IndiaNewsUS & Canada

கனடாவில் தற்கொலையை நாடும் இந்திய மாணவர்கள்!

மாதமொன்றுக்கு குறைந்தது 5 பேர் மரணிக்கிறார்கள்

  • மாதமொன்றுக்கு 5-6 மாணவர்கள் மரணிக்கிறார்கள்
  • மாணவரொருவரின் வருடாந்த கல்லூரிக் கட்டணம் $28,000 டாலர்கள்
  • கனடிய பல்கலைக் கழகங்களின் வருட வருமானம் 7-8 பில்லியன் டாலர்கள்
  • கனடிய அரசாங்கம் இவ் விடயத்தைப் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை

சனத்தொகை, பணியாட்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்காக நீண்டகாலத் திட்டத்தில் கனடிய லிபரல் அரசு தனது வருடாந்த குடிவரவாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததன் பயனாக இந்தியா சீனா போன்ற நாடுகளிலிருந்து பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் கனடாவுக்கு வர முண்டியடிக்கிறார்கள். பணப் பற்றாக்குறையினால் வாடும் பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் இதற்கு ஆதரவாக அழுத்தத்தைப் பிரயோகிப்பதால் கனடிய அரசு இம்மாணவர்களின் வருகையை இலகுவாக்கியிருக்கிறது. இதனால் இந்த வருடம் மட்டும் கனடாவின் குடிவரவுத் திணைக்களம் 156,171 மாணவ அனுமதிப் பத்திரங்களை வழங்கியிருக்கிறது.

ஆனால் இங்கு வரும் மாணவர்கள் எல்லோரும் வசதியான குடும்பங்களிலிருந்து வருபவர்களல்ல. பெரும்பாலோர் கடன்களைப் பெற்று வருவதால் இங்கு வந்ததும் அவர்கள் குறைந்த சம்பளத்தில் பகுதிநேர வேலைகளைச் செய்து தமது கடன்களை தீர்ப்பதற்காக உழைக்கவேண்டியுள்ளது. பரிச்சயமில்லாத இத் தேசத்தில், பணத் தேவையைப் பூர்த்திசெய்ய சிலர் போதை வஸ்து வியாபாரத்திலும், பாலியல் தொழில்களிலும் ஈடுபடவேண்டிய அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என ஒரு பிரபல குடிவரவுச் சட்டத்தரணி மற்றும் சில தர்ம அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கோவிட் பெருந்தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளால், 2020 இல் வெளிநாட்டு மாணவர்களின் உள்வரவு 76,149 ஆக குறைந்திருந்தது எனவும், இந்த வருடம் அது இரட்டிப்பாக ஆகியிருக்கிறது எனவும் குடிவரவு தரவுகள் தெரிவிக்கின்றன. கோவிட் பெருந்தொற்றுக்கு முதல், 2019 இல் 174,687 மாணவர்களை கனடா அனுமதித்திருந்தது. இம்மாணவர்களால் கனடிய கல்வித்துறையிலுள்ள ஸ்தாபனங்களுக்கு வருடமொன்றுக்கு 7 முதல் 8 பில்லியன் டாலர்கள் வரை வருமானமிருக்கிறது. பெரும்பாலான இந்திய மாணவர்கள் ப்ஞ்சாப் மாநிலத்திலிருந்து வருகிறார்கள் எனவும், கனடாவுக்குள் இந்திய மாணவர்களை ‘இறக்குவது’ மிகவும் இலாபமீட்டும் ஒரு வியாபாரமாக மாறிவிட்டது எனவும் கனடிய பத்திரிகையான ‘குளோப் அண்ட் மெயில்’ சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

