கனடாவில் தமிழ்க் கலாச்சார மையம் | ஏமாற்றம் தரும் வடிவமைப்பு


சிவதாசன்

கொஞ்ச நாளாக மனதை நெருடும் ஒரு விடயமிது. எப்போவாவது, எங்கேயாவது அழுது கொட்டிவிடவேண்டுமென நினைத்திருந்த ஒரு விடயம். தலைப்பூ, ஆம் தலைப்-பூ உங்களுக்கு விடயத்தைத் தந்திருக்கும். ஆலாபரணம் எதுவுமில்லாமல் நேரடியாக விடயத்துக்கு வருகிறேன்.

ரொறோண்டோ தமிழ்க் கலாச்சார மையம்

விடுதலைப் போர் ஆரம்பித்த நாளிலிருந்து (எப்போ?) தமிழர்களின் கனவில் அடிக்கடி வந்து போகின்ற தமிழ் ஈழம் எப்படி இருக்கவேண்டுமென்ற கனவில் உழன்றவர்களில் நானும் ஒருவன். 1983/84 களில் மொன்றியால் நகரத்தில் Eezham Bank உருவாக்குதல் குறித்துக் கண்ட கனவு இப்போது வருவதில்லை.

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு ஈழம் கனடாவில் தான் எனக் குறிவைத்துப் பலர் உழைப்பது குறித்து சந்தோசம். தமிழ்க் கலாச்சார மையம் அதில் ஒரு முக்கியமான அம்சம் என்பதனால் அது குறித்த பேச்சுக்கள் அங்குமிங்குமாகத் தடம்புரண்டு திரிந்தபோது மனதளவில் கையறுநிலையில் இருந்ததும் உண்மை. கத்தலீன் வின் அரசாங்கத்தின்போது இந்த ‘மையக் கனவு’ மீளவும் வலுப்பெற்றது. அதற்கு முன்னணியில் நீதன் ஷான் இருந்ததும் உண்மை. “எல்லா தமிழ்ப் பிரிவுகளும் ஒன்று சேர்ந்து வந்தால் தமிழ்க் கலாச்சார மையம் நடைமுறைச் சாத்தியமாகும்” என பெரும் சமூக அரசியல்வாதிகள் கூறும்போது அதற்கான சாத்தியம் இருக்கவே முடியாது என்பது உறுதியாகியிருந்தது.

கதலீன் வின் உதிர்த்த அந்த தாரக மந்திரத்தை, அவர் பதவியிறக்கப்பட்டதுடன், நகர பிதா ஜோன் ரோறி கையகப்படுத்தியிருந்தார். ஐந்திணை, மூவேந்தர், கூட்டணி என்று வகைப் படுத்தலும் பின்னர் தொகைப்படுத்தலுமாகத் தமிழரிடையே இருப்பது பிரிவுகளா அல்லது கூட்டணிகளா என்பது எமக்குத் தெரிந்திருந்ததோ இல்லையோ எம்மைக் கையாளும் அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இதனால் நம்பிக்கையிழந்திருந்த ‘மையம்’ மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் சில தெரிந்தவர்களும், தெரியாதவர்களும் இருந்தார்கள். பலரைப் போலவே நானும் இது சாத்தியமாகுமென நினைத்திருக்கவில்லை. இக் கோடையில் (2021) மூன்று நிலை அரசுகளும் இணைந்து அறிவித்த அறிவிப்பு ஓரளவு மகிழ்ச்சியைத் தந்தது. அதற்காக பின்னணியிலும், முன்னணியிலும் நின்று உழைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

சரி, அதற்கு இப்போ என்ன உமது நெருடல் எனக் கேட்கிறீர்கள், இல்லையா? இருக்கிறது.

