US & Canada

கனடாவில் அனுரகுமார திசநாயக்கா: புதிய ‘டிசைனர்’ மொந்தையில் பழைய கள்

ஏமாற்றம். இவரும் அவர்கள் தான். ஓரளவு எதிர்பார்த்ததுதான் என்றாலும் இவ்வளவு மோசமானவர் என எதிர்பார்க்கவில்லை. அல்லது இவரும் அதே சிங்கள தேசியத்தின் கைதியாக இருக்க வேண்டும்.

மார்ச் 13 கொழும்பிலுள்ள ஜே.வி.பி. அலுவலகத்திற்கு கனடிய தூதுவர் எரிக் வால்ஷ் சென்று (வெற்றிலை வைத்து) அழைத்திருந்ததன் பிரகாரம் நேற்று முன்தினம் (மார்ச் 22) இவர் கனடா வந்திருந்தார். சும்மா சொல்லக்கூடாது சிங்கக்கொடி சமேதம் வரவேற்பு பலமாக இருந்தது. வரவேற்றவர்கள் சிங்களவர்கள் என்பதால் அதை எதிர்பார்க்கத்தான் வேண்டும்.

ஜே.வி.பி. யிற்கு இது மூன்றாவது எழுச்சி. முதலிரண்டிலும்(1971, 1987) அவர்கள் படு தோல்வியடைந்திருந்தார்கள். முதலாவது தடவை ரோஹண விஜேவீர தலைமையில் மார்க்சிசக் கோசங்களுடன் நிராயுத பாணிகளான கிராமத்து இளைஞர்கள் போராடி உயிர்களைக் கொடுத்துப் போராடித் தோற்றுப்போனார்கள். வறுமைக்கெதிரானதென வர்ணிக்கப்பட்ட இப்போராட்டத்தில் பல தமிழர்களும் பங்குபற்றியிருந்தார்கள். ரோஹண விஜேவீர கைதுசெய்யப்பட்டார். அப்போது ‘எங்கட பிள்ளையள்’ என்ற சுலோகம் இவ்விளையோர் மீது நாடுப்புறப் பொதுமக்களின் பரிவைத் தேடித்தந்தது.

1977 இல் ஜே.ஆர்.ஜயவர்த்தனா ரோஹண விஜேவீரவை விடுதலை செய்து ஜனநாயக அரசியலுக்குள் நுழைய அனுமதித்தார். 1982 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட விஜேவீர 4.6% வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் வந்தார்.

1987 இல் றோஹண விஜேவீர தலைமறைவாக இருந்து மீண்டுமொரு கிளர்ச்சிக்குக் காரணாமாகினார். ஆனால் இந்த தடவை வறுமையை விட இலங்கை-இந்திய ஒப்பந்தமே அவர்களது கிளர்ச்சியின் முக்கிய காரணமாக இருந்தது. திருகோணமலையில் விடுதலைப் புலிகளுடன் ஜே.வி.பி. யினரும் இணைந்து இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் போராடினர். 1988 இல் பிரேமதாச ஜே.வி.பி. மீதான தடையை நீக்கி அப்போது நடைபெற்ற உள்ளூராட்சி அரசியலில் போட்டியிடுவதற்கு வழி செய்தார். ஆனால் அத் தேர்தலை விடுதலைப் புலிகளும் ஜே.வி.பி.யினரும் பகிஷ்கரித்திருந்தார்கள். 1989 இல் ரணசிங்க பிரேமதாச தேர்தலில் அமோக வெற்றியடைந்ததும் ஜே.வி.பி. கிளர்ச்சியாளரை ஈவிரக்கமின்றிக் கொன்றொழித்து அக்கிளர்ச்சியை முடித்து வைத்தார். இக்காலத்தில் பிரேமதாச விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி வட இலங்கையில் இந்திய அமைதிப்படையோடு பொருதவிட்டு தனது சிங்களப் படையைத் தென்னிலங்கையில் ஜே.வி.பியை அழிக்கப் பயன்படுத்தியிருந்தார். கிளர்ச்சி முடிவில் 30 அரசியல்வாதிகள், 23 புத்திஜீவிகள், 61 இராணுவத்தினர், 7,000 கிளர்ச்சியாளர் உட்பட சுமார் 60,000 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் 1971 கிளர்ச்சியைவிட இந்த தடவை ஜே.வி.பி. யினர் மிகவும் அருவருக்கத்தக்க அட்டூழியங்களைச் செய்தமையால் ‘எங்கட பிள்ளையள்’ என்ற சுலோகம் அடிபட்டுப் போனது.

2004 ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்கப்படவிருந்த நிவாரண உதவியை (PTOM) மறுத்து அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது ஜே.வி.பி. அக்டோபர் 2006 இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மிக்கிய அம்சங்களிலொன்றான வடக்கு – கிழக்கு இணைப்பைத் துண்டித்தது. 2009 இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 3 இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது ராஜப்கசக்களின் வெற்றியை ஆதரித்து கொண்டாடியது.

