கனடாவில் தமிழ் இளைஞர் கொலை | சந்தேகநபர் கைது!
சரண்ராஜ் சிவகுமார் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளார்
செப்டம்பர் 23, 2019
கடந்த வியாழந் இரவு (செப்டம்பர் 19, 2019),ரொறோண்டோ, மிட்டிள்ஃபீல்ட் / மக்நிக்கல் சந்தியில் 3411 மக்நிக்கல் அவனியூ என்னும் விலாசத்தில் அமைந்துள்ள கட்டிடத்தின் வாகனத் தரிப்பிடத்தில் தமிழ் இளைஞரான சாரங்கன் சந்திரகாந்தன் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
கனடா | ஸ்காபரோவில் துப்பாக்கிச் சூட்டில் தமிழ் இளைஞர் மரணம்
இக் கொலை தொடர்பாக ரொறோன்டோ காவல்துறை விசாரணை நடத்தியதில் ரொறோண்டோவின் புறநகர்ப் பகுதியான ஸ்டோஃப்வில் நகரில் வசிக்கும் இன்னுமொரு தமிழ் இளைஞரான 22 வயதுடைய சரண்ராஜ் சிவகுமார் என்பவர் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வியாழனன்று இரவு 9:48 மணியளவில் 3411 மக்நிக்கல் அவென்யூவிலுள்ள கட்டிடமொன்றில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் 25 வயதுடைய சாரங்கன் சந்திரகாந்தன் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வாகனமொன்றினுள் காணப்பட்டார் எனத் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின்போது இன்னுமொருவர் இச் சம்பவத்தின்போது துப்பாக்கிச் சூட்டினால் கடுமையாகக் காயப்பட்டிருந்தார் என்றும் ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் சரண்ராஜ் சிவகுமார் செப்டம்பர் 22 ம் திகதி கைது செய்யப்பட்டு இரண்டாம் தரக் கொலைக்குற்றம் மற்றும் கொலை முயற்சிக் குற்றம் ஆகியவற்றின் பேரில் வழக்குப் பதியப்பட்டுள்ளார்.
1911 எக்லின்ரன் அவனியூ (கிழக்கு) இலுள்ள நீதிமன்றத்தில் திங்களன்று (செப்டம்பர் 23, 2019) கால 9:00 மணிக்கு நீதிபதி முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பாக ரொறோண்டோ காவல்துறையின் 42வது பிரிவு தொர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டிருப்பதால், இது விடயமாகத் விபரம் தெரிந்தவர்கள் 416-808-7400 என்ற இலக்கத்திலோ அல்லது குற்றத் தடுப்புப் பிரிவுடன் 416-222-TIPS (8477) என்ற இலக்கத்தில் உங்களை அடையாளப்படுத்தாமலேயே (anonymous), தகவல்களை வழங்கிக் கொள்ளலாம். இணையத் தளம் மூலமாகத் தகவல் வழங்க விரும்புபவர்கள் www.222tips.com என்ற தொடுப்பின் மூலம் அல்லது எமது முகநூல் பாக்கத்தின் மூலம் தகவல்களை வழங்கிக் கொள்ளலாம்.
கைத் தொலைபேசியுள்ளவர்கள் குற்றத் தடுப்புப் பிரிவினரின் ‘அப்’ பை ஐ-ரியூண்ஸ், கூகிள் பிளே அல்லது பிளாக்பெரி அப் வேர்ள்ட் ஆகியவற்றிலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலதிகத் தகவல்களுக்கு ரொறோண்டோ காவல்துறைச் செய்திகள் என்ற தொடுப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இவ் வழக்கைக் கையாளும் காவல்துறை அதிகாரிகள்: கான்ஸ்டபிள் டேவிட் ஹொப்கின்சன் (Corporate Communications) / டிட்டெக்டிவ் ஜேசன் சங்கரன் (Homicide)