கனடாவில் இனவெறித் தாக்குதல் – வாகனத்தால் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொலை, ஒருவர் ஆபத்தான நிலையில்!

இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் – பிரதமர் ட்றூடோ

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள லண்டன் நகரில் ஞாயிறன்று (ஜூன் 06) வாகனத்தால் மோதப்பட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் மோசமான காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.

திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் இக் கொலை ஒரு ‘பயங்கரவாத நடவடிக்கை’ எனக் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள லண்டன் நகரில், தெருச் சந்தியொன்றில் தெருவோரமாக நின்றுகொண்டிருந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தினரை, வெள்ளை இநத்தவர் ஒருவர் தனது ‘பிக் அப்’ ட்றக் மூலம் வேண்டுமென்றே மோதியதாகவும் அவர்களில் நால்வர் இறந்துபோக ஒருவர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. “இச் சம்பவம், இனத் துவேஷம் காரணமாக, முற்கூட்டியே திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஒரு காரியம் என்பதில் சந்தேகமில்லை” என லண்டன் பொலிஸைச் சேர்ந்த அதிகாரி போல் ரைட் தெரிவித்துள்ளார்.

கணவர் சல்மான் அஃப்சால் (46), மனைவி, மதியா (44), மகள் யும்னா (15), மகன் ஃபயேஸ் (9), பாட்டி (74)ஆகிய ஐந்துபேர் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களாவர். இவர்களில் மகன் ஃபயேசைத் தவிர மற்றய நால்வரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாட்டி ஸ்தலத்திலேயே மரணமடைந்துவிட்டார். மகன் ஃபயேஸ் உயிராபத்தைத் தாண்டிவிட்டதாகவும் ஆனாலும் மோசமான காயங்களுக்காகச் சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன எனவும் அறிவிக்கப்படுகிறது.

சல்மான் அஃப்சால் ஒரு ஃபிசியோ தெறாபிஸ்ட் (physiotherapist) ஆகப் பணி புரிந்தாரெனவும், உள்ளூர் மசூதி மற்றும் சமூக செயற்பாடுகளிலும், கிரிக்கெட் விளையாட்டுகளை ஒழுங்குசெய்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருபவர் எனவும் கூறப்படுகிறது. மனைவி மதியா வெஸ்ரேர்ண் பல்கலைக் கழகத்தில் சிவில் பொரியியலில் கலாநிதிப் பட்டத்துக்காகப் படித்துக்கொண்டிருந்தார் எனவும் அவர்களது முகநூல் பக்கங்கள் மூலம் அறிய முடிகிறது. சல்மானின் தாயாரான பாட்டியின் பெயர் அறிவிக்கப்படவில்லை. இவர்களது பூர்வீகம் பாகிஸ்தான் என நம்பப்படுகிறது.

கொலையாளி நதானியல் வெட்மான் (Image Credit: FB)

கொலையாளி 20 வயதுடைய நதானியல் வெல்ட்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கருப்பு பிக் அப் ட்றக் ஒன்றுடன் அவர் பின்னர் அருகிலுள்ள மால் வாகனத் தரிப்பிடமொன்றில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார். நான்கு முதலாம் நிலைக் கொலைக் குற்றம் இவர்மீது சுமத்தப்பட்டுள்ளது. கொலையாளி மீதான முந்தைய குற்றங்கள் எதுவும் பதிவில் இல்லை எனவும், அவருக்கு இனத்துவேச குழுக்களுடன் தொடர்புகள் இருக்கிறதா என விசாரிப்பதற்கு மத்திய பொலிஸ் பிரிவுகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர். வெல்ட்மான், கோழிப் பண்ணை ஒன்றில் பகுதிநேரமாகப் பணிபுரிந்து வந்தவர் என அறியப்பட்டுள்ளது.

இந்று (ஜூன் 8) லண்டனில் நடைபெற்ற அனுதாபக் கூட்ட்மொன்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றியிருந்தனர். பிரதமர் ட்றூடோ, எதிர்க்கட்சித் தலைவர் எரின் ஓ’ரூல், என்.டி.பி. கட்சித் தலைவர் ஜக்மீட் சிங், ஒன்ராறியோ மாகாண முதல்வர் ட்க் ஃபோர்ட் ஆகியோர் இக் கூட்டத்தில் கலந்து உரையாற்றினர்.

அனாதையாக்கப்பட்ட சிறுவன் ஃபைசலுக்கு உதவி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட Go-Fund_Me நிதி சேகரிப்பின் மூலம் இதுவரை $350,000 டாலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ளூர் மக்கள் மலர்களைச் சாத்தி அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.