கனடிய பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் ஒரு கனடிய மாணவரிடமிருந்து வருடமொன்றுக்கு சுமார் $7,000 டாலர்களை அறவிடுகின்றன. ஆனால் வெளிநாட்டு மாணவர்களுக்கு இத் தொகை நான்கு மடங்குகள், அதாவது $28,000 டாலர்கள். இதைவிட வீட்டு வாடகை, உணவு இதர செலவுகள் எனப் பல. இதனால் பிள்ளைகளைக் கனடாவுக்குக் கல்விகற்கவென அனுப்பும் பெற்றோர்கள் பாரிய கடன்களைப் பெறவேண்டியுள்ளது என இந்தியப் பத்திரிகைகள் கூறுகின்றன, இப்படியாகக் கனடாவுக்கு வந்த மாணவர்களில் பலர் மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற வியாதிகளுக்குள்ளாகித் தற்கொலை வரைக்கும் போகிறார்கள்.



பிறம்டன், கனடாவிலிருந்து வெளிவரும் ‘தி பொயிண்டர்’ (The Pointer) என்னும் இணையத்தளத்தின் செய்தியின்படி, ரொறோண்டோ பெரும்பாகத்திலுள்ள ஒரு மரணச் சடங்குகளைச் செய்யும் நிறுவனத்தின்படி மாதமொன்றுக்கு 5 இந்திய மாணவர்களின் சடங்குகளைத் தாம் செய்வதாகக் தெரியவருகிறது.

“இந்தியாவிலுள்ள தரகர்கள் கனடாவில் இந்திய மாணவர்களின் நிலை பற்றி புகழ்ந்து பேசுவதால் மாணவர்கள் இலகுவாக ஈர்க்கப்படுகிறார்கள்” எனக் கனடிய குடிவரவு சட்டத்தரணிகள் சங்கத்தின் ஸ்தாபகரான ரவி ஜெய்ன் கூறுகிறார்.

பெற்றோர்கள் பட்ட கடனை அடைக்க முடியாத மாணவர்கள் போதை வஸ்து பாவனை, பாலியல் தொழில், தற்கொலை எனச் செல்கிறார்கள்.

தனது நிலையத்தில் மட்டும் மாதமொன்றுக்கு 5 அல்லது 6 இந்திய மாணவர்களின் இறுதிச் சடங்குகள் நடைபெறுவதாக லோட்டஸ் மரணச் சடங்கு மற்றும் தகன நிலையத்தின் உரிமையாளரான கமல் பரத்வாஜ் கூறுகிறார். அவர்களின் இறப்புக்கான காரணங்கள் தெரிவிக்கப்டாவிட்டாலும் பெரும்பாலானவை தற்கொலை மற்றும் போதை வஸ்து மீறலுக்கான அடையாளங்களைக் கொண்டிருப்பதாக் அவர் தெரிவித்திருக்கிறார்.

இன்னுமொரு தர்ம ஸ்தாபனம், சுமார் 6 பெண் மாணவர்கள் கர்ப்பமுற்ற நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் தம்மை அணுகியதாகத் தெரிவித்துள்ளது.

இந்திய சமூகத்தைச் சேர்ந்த பல செயற்பாட்டாளர்கள் இம் மாணவர்களுக்கு உளவள மற்றும் ஆலோசனைகளை வழ்ங்கி வருகிறார்கள். விரவில் அவர்கள் கனடிய குடிவரவு அமைச்சரை அணுகி இவ் விடயத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும்படி கேட்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

“இப் பிரச்சினை மிகவும் பரந்த ஒன்றாக உள்ளது. ஆனால் சமூகம் இதுபற்றி அதிக அக்கறை எடுப்பதாகத் தெரியவில்லை. இது ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் அவமானத்தைத் தரும் விடயமாகும். வருமானம் பாதிக்குமென்பதால் அரசாங்கமும் இவ்விடயத்தைப் பகிரங்கப்படுத்த விரும்புவதில்லை” என ரொறோண்டோ சட்டத்தரணி அலுவலகமான கிரீன் அண்ட் ஸ்பீகல் நிறுவனத்தில் பணிபுரியும் சட்டத்தரணியான ஜெய்ன் கூறுகிறார்.