இவ்வரலாற்றிலிருந்து ஒன்றுமட்டும் புரிகிறது. ஜே.வி.பி. ஒரு உண்மையான மார்க்சிஸ்ட் கட்சியே அல்ல. அதன் சாயம் எப்போதோ வெளுத்துவிட்டது. ஆனாலும் சமீப காலங்களில் அதற்கான ஆதரவு அதிகரித்து வருகிறதென்றால் அது ராஜபக்சக்களின் சிங்கள தேசிய நிலப்பரப்பை ஆகிரமித்து வருவதனாலேயே சாத்தியமாகிறது.

இப்பின்னணியில் கடந்த சில மாதங்களாக ஜே.வி.பி. யின் தலைவர் (என்.பி.பி. என்பது வெறும் கவசம்) அனுரகுமார திசநாயக்கா (அ.கு.தி.) மேற்கு நாடுகளின் அழைப்பின் பேரில் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். முதலில் சீனாவுக்கும், பின்னர் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா என்று இப்போது கனடாவுக்கு வந்திருக்கிறார். எல்லா நாடுகளிலும் சிவப்புக் கம்பள வரவேற்பு (almost). காரணம் இரண்டு: தேர்தலில் ஜே.வி.பி. வென்றால் அவர்கள் சீனாவுடன் நெருக்கமாகிவிடுவதைத் தவிர்ப்பது என்பது Plan B; சிங்களத் தேசிய வாக்குகளைப் பிரித்து ரணிலை வெற்றிகொள்ள வைப்பது Plan A.

இதை ஜே.வி.பி. யும் நன்றாக அறிந்தே செயற்படுகிறது. சீனா அவர்களது மானசீக குரு. இலங்கைக்கு அடுத்ததாக அவுஸ்திரேலியாவில் தான் சிங்கள மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். அடுத்தது அமெரிக்கா அதற்கடுத்தது கனடா. எனவே அனுரகுமாரவின் பயணம் வாக்குச் சேகரிப்பிறகாக அல்ல. மாறாகத் தேர்தலுக்கான பணச்சேகரிப்பு மட்டுமே. இலங்கைத் தேசியப் பத்திரிகைகளில் ‘புலம்பெயர் தமிழ் உறவுகளைச் ‘சந்திக்க AKD பயணம் என்பதெல்லாம் தூதுவர்களுக்கான தூபம்.

23 ம் திகதி ரொறோண்டோவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பும் 24ம் திகதி வான்கூவரில் நடைபெற்ற சந்திப்பும் ஜே.வி.பி.யினருக்கு மிகவும் காத்திரமான வெற்றி. ரொறோண்டோவில் சுமார் 20,000 சிங்கள மக்கள் வாழ்கிறார்கள் என அண்ணளவாக மதித்தாலும் ஏறத்தாழ 10% மக்கள் போயிருக்கிறார்கள். சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டம். பனர், கொடி, பதாகைகள், முட்டையெறி வீரர்களைக் காணவில்லை. 350,000 பலமுள்ள தமிழர்களால் இப்படியொரு சந்திப்பை நிகழ்த்த இன்னும் 3,000 வருடங்கள் பிடிக்கலாம்.

கூட்டத்தில் ஒரு புத்த பிக்கு வந்திருந்தார். அ.கு.தி. அவரிடம் ஆசிபெற்றுத் தனது அமார்க்சீயத்தை வெளிப்படுத்திக்கொண்டு காரியங்களைத் தொடங்கினார். அவருக்கு மொழிப்பிர்ச்சினை ஜாஸ்தியாக இருக்கவேண்டும். அல்லது தனது பலவீனத்தை வெளிப்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கவேண்டும். அவர் டிசைனர் ஆடைகளே அணியும் ஒரு மார்க்ஸிஸ்ட் என்பதையும் இங்கு ஞாபகப்படுத்த வேண்டும். மஹிந்த ராஜபக்சவாவது யாழ்ப்பாணத்தில் தமிழில் பேசினார். அ.கு.தி. வாயைத் திறந்தால் சிங்களம் மட்டுமே என முடிவெடுத்திருக்கலாம். “ஒருக்காலெண்டாலும் வணக்கம் சொல்லிப் பாத்திருக்கலாம்” என்று கூட்டத்தில் மிகவும் உற்சாகமாகக் கலந்து கொண்ட தமிழ் ஆதரவாளர் ஒருவர் சலித்துக் கொண்டார். மொத்தம் 100 – 150 தமிழர்கள் கூட்டத்தில் கலந்திருக்கலாம் என்ற ஊகம். அவர்களது காதுகளில் கொழுவிக்கொள்ள மொழிமாற்றிக் கருவிகள் வழங்கப்பட்டன. மொழி மாற்றம் இலங்கையிலிருந்து ஒருவரால் செய்யப்பட்டது எனச் சிலரும் அது AI யின் சாகசம் எனச் சிலரும் பொருதிக்கொண்டார்கள். இடைக்கிடை மக்கர் பண்ணினாலும் கருவி வேலை செய்தது. 24ம் திகதி வான்கூவரில் நடைபெற்ற கூட்டம் ரொறோண்டோவை விடப் பிரமாண்டமாக இருந்தது. இப்படியான வகையில் ஒழுங்குகள் செய்யப்படுவதற்கு ஏதோ ஒரு நாடு தான் பின்னாலிருக்க வேண்டும்.