‘மையத்தின்’ இணையத் தளத்தைப் பார்த்தேன். சீ என்று போய்விட்டது. தமிழ் மரபுவழிக் கட்டடக் கலையை அனுசரித்து இக் கட்டிடம் வடிவமைக்கப்படும் எனவும் சங்கப் பாடல்கள் விபரிக்கும் நிலப்பரப்பை அனுசரித்து மத்திய முற்றத்தைக் கொண்ட நாற்சார் கட்டிடமாக இது அமையுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. At lease அப்படித்தான் நான் புரிந்து கொண்டேன். அதே வேளை கனடாவுக்கு அகதிகளாக வந்த தமிழர்களை நினைவுபடுத்துவதற்காக கப்பல் / ஓடமொன்றைக் கவிழ்த்து வைத்தது போல இக் கட்டிடத்தின் கூரை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வடிவமைப்பில் நிச்சயம் தமிழர்களது பங்களிப்பு இருக்குமென்றே நினைக்கிறன். கனடாவில் எனக்குத் தெரிந்து பட்டயம் பெற்ற மூன்று கட்டிடக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் சங்ககால தமிழர் வாழ்வு பற்றித் தெரிந்திருக்குமென்று நான் கூற வரவில்லை. ஆனால் தமிழ் மரபு என்ன என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

தமிழரைப் பொறுத்தவரை கட்டிடக் கலை என்று வரும்போது திராவிட மரபில் கட்டிய (Travidian Architecture), மாமல்லபுரம், தஞ்சைப் பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆகியனவும், யாழ்ப்பாணத் தமிழரைப் பொறுத்தவரை குறைந்தது யாழ் பொதுசன நூலகம், நல்லூர் கந்தசாமி கோவில் போன்றவையும் ஞாபகத்துக்கு வரும். சரி திராவிடம் என்ற சொல் சிலருக்கு எரிச்சலைக் கொடுக்குமென்றால் ‘தென்னிந்திய கட்டடக் கலை’ என்றே வைத்துக்கொள்வோம். 12ம் நூற்றாண்டில் கம்போடியாவில் சூரியவர்மனால் கட்டப்பட்ட அங்கோ வாட் கோவில்கூட முற்றுமுழுதான தென்னிந்திய கட்டடக் கலையை அனுசரித்துக் கட்டப்பட்டது.

உலகில் வலுப்பெற்றிருந்த இனங்கள் எல்லாம் தாம் செல்லும், வாழும் இடங்களில் தத்தமது கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் கட்டிடங்களைக் கட்டிக்கொள்வது வழக்கம். வீடு கட்டுவதற்கும் பொது மக்கள் கூடும் இடங்களை நிர்மாணிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது கிரேக்கர்கள் / ரோமர்கள் கட்டிய Neo Classical, பிரன்சுக்காரர் கட்டிய Gothic, டச்சுக்காரர் கட்டிய De Stijl (The Style), ஆங்கிலேயரின் Tudor பின்னர் வந்த Islamic என்று உலகம் முழுவதும் இன்றுவரை தமது மரபுவழி அம்சங்களைப் பிரதிபலிக்கும் கட்டிடங்களைக் கட்டி வருகிறார்கள். கனடாவில் தமிழர்கள் ஆரம்ப காலத்தில் ஒன்று கூடிய ஆர்மீனிய சமூக மையம் அமைந்திருக்கும் இடம் அவர்களது கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கும் ஒன்று.

யாழ். பொதுசன நூலகம்


ரொறோண்டோ நகரின் 427 பெருந்தெருவில் அமைந்திருக்கும் சிறீ சுவாமிநாராயன் மந்திர் வடிவமைப்பிலும், நிர்மாணத்திலும் முற்றிலும் இந்திய ஸ்தபதிகள் பணியாற்றியிருந்தார்கள். கனடிய கட்டிட விதிகளுக்கு முரணாக அமைந்த போதிலும் அப்போதைய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அதற்கு விதிவிலக்குப் பெற்றுக் கொடுத்தார். ரொறோண்டோவின் வான்பரப்பை அலங்கரிக்கும் சீ.என்.கோபுரத்தைப் போலவே இக் கோவிலும் இந் நாட்டின் வான்பரப்பை அழகுபடுத்தும் ஒன்று. அத்தோடு எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் இங்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வாழ்ந்தார்கள் என்பதற்கு இக் கோவிலே சாட்சியாக இருக்கும்.

சரி, நமது மையத்துக்கு வருவோம். உருவாகவிருக்கும் இக் கட்டிடத்தின் வடிவமைப்பு எப்படியிருக்கும் எனக் காட்டும் சில படங்களை ‘மையத்தின்’ இணையத்தளத்திலிருந்து உருவி இங்கே தந்திருக்கிறேன். அருகே ஒப்பீட்டுக்கு சில தென்னிந்தியப் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் கட்டிடங்களின் படங்களையும் தந்திருக்கிறேன். நூறு வருடங்களுக்குப் பிறகு இங்கு வாழும் தமிழ்ச் சந்ததிகள் தமது முன்னோர் கப்பல்களில் களவாகத் தப்பியோடி வந்தவர்கள் என்பதை நினைத்துப் பெருமைப்படுவார்களா? அப்படியானால் கனடாவுக்குள் வந்த பெரும்பாலான அகதிகள் விமானத்தில் அல்லவா வந்தார்கள்?

சரி சங்ககால நிலப்பரப்பைப்ப் பிரதிபலிக்கும் கட்டிட அமைப்பு என்பது எதை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை அனைத்தும் இங்கு உருவகப்படுத்தப் படுமா (kind of simulation)? ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் இடம்பெறுமா?

நல்லாட்சி அரசாங்கத்தில் யாழ் மாநகரசபைக் கட்டிடத்தின் முதிய நிர்மாணத்துக்காக பணம் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது மாநகர சபை நகரபிதாவாக இருந்த ஆர்ணோல்ட் உருவாகவிருக்கும் கட்டிடத்தின் வடிமைப்புக்கான படங்கள் (renderings) சிலவற்றை அனுப்பியிருந்தார். அதுகூட பொதுசன நூலகத்தைப் போல தென்னிந்திய கட்டிடக் கலையை அனுசரித்து வரையப்பட்டிருந்தது.

என்னவோ ரொறோண்டோ’மையக்’ கட்டிட வடிவமைப்பு மனதைப் புரட்டியெடுக்கிறது. யாழ்ப்பாணத்தில் மாலையில் அந்திச் சூரியனைத் தலையில் சூடி அழகோடு அமர்ந்திருக்கும் பொதுசன நூலகத்தைப் பார்த்துப் பூரித்த என் கண்களுக்கு, இங்கும் அப்படியானதொரு iconic கட்டிடம் ஒன்றை அமைக்கலாமா என்று கன்வுகண்ட எனக்கு இது பலத்த ஒரு ஏமாற்றம்.

யாழ். பொதுசன நூலகத்தின் வடிவமைப்பைச் செய்தவர் அப்போதைய மதராஸ் அரசாங்கத்தின் கட்டிடக் கலைஞர் கே.எஸ். நரசிம்மன். ஒரு சாதாரண பொதுமகனான கே.எம்.செல்லப்பாவின் ஆர்வக் கோளாறினால் ஆரம்பிக்கப்பட்ட நடமாடும் நூலகம், அருட் தந்தை லோங், பேராசிரியர் எஸ்.ஆர்.ரகுநாதன் போன்றோரின் கடின உழைப்பால் தென்னாசியாவிலேயே அழகையும் அறிவையும் கொட்டித்தந்துகொண்டிருக்கும் அமுதசுரபியாக இருக்கிறது. எந்தத் தீயாலும் அதன் வளையாத கோபுரங்களைப் பொசுக்கிவிட முடியவில்லை. அதுதான் கட்டிடம். அதுதான் ஆயிரம் ஆயிரமாண்டுகளாக நிமிர்ந்து நின்று தமிழர்களின் வரலாற்றைக் கூறும். இனி வரப்போகும் சந்ததிகள் தமது முன்னோரது அர்ப்பணிப்பைப் போற்றிப் புகழ்ந்து பாராட்ட, பெருமைப்பட, தங்கள் தமிழ் வேர்களைத் துறந்துவிடாமல் பிணைத்து நிற்க வழி வகுக்கும்.

Please, ‘மையக் குழுவை’ நான் கெஞ்சிக் கேட்கிறேன், இக் கோரிக்கையைக் கொஞ்சம் செவிமடுங்கள். You still have time…

(இது பற்றிக் கருத்துக்கூற விரும்புபவர்கள், தயவு செய்து, முகப்புப் பக்கத்தில் வலது பக்கத்தில் இருக்கும் கருத்துக்கணிப்பில் ஆம் /இல்லை எனப் பதிவிடுங்கள்)