IndiaNewsUS & Canada

கனடாவில் சுவஸ்திகா சின்னம்தடை செய்வது குறித்து இந்தியா ஆட்சேபம்

சுவஸ்திகா சின்னத்தைத் தடைசெய்ய தனியார் சட்டமூலம்

நாஜிகளுடன் தொடர்புபடுத்தப்படும் சுவஸ்திகா சின்னத்தின் பாவனையைத் தடை செய்யுமாறு கடந்த வாரம் கனடிய புதிய ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீற்றர் ஜூலியன் அவர்களால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனியார் சட்டமூலம் ஒன்று கனடா வாழ் இந்து மதத்தவர்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இச் சட்ட மூலத்துக்கு புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங்கின் ஆதரவௌ கிடைத்திருப்பதும் கனடிய பிரதான கட்சிகளுக்கு மேலும் தலையிடியைக் கொடுத்திருக்கிறது.

“இந்து மதத்தவரின் மிக நீண்டகால மத அடையாளமாகப் பாவிக்கப்பட்டுவரும் இச் சின்னத்தின் மீது தடை விதிக்கப்படுவது ஒரு குறிக்கப்பட்ட மதப் பிரிவினரின் சுதந்திரத்தின் மீதி விதிக்கப்படும் கட்டுப்பாடு” என இந்திய அரசு கனடிய அரசுக்கு தனது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது.

‘ஹாக்குண்குறோட்ஸ்’ (Hakenkreuz ) என அழைக்கப்படும் இச் சின்னம் சுவஸ்திகாவின் ஒரு திரிபு எனவும் இது நாஜிகளின் முக்கியமான ஒரு சின்னமாகப் பாவிக்கப்பட்டது எனவும் இதற்கும் இந்திய சுவஸ்திகாவுக்கும் தொடர்புகள் இல்லையெனவும் கனடா வாழ் இந்துக்களின் ஒருபகுதியினர் தெரிவித்துள்ளனர்.

புதிய ஜனநாயகக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த தனியார் சட்டமூலத்தில், சுவஸ்திகா சின்னங்களைத் தாங்கும் பொருட்கள், ககூ கிளக்ஸ் கிளான் (KKK) ஆடைகள், தொப்பிகள், அமெரிக்க குடியரசுக் கொடி, அக்காலங்கலில் பாவிக்கப்பட்ட ஜேர்மன் மற்றும் குடியரசு இராணுவச் சீருடைகள் ஆகியவற்றின் பாவனை, தயாரிப்பு, விற்பனை ஆகியன முற்றாகத் தடைசெய்யப்படவேண்டுமெனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் நகர்முடக்கங்களின் போது பாரவண்டிப் பேரணியினர் இப்படியான பல சின்னங்களைப் பாவித்திருந்தமையைச் சுட்டிக்காட்டி இத் தனியார் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து கடந்த மாதம் தொடனக்கப்பட்ட கையெழுத்துச் சேர்க்கையை ஆரம்பித்துவைத்துப் பேசும்போது, கனடிய புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் ” சுவஸ்திகாக்களுக்கும் குடியரசுக் கொடிகளுக்கும் (confederate flags) கனடாவில் இடமில்லை. எங்கள் சமூகங்களைப் பாதுகாக்க்கவேண்டிய கடமை எமக்குண்டு. இந்த சின்னங்களைக் கனடாவில் தடைசெய்யும் காலம் வந்துவிட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இதே வேளை இச் சட்டமூலம் தொடர்பாக லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய வம்சாவளியினருமான சந்திரா ஆர்யா கனடிய பிரதமர் ட்றூடோவிடம் தனது ஆட்சேபத்தை தெரிவிக்கவுள்ளதாக அறியப்படுகிறது. சுவாஸ்திகா தடை இந்து, பெளத்த, சமண சமயத்தவரின் மனங்களைப் புண்படுத்தும் செயல் என ரொறோண்டோவைச் சேர்ந்த மனித உரிமகள் செயற்பாட்டாளர் ராகினி சர்மா தெரிவித்துள்ளார்.