ColumnsEconomyUS & Canada

கனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு…

வளரும் வடக்கு – 01

ஜெகன் அருளையா


ஜெகன் அருளையா

ஜெகன் அருளையா இலங்கையில் பிறந்து, தனது இரண்டாவது வயதிலேயே பிரித்தானியாவுக்குத் குடும்பத்துடன் புலம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்த அவர் 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர். இரண்டு தசாப்தங்களாக தகவற்தொழில்நுட்பத்திலும், அதில் பாதிக் காலம் பிரித்தானிய நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரிக்கும் பணியில், கொழும்பிலும், கூர்கவோன் (இந்தியா) விலும் தங்கியிருந்தார். 2015 இல் அவர் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்து அங்கு சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். லங்கா பிசினஸ் ஒன்லைன் இணையத்திற்கு ஆங்கிலத்தில் எழுதிய இக் கட்டுரை அவரின் அனுமதி பெற்று ‘மறுமொழி’ இணைய சஞ்சிகையில் தமிழில் பிரசுரமாகிறது. மொழி மாற்றத்தில், மொழி பிசகினாலும் கருத்துப் பிசகு நேராமல் இருக்கவேண்டுமென முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. சுகந்தனைப் போலவே ஜெகனும் தன் வசதியான, பழக்கப்பட்ட உலகத்தை உதறித் தள்ளிவிட்டு எங்கள் குருதி தோய்ந்த மண்ணை வியர்வையால் கழுவ முன்வந்திருக்கிறார்கள். நீண்ட கட்டுரைதான். முழுமையாக வாசிப்பதுகூட ஒரு வகையில் இவர்கள் போன்றவர்களின் ஆத்ம பலத்துக்கு மேலும் உரம் சேர்க்கும். உங்கள் கருத்து வரவேற்கப்படுகிறது. -சிவதாசன்


வடக்கில் முதலீடு என்று வரும்போது, செயலைவிடப் பேச்சுத்தான் அதிகமாகவிருக்கிறது. ஆனால் சுகந்தன் சண்முகநாதனின் செயல் வித்தியாசமானது.

ஒரு பாடசாலைப் பதின்ம வயதினனாக, 25 வருடங்களுக்குமுன் சிறீலங்காவின் போர்ச்சூழலிலிருந்து தப்பியோடிய சுகந்தன் 2014ம் ஆண்டு தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் கனடாவிலிருந்து தன் மண்ணுக்குக்கு மீண்டு வந்த செயல் மிகவும் வித்தியாசமானது.

பல தொழில்களை ஆரம்பித்தும், பலவற்றை மீட்டெடுத்தும் சாதனைகள் புரிந்துவருகிறார் சுகந்தன். நட்பற்ற சூழலில் கடினமான பாடங்களைக் கற்றுத் தேர்ந்து உள்ளார்ந்த வளங்களின் துணையுடன் தன் இருப்பை நிலைநாட்டிக்கொண்ட ஒரு தொழில் நிபுணரின் கதை இது.

ஆரம்பம்
சுகந்தன் சண்முகனாதன்

1973 இல், ஒரு வசதியான யாழ்ப்பாணக் குடும்பத்தில் பிறந்தவர் சுகந்தன். 1983 இல் தந்தையார் இயற்கை மரணமடையத் தாயாரின் பொறுப்பில் ஒரு தம்பியுடனும் இரு தங்கைகளுடனும் வசதிகள் குறைவேதுமின்றி வாழ்ந்தவர். போர் எல்லாவற்றையும் குழப்பியடித்தது. போர் ஏற்கெனவே தூக்கி எறிந்த மாமாவின் உதவியுடன் 1989 இல், தனது 16 வயதில், கனடா சென்றார்.