அ.கு.தி. / ஜே.வி.பி. க்கு ஆதரவாகச் சில தமிழர்கள் துள்ளிக்குதிக்கிறார்கள். எனக்கு அந்தளவுக்கு ஆர்வமில்லை. 2019 இல் கோதாபய பாவித்த அதே தந்திரத்தையே ஜே.வி.பி. பாவிக்கிறது. ‘சிங்கள மக்களின் வாக்குகள் மட்டும் எமக்குப் போதும்’ என்பதே ஜே.வி.பி. யின் மனநிலையும் என்று கருதவேண்டியிருக்கிறது. கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் அ.கு.தி. ‘தமிழ் மக்களைச்’ சந்தித்தார். அதில் அவர் சொன்ன இரண்டு விடயங்கள் முக்கியமானவை. “13 ஆவது திருத்தத்தையோ அல்லது சமஷ்டி ஆட்சியையோ நாங்கள் தருவோமென்று ஒருபோதும் வாக்களிக்க மாட்டோம்” அழகாகவும், மிகுந்த கவனத்துடனும் செதுக்கப்பட்ட வார்த்தைகள். இவ்வார்த்தைகளைக் கேட்டதும் தென்னிலங்கையில் ஜே.வி.பி. ஆதரவு மேலும் சில புள்ளிகளால் உயர்ந்து விட்டது என நண்பர் ஒருவர் சொன்னார். அதுதான் நோக்கம். அ.கு.தி இந்தியாவுக்குச் சென்றபோது தமிழ்நாட்டைத் தவிர்த்தமையின் பின்னால் ஏதோ மர்மம் இருக்கிறது எனச் சந்தேகித்தேன். இப்போது புரிகிறது. 2019 இல் கோதாபய சொன்னதையே இவர் மறைமுகமாகச் சொல்கிறார். “எனக்குத் தமிழரது வாக்குகள் தேவையில்லை”. இது ரோஹண விஜேவீரவின் ஜே.வி.பி. இல்லை; AI யுகத்தில் அ.கு.தி. யின் புதிய ஜே.வி.பி. புதிய டிசைனர் மொந்தையில், புளித்துப்போன சிங்கள தேசிய பழைய கள்.

அ.கு.தி. கனடாவில் தமிழர்களைத் தனியாகவோ அல்லது அமைப்பு ரீதியிலோ சந்தித்ததாக நான் கேள்விப்படவில்லை. அதை அவர் விரும்பவில்லை என அமெரிக்க அமைப்பாளர் ஒருவர் மூலம் அறிய முடிந்தது. ஆனால் ரொறோண்டோவில் இலங்கை முஸ்லிம் அமைப்பொன்றை அவர் பிரத்தியேகமாகச் சந்தித்திருந்தார் எனத் தெரிகிறது. தமிழர்களைச் சந்திப்பதை அவர் சாதுரியமாகத் தவிர்ப்பதன் மூலம் அச்செய்தியைத் தென்னிலங்கையில் பிரசித்தமடித்துச் சொல்ல விரும்புகிறார் போல் தெரிகிறது. அவரது பேச்சில் சீனா பற்றி ஒரு சொல்லும் உதிர்க்கப்படவில்லை. இந்தியாவைச் சாடை மாடையாகக் கடித்தார் என்று சிலர் கூறினார்கள்.

என்னவோ அ.கு..தி மீது எனக்கிருந்த மரியாதை போய்விட்டது. அவர் ஜனாதிபதியாக வந்தால் தமிழர் நிலைமை மிகவும் மோசமடைவதற்கு சாத்தியமிருகிறது. அரசியல் சாசனத்தை மாற்ற அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மடங்கு வாக்குகள் வேண்டும். அ.கு.தி. கோதாபய போல் 6.9 மில்லியன் சிங்கள வாக்குகள் கிடைத்தால் உடனடியாக பாராளுமன்ற தேர்தலை நடத்தி அலையோடு அலையாக மூன்றில் இரண்டு மடங்கு பலத்துடன் பாராளுமன்றத்தையும் வசப்படுத்த முனையலாம்.

இப்போ தமிழர் முன்னிருக்கும் கேள்வி ரணிலா, அ.கு.தி.யா? அ.கு.தி. யின் ரொறோண்டோ வருகைக்குப்பின் நான் ரணில் பக்கம். இனப்பிரச்சினைக்கான, தமிழருக்கு ஏற்புடைய தீர்வொன்றை முன்வைத்து அவர் தேர்தலில் போட்டியிட்டால் அந்த துணிச்சலுக்காக அவர் பக்கம் சாயலாம். அதற்கான சமிக்ஞை எதுவும் இதுவரை இல்லை. பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *