முதலீட்டாளர்களுக்கும் பரஸ்பர இலாபம் தரும் வகையில் பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. கனடாவில் CMHC போன்ற நிறுவனங்கள் மத்திய அரசுடன் சேர்ந்து உருவாக்கும் வரையறைகள் வீட்டுச் சந்தையை மட்டுமல்ல மொத்த பொருளாதாரத்தின் திசையையே தீர்மானிக்கின்றன.மாற்றங்கள்

  • கடன்பெறும் தகமையைத் தீர்மானிக்கும் விகிதாசாரங்களில் மாற்றம் (TDS /GDS)
  • கடன் பெறுபவரின் நம்பகச் சுட்டெண் (credit score) அதிகரிப்பு
  • முற்கூற்றுப் பணத்தையும் (down payment) கடனாகப் பெற்று கொள்முதலைச் செய்ய முடியாது

TDS /GDS

அடமானம் பெறும் ஒருவரது கடன் பெறும் தகமையைத் தீர்மானிக்க கனடிய நிதி நிறுவனங்கள் சில நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன. இதில் ஒன்று Total Debt Ratio (TDS) / Gross Debt Ratio (GDS). சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒருவரது வருட வருமானத்தின் 35 வீதமான பணத்தை மட்டுமே வீட்டுக் கடன் (principal and interest), ஆதன வரி (property tax) ஆகியவற்றுக்காகச் செலவு செய்யலாம் என்பது தற்போதைய வரைமுறை. உதாரணத்திற்கு உங்கள் குடும்ப மாத வருமானம் $10,000 ஆக இருந்தால் அதில் $6,500 உங்கள் வீடு (கடன் + வரி) தவிர்ந்த இதர செலவுகளுக்குத் தேவை. மீதமாகவுள்ள $3,500 த்தில் தான் கடனையும் வரியையும் நீங்கள் செலுத்த முடியும். இதுதான் உங்கள் மாத அடமானப்பணம் என்பதை வைத்துக்கொண்டு நீங்கள் வாங்கப் போகும் வீட்டு விலையைத் தீர்மானியுங்கள் என்கிறது அரசாங்கம்.

உங்கள் கடன் தகமையைத் தீர்மானிப்பதில் இன்னுமொரு வரைமுறையுமுண்டு. உதாரணத்துக்கு வீடு வாங்குவதற்கு முன்னர் புதிய வாகனமொன்றை வாங்கி விட்டீர்கள். அல்லது குடும்பமாகத் தாய்நாட்டிற்குப் போய் வந்ததால் கடனட்டையில் கணிசமான கடன் ஏறிவிட்டது என வைத்துக்கொள்வோம். உங்களது மேற்குறிப்பிட்ட வருமானத்திலிருந்துதான் இவற்றுக்கான மாதக் கொடுப்பனவுகளையும் செய்ய வேண்டும். இக் கடன்களெல்லாம் உங்கள் credit report இல் நிரற்படுத்தப்படுமாகையால் கடன் நிறுவனம் அவற்றையும் தங்கள் கணிப்பில் சேர்த்துவிடும். இப்போது கடன் வட்டி + முதல் + வரி + வாகனக் கடன் + அட்டைக் கடன் என எல்லாவற்றையும் சேர்த்து மீளச்செலுத்துவதற்கு உங்களின் மாத வருமானம் போதுமா என அன் நிறுவனம் கணித்துப்பார்க்கும். இவ்வரைமுறை TDS எனப்படுகிறது. ஒருவர் அடமானம் பெறுவதற்கு தகமையுள்ளவரா எனத்தீர்மானிக்கும் இம் முக்கிய காரணிகளானவை இந்த TDS, GDS.

Related:  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கனடிய பிரதமர்

ஜூலை 1 முதல் TDS, 44 இலிருந்து 42 ஆகவும், GDS 39 இலிருந்து 35 ஆகவும் குறைக்கப்படுகிறது.

நம்பகச் சுட்டெண் (Credit / Beacon Score)

கடன் பெறும் ஒருவர் தான் பெற்ற கடனைத் திருப்பித்தருமளவுக்கு நம்பிக்கையுள்ளவரா என்பதை அறிய சர்வதேச ரீதியில் பாவிக்கும் ஒரு அளவுகோல் நம்பகச் சுட்டெண் (credit or beacon score) எனப்படுகிறது. அவர் இதுவரை பெற்ற கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துகிறாரா என்பதைக் கிரமமாக அவதானித்து அறிக்கை சம்ர்ப்பிக்கவெனச் சில நிறுவனங்கள் இயங்கிகின்றன. கனடாவில் Equifax, Transunion ஆகியன பிரபலமானவை. அநேகமான நிதி நிறுவனங்கள் இவற்றினால் வழங்கப்படும் அறிக்கைகளை வைத்து ஒருவரது கடன் பெறும் தகமைகளைத் தீர்மானிக்கின்றன.

இவ்வறிக்கையில், ஒருவர் பெற்ற கடன் தொகை, தற்போதுள்ள மீதிக் கடன், மாதக் கட்டுப்பணம், எத்தனை தடவைகள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அவர் தாமதமாகியுள்ளார், அவர் வங்குறோத்துவுக்கு ஆளாகியுள்ளாரா, எத்தனை கடனட்டைகள் வைத்திருக்கிறார் என்பது போன்ற பல தகவல்கள் காணப்படும். இவை எல்லாவற்றையும் கொண்டு அது ஒருவரது நம்பகத் தன்மையைச் சுட்டெண்ணாகத் தருகிறது. ஆகக் குறைந்த சுட்டெண்ணாக 600 இருந்தால் போதும் என CMHC யின் வரைமுறை தற்போது 680 ஆக உயர்த்தப்படுகிறது.முற்கூறு (Down Payment)

வீடுகளை வாங்குபவர்கள் வீட்டின் விலையில் ஒரு சிறு பகுதியைத் தமது சேமிப்பிலிருந்து முற்கூறாகச் செலுத்தி, மீதிப் பணத்தை கடன் தரும் நிறுவனங்களிலிருந்து அடமானமாகப் பெற்று வீட்டைக் கொள்முதல் செய்வது வழக்கம். அனேகமான வங்கிகள் இப் பணம் கடன் பெறுபவரின் சேமிப்பிலிருந்து வாராதபோது, அதையும் வேறு வகைக் கடன்கள் மூலம் பெறலாம் என்றிருந்தது. ஜூலை 1 முதல், கடனாகப் பெற்ற பணத்தை இம் முற்கூற்றுக்காகப் பாவிக்க முடியாது.

பாதிப்பு

இந்நடவடிக்கைகள் CMHC யினால் முன்மொழியப்பட்ட மாற்றங்கள். CMHC ஒரு அடமானக் காப்புறுதி நிறுவனம். 20% த்துக்குக் குறைவாக முற்கூற்றுப் பணத்துடன் வீடு வாங்க விரும்புபவர்களுக்கு காப்புறுதியை வழங்குவதன் மூலம், மீதி பணத்தைத் தரும் வங்கிகளுக்கும் கடன் பெறுபவர்களுக்கும் இடையில் பொறுப்பாக இருப்பதே இதன் வேலை. அதிகமானவர்களை வீடுகளை வாங்க ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதும் அதன் நோக்கம். அதே வேளை, ஒரு பொறுப்பு நிற்பவர் தன் மீது எடுக்கும் கவனத்தையே அதுவும் எடுக்கிறது. CMHC ஒரு அரசாங்கத்தின் அங்கம் என்ற வகையில் நாட்டின் பொருளாதாரம் வீட்டுச் சந்தையால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதிலும் அக்கறையாக உள்ளது.

CMHC யின் இம் மாற்றங்கள் ஒருவரது கடன் பெறும் வல்லமையையக் கடுமையாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால், அடுத்த ஒரு வருடத்தில், வீட்டு விலைகள் 9% முதல் 18% வரை சரியலாம் என அதன் முதன்மை நிர்வாகி எதிர்பார்க்கிறார்.

Related:  ரொறோண்டோ பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சோண்டேர்ஸ் பதவி விலகல் வரவேற்கத்தக்கது

கோவிட்19 இன் பாதிப்பு பல வழிகளிலும் உணரப்படுமென அவர் எதிர்பார்க்கிறார். வீட்டு விலைச் சரிவு, வேலையிழப்பு, வியாபாரங்கள் மூடப்படுதல், குடிவரவில் சரிவு எனப் பல வழிகளிலும் வீட்டுச் சந்தையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிப்பு ஏற்படப்போகிறது.

இப் பாதிப்புகளின் தீவிரத்தைக் குறைக்க அரசாங்கம் எடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகளில் ஒன்றுதான் இது. தமது கடன் தகமைகளை உணராது கடன் சுமைகளை வீணே அதிகரித்துக்கொண்டு போவதால் அது அவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த பொருளாதாரத்தையுபே பாதித்துவிடும். எனவே இப்படியான தடுப்பு முயற்சிகளினால் வரியிறுப்பாளரின் பணம் விரயமாகாது பாதுகாக்கப்படுமென அது நம்புகிறது.

Print Friendly, PDF & Email