கனடாவில் காவல் துறையில் பிராந்திய தலைவராகும் முதல் தமிழர்

கனடாவில்  காவல்துறை தலைவராகும் பெருமை நிஷ் துரையப்பா என்ற இலங்கை வம்சாவளித் தமிழர் ஒருவருக்குக் கிடைத்திருக்கிறது.

பீல் பிராந்தியத்தின் காவல்துறையின் தலைவராக இவர் நியமனம் பெற்றிருக்கிறார். இதற்கு முன்னர் இவர் ஹால்டன் பிராந்தியத்தின் காவல் துறையின் பிரதித் தலைவராகப் பணியாற்றியிருந்தார்.

பீல் பிராந்தியம் பல சிறுபான்மை இனங்கள் வாழும் பகுதியாகும். இதன் தலைவர் பதவி சில மாதங்களாக வெற்றிடமாக இருந்த நிலையில் அதன் காவல்துறை நிர்வாக சபை உகந்த தலைவரைத் தேடிக்கொண்டிருந்தது. தற்போது நிஷ் துரையப்பா இப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். காவல் துறையில் இவர் 25 வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார்.

ஹால்டன் பிராந்தியத்தில் பணிபுரிந்த போது அவரின் சேவையை மெச்சிப் பலரும் சிலாகித்திருந்தார்கள். இதர காவல்துறையினரிடையேயும் பொதுமக்களிடையேயும் அவர் நல்மதிப்பைப் பெற்றிருந்தார்.

பீல் பிராந்தியத்தில் இருக்கும் மிசிசாகா, பிரம்டன் நகரங்களின் நகரபிதாக்களான பொணீ குறொம்பீ மற்றும் பற்றிக் பிரவுண் ஆகியோர் நிஷ் துரையப்பாவை வரவேற்று அறிக்கைகளை விடுத்துள்ளார்கள்.

நிஷ் துரையப்பாவின் பதவியுயர்வு தமிழருக்கும் இப் பிராந்தியத்தில் வாழும் சிறுபான்மையினருக்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.