கனடாவில் இருபத்தைந்து வருடங்கள்

தாயின் சேலைக்குள் வளர்ந்த சுகந்தனின் வாழ்க்கை ரொறோண்டோவில் ஓய்வற்ற வேலை என்ற நிலைக்கு மாற்றம் பெற்றது. பாடசாலை, பகுதிநேர கோப்பை கழுவுதல், கிரிக்கெட் என்று நேரத்தை வசப்படுத்தித் தன் வாழ்வைச் சிரமத்தின் மத்தியிலும் வாழ்வாங்கு வாந்தார். அதிகாலை 5:00 முதல் அதிகாலை 2:00 மணிவரை அவரது நாள் பயனுடனே சுழன்றது. பயணத்தின் போது பள்ளி வேலைகளைச் செய்தேனும் நல்ல புள்ளிகளோடு படிப்பை முடித்தார். உயர்கல்விக்குப் பணம் போதாது. இரவுக் கல்லூரியும், பகலில், வார இறுதி நாட்களில் வேலையுமென எப்படியோ கல்வியோடு வாழ்க்கையும் உயர்ந்தது. சுமார் ஒன்றரை வருடங்களுக்கு வாரம் முழுவதும் நான்கு வேலைகளாற் பிரித்தெடுக்கப்பட்டன. தளபாடத் தொழிற்சாலை வேலை முழு நேரமாகியது. அதுவே சுகந்தனது வாழ்வுக்கும் ஏணியானது

இரவுக் கல்லூரியில் எலெக்ட்றோணிக் எஞ்சினியரிங்க் கற்றாலும் ஒழுங்காக வகுப்புக்களுக்குப் போவதில்லை. நண்பர்களின் குறிப்புகளை வாசித்து அவர்களை விட மேலதிகமான புள்ளிகளைப் பெற்றார். இருப்பினும் அவர்களைப் போல் வருடம் 30,000 கனடிய டொலர்களை அவர் சம்பாதிக்க விரும்பவில்லை. அவர் கல்வி கற்கும்போதே வருடம் 80,000 கனடியன் டாலர்களைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார். அது சுகந்தனின் கடினமும், விசுவாசமும் கொண்ட உழைப்புக்குக் கிடைத்த வெகுமதி. “கல்வி முக்கியமானது தான். ஆனல் அதை விரிவுரை மண்டபங்களில் உட்கார்ந்துதான் கற்க வேண்டுமென்பதில்லை” என்கிறார் சுகந்தன்.


சுகந்தனது தளபாடத் தொழிற்சாலை நிர்வாகம் அவரது திறமையை விரைவிலேயே இனம் கண்டு அவருக்குப் பதவியுயர்வும் கொடுத்தது. பகுதி நேர வேலைகள் அவசியமில்லாமற் போனது.

வாடிக்கையாளர்களைச் சந்திக்கச் செல்லும் போது சுகந்தனுடன் அவரது வெள்ளை இன மேலதிகாரியும் போகவேண்டியிருந்தது. மண் நிறத் தோலுடையவருடன் வணிகம் செய்ய வாடிக்கையாளர்கள் விருப்பப்படாமல் போகலாம் என்பதற்காகவிருக்கலாம்.

வெகு விரைவிலேயே நிறுவனமும், வாடிக்கையாளரும் சுகந்தனது திறமையைக் கண்டறிந்து கொண்டனர். நிறுவனம் அவருக்கு அவரது மேலதிகாரிக்கு மேலான பதவியை வழங்கியது. முழுக் கனடாவுக்கும் தரக் கட்டுபாட்டு அதிகாரியாகவும் (Quality Control) தொடர்ந்து உலக முழுவதுக்குமான அதிகாரத்தையும் நிறுவனம் அவருக்கு வழங்கியது. சிறிது காலத்தில் நிறுவனத்தின் முக்கிய ‘சிக்கல் தீர்க்கும்’ நிபுணராக (company trouble-shooter) ஆகப் பதவியுயர்த்தப்பட்டதுமல்லாமல் 100,000 சதுர அடி கொண்ட தொழிற்சாலையில் அவருக்கு மூன்று அலுவலகங்களைக் கொடுத்ததன் மூலம் சுதந்திரமாகப் பணிசெய்யும் வசதியையும் நிறுவனம் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.

சிக்கல் தீர்ப்பது என்பது சுகந்தனுக்குக் கைவந்த கலை. அது தொடர்பான ஒரு கதையை அவர் விரும்பிச் சொல்கிறார். ஒரு தடவை நிறுவனத்தின் பொது முகாமையாளர் சுகந்தனைத் தேடி வந்தார். நிறுவனத்தின் 50% மான மரப் போர்வைத் (wood veneer) தளபாடங்கள் நிறம் மாறுவதால் வாடிக்கையளர்களால் திருப்பியனுப்பப் படுகின்றன எனக் குறைபட்டுக்கொண்டார். சுகந்தன் அதைப் பார்த்துவிட்டு “இது இயற்கையான நிகழ்வு. போர்வையாகப் பாவிக்கப்பட்டது உண்மையான மரம், செயற்கையான பிளாஸ்டிக் அல்ல என்பதையே இது உணர்த்துகிறது எனக்கூறி இதையே வாடிக்கையாளரிடமும் சொல்லுங்கள்” எனக்கூறினார். இதன் பிறகு வாடிக்கையாளரும் மகிழ்ச்சியடைய தளபாடங்கள் திருப்பி அனுப்பப்படுவதும் நின்றுவிட்டது.

சுகந்தன் இன்நிறுவனத்தில் 20 வருடங்கள் பணி புரிந்தார். இக்காலத்தில் கனடாவிலும், அமெரிக்காவிலும் சொத்துக்களில் முதலீடு செய்தார். தாயையும் ஒரு தம்பியையும் கனடாவுக்கு அழைக்க மற்றத் தம்பி அகதியாக ஐரோப்பாவுக்கு ஓடத் தங்கை மட்டும் திருமணம் முடித்து யாழ்ப்பாணத்திலேயே தங்கி விட அவரது கடமைகள் ஓரளவு திருப்தியுற்றன.



யாழ்ப்பாணம் திரும்புதல்

25 வருடங்களுக்குப் பிறகு, 2014 இல் சுகந்தன் யாழ்ப்பாணம் திரும்பினார். மனைவிக்கு விருப்பமில்லை எனினும் அவரது கனவு வேறாக இருந்தது. சரி வராவிட்டால் திரும்பி வரலாம் என்ற வாக்குறுதியோடு யாழ்ப்பாணம் சென்றார் சுகந்தன். ஏன் யாழ்ப்பாணம் திரும்பினாய் என்று கேட்டதற்கு “எனது பிள்ளைகள் தமது வேர்களை அறிய வேண்டும்” என்றார். மகன் தற்போது கனடாவில் பல்கலைக்கழகத்தில் பயில்கிறார். மகள் யாழ்ப்பாணத்தில் படிக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் தொழில் முனைவர்

சுகந்தன், தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேச, எழுதக்கூடியவர், நேரடியாகப் பேசுபவர், கவனமாகக் கேட்பவர், விழிகளை நேரே சந்தித்து அளவளாபுபவர், மொத்தத்தில் சகலரையும் இலகுவில் ஈர்க்கக்கூடியவர். ஒரு வெற்றிகரமான தொழில் முனைவராவதற்குரிய அத்தனை அம்சங்களையும் கொண்ட ஒருவர் சுதந்திரமான வியாபாரியாக விரும்புவது இயற்கையே.

ஒரு தலைமுறை அவகாசம் கொடுங்கள் யாழ்ப்பாணம் புளோரிடா போல வந்துவிடும். இளையவர்கள் ஆனந்தத்தை அனுபவிக்கும், வல்லுனர்கள் புதிய தொழில்களை ஆரம்பிக்கும், முதியவர்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கும் நிலமாக மாறும்

சுகந்தன் சண்முகநாதன்

சுகந்தனது முதலாவது தொழில் முயற்சி தன் தங்கையின் கணவருடன் சேர்ந்து ‘றிச் லைஃப்’ (Rich Life) என்ற நிறுவனத்தின் வடமாகாண விநியோகிஸ்தராகியது. ‘றிச் லைஃப்’, முன்னணி பாலுணவுப் பொருட்களின் தயாரிப்பாளராவர். நான் சுகந்தனைச் சந்திக்குமுன்பே இப் பொருட்களை வாங்குபவன். வட மாணத்தின் சகல கடைகளிலும் கிடைக்கும் இப் பொருட்கள் கிடைக்கின்றன.

இதன் பிறகு சுகந்தனின் கவனம் வரணி பனஞ் சாராயக் கூட்டுறவுச் சங்கத்தின் பக்கம் திரும்பியது. போர்க்காலத்தில் இலாபகரமாக நடத்தபட்ட கூட்டுறவுச் சங்கங்கள் பல தற்போது மூடப்படும் நிலையில் இயங்குவது பற்றிச் சுகந்தன் அறிந்திருந்தார். தங்களது வேலையாட்களுக்குத் தொழில்களை வழங்கியது மட்டுமல்லாது, ஆயிரக் கணக்கான கள்ளிறக்கும் தொழிலாளர்களையும் இச் சங்கங்கள் வாழவைத்துக் கொண்டிருந்தன. குழந்தைப் பள்ளிகள் முதல் பல நல்ல காரியங்களுக்கு நிதி உதவியும் புரிந்து வந்தன. போரின் முடிவு இவற்றில் சிலவற்றையும் முடித்துக்கொண்டது, சில ஊசலாடிக்கொண்டிருந்தன. 2009 இற்குப் பிறகு தென்னிலங்கை நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் வட மாகாணச் சந்தைக்காகப் போட்டியிட்டன. போர்க்காலத்தில், பலவகைப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கூட்டுறவுச் சங்கங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் அதிக முன்னேற்றங்களைச் செய்யமுடியாமல் போனது. பண்டங்களின் தரங்களை உயர்த்தவோ, அவற்றின் லேபல்களையோ அல்லது பெட்டிகளையோ கவர்ச்சியான தரத்துக்கு வைத்திருக்கவோ முடியவில்லை.

வரணி கூட்டுறவுச் சங்கத் தயாரிப்புகள்

வரணி வடிப்புத் தொழிற்சாலை (distillery) வீதியில் வீசப்பட்ட போத்தல்களைத் திரும்பவும் பாவித்தது. சுடலைகளில் கவலை தீர்க்கக் குடிப்பவர்கள் வீசும் வெற்றுப் போத்தல்கள் பாவனைக்கு வந்தன. லேபல்கள் கைகளால் ஒழுங்கீனமாக ஒட்டப்பட்டன. சில கிழிந்தவாறிருந்தன. கள்ளின் தரம் போத்தலுக்குப் போத்தல் வித்தியாசமாகவிருந்தது. உற்பத்திக்கான மூலப் பொருட்கள் தென்னிலங்கையிலிருந்து ஒழுங்காகப் பெறப்படாமையால் தயாரிப்பு தடைபடுவது வழக்கமாகவிருந்தது. மொத்தத்தில் சீரற்ற முகாமைத்துவம் காரணமாகப் பண்டத்தின் விற்பனையில் தளர்ச்சி ஏற்பட்டது. அத்துடன் தென்னிலங்கைக் கள்ளுற்பத்தியில் பாவிக்கப்படும் மூலப்பொருட்களின் வேறுபாடு காரணமாக அவற்றின் விலைகளுடன் வட மாகாணக் கள்ளின் விலை இலாபகரமானதாக இருக்கவில்லை.

கூட்டுறவுச் சங்கமாக இருந்ததால் வரணி கள்ளுற்பத்தித் தொழிலை வாங்கச் சுகந்தனால் முடியவில்லை. ஆனால் அப்பண்டத்தின் ஏக விநியோகிஸ்தன் என்ற வகையில் அதன் தரத்தை ஏற்றுமதித் தரத்துக்கு உயர்த்த சுகந்தனால் முடிந்தது. பிரித்தானியா, கனடா, இத்தாலி போன்ற பல நாடுகளிலுள்ள வடிப்புத் தொழிற்சாலைகளுக்குச் சென்று அங்குள்ள தொழில்முறைகளைக் கற்றுக்கொண்டார்.



போத்தல் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றை வடமாகாணத்தில் நிறுவ முயற்சித்தாராயினும் அதன் முதலீடு அதிகமாக இருந்ததனால் அம் முயற்சியை விட்டுவிட்டார். இந்திய நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமொன்றைச் செய்து, தென்னிலங்கையில் அரச முதலீட்டுச் சபையின் உதவியுடன் அவர்கள் ஆரம்பித்த போத்தல் தயாரிக்கும் நிறுவனமொன்றின் வடமாகாண விநியோகஸ்தராகவும் ஆகிக்கொண்டார். இதன் மூலம் வரணி தொழிற்சாலைக்கு தடங்கலில்லாத போத்தல் விநியோகமும் கிடைத்தது.

முதலீட்டுச் சபையின் ஆதரவுடன் தென் கொரிய நிறுவனமொன்றினால் தென்னிலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமொன்றிலிருந்து பெட்டிகள், லேபல்கள், மூடிகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டார். அத்தோடு வடமாகாணத்தின் இதர நிறுவனங்களுக்கான விநியோகங்களையும் சேர்த்து ஒன்றாகத் தனது தேவைகளைச் (order) சமர்ப்பிப்பதன் மூலம் அவருடைய வாங்கு திறன் பன்மடங்கு அதிகரித்தது. சுகந்தன் தென் கொரிய நிறுவனத்தின் மிக முக்கிய வாடிக்கையாளராக முடிந்தது. மூலப் பொருட்கள் உரிய நேரத்தில் தொழிற்சாலையை வந்தடைந்தன.

இவற்றைச் செய்ததன் மூலம் சுகந்தன் கள்ளுற்பத்திக்குரிய போத்தல், லேபல், பெட்டி அத்தனையையும் தன் ஒருங்கிணைந்த நிறுவனங்களுக்குள்ளேயே வைத்திருக்க முடிந்தது.

பதநீர் தயாரிப்பு
பதநீர் தயாரிப்பு காணொளி (திருநெல்வேலி, தமிழ்நாடு)

சுகந்தனின் வியாபார அபிவிருத்தியில் இன்னுமொரு அதிர்ஷ்டமும் வந்து ஒட்டிக்கொண்டது. யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு மருத்துவர்களின் மாநாட்டுக்கு பதநீர் வழங்குவதற்கான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டது. பதநீர், பனையிலிருந்து எடுக்கப்படும் போதையூட்டாத ஒரு பானம். தாய்ப் பாலுக்குச் சமமான போஷாக்கு நிறைந்த ஒரு பானம். வரணி கூட்டுறவுச் சங்கத்தில் இது உற்பத்தி செய்யப்படுவதில்லையாயினும் சுகந்தன் பதனீர் தயாரிக்கும் இன்னுமொரு கூட்டுறவுச் சங்கத்தைக் கண்டுபிடித்தார்.

பதநீர் வருடத்தில் 3-4 மாதங்களுக்கே உற்பத்தியாகும். ஆனாலும் பதப்படுத்தும் பதார்த்தங்கள் (preservatives) எதையுமே பாவிக்காமல் பதநீரை ஒரு வருடத்துக்குப் பழுதாகாமல் போத்தலில் அடைத்துவைக்கக் கற்றுக்கொண்டார் சுகந்தன். சென்ற வருடம் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்ட பதநீர்த் தயாரிப்புகளை யாழ்ப்பாணத்தின் பாடசாலைகள், மருத்துவமனைகளுக்கு விநியோகித்து அமோக வெற்றியையும் பெற்றிருக்கிறார். தற்போது ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற கண்டங்களின் சந்தைகளைக் குறிவைத்து விநியோகிஸ்தர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.

கள்ளு
வடக்கின் பனைப் பொருளாதாரம்

பனம் தொழில் வடக்கிற்கு இன்றியமையாதது. ஒரு பருவ காலத்தில் கள்ளுத் தொழிலாளி நாளொன்றுக்கு 5000 ரூபாய்களைச் சம்பாதிப்பார். பருவ காலம் 10 மாதங்களுக்கு நீடிக்கும். போதையற்ற பதனீர் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. காரைநகரில் பதநீரை ஒழுங்காகக் குடித்துவந்த மூதாட்டி ஒருவர் 104 வயதுவரைக்கும் ஆரோக்கியமாக வாழ்ந்ததாகப் பேசிக்கொள்வார்கள். அவருடைய மரணச் சடங்கில் 600 பேரப் பிள்ளைகளும், பூட்டப் பிள்ளைகளும் கலந்துகொண்டார்களாம். முறையாகச் செயற்பட்டால் பனம் தொழில் போதுமானவர்களுக்கு வேலை வாய்ப்பையும், அரசாங்கத்துக்கு வரியையும் தருவதன் மூலம் வடமாகாணத்தின் பொருளாதாரத்தை முன்னேற்றக்கூடிய ஒன்று.



வடக்கின் நோக்கு

சுகந்தன் இதர தொழில் முயற்சிகளிலும் கண் வைத்திருக்கிறார். கண்ணாடிகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் மறுசுழற்சி (recycling) செய்யும் முயற்சி அது. வேறு தொழில் முயற்சிகளையும் காலப்போக்கில் எடுத்துக்கொள்வாரென நம்புவோம்.

புலம்பெயர்ந்தவர்கள் மீண்டு வந்து தொழில்துறைகளை ஆரம்பிப்பது வழக்கமான ஒன்றல்ல. சுகந்தன் ஒரு தனி உதாரணம். அவர் ஒரு தர்மஸ்தாபனமோ அல்லது மூளைவள ஆலோசகரோ அல்ல. அவர் தான் கற்ற வட அமெரிக்கத் திறமைகளையும் அனுபவங்களையும் கொண்டு வட இலங்கையின் நலிவுற்றுப் போகும் தொழில்களை மேம்படுத்தியும், புதிய தொழில்களை ஆரம்பித்தும் முன்னுதாரணபுருஷராகத் திகழ்கிறார். அவரது உள்ளார்ந்த பார்வையும், வடக்கிற்கு அப்பாலும் ஏற்படுத்தும் தொடர்புகளின் மூலம் புதிய பண்டங்களை உருவாக்கி சர்வதேச சந்தைகளில் விற்க முயற்சிக்கிறார்.

வடக்கு தூங்குகிறது, சட்டங்களற்றது, அதிகம் பின்தங்கியது, அதிகம் மெத்தனப் போக்குடையது, அதிகம் சோம்பேறிகளைக் கொண்டது, அங்கு முதலிடுவதில் பிரயோசனம் கிட்டாது என்றெல்லாம் கூறுபவர்களைத் தவறு எனச் சொல்வதற்கு சுகந்தன் ஒரு உதாரணம். நல்ல திட்டத்துடனும், நல்ல முகாமைத்துவத்துடனும் வடக்கில் பாரிய பொருளாதார வெற்றிகளை அடையலாம்.

வடக்கிற்கான நோக்கு (vision) என்னவாயிருக்குமெனச் சுகந்தனிடம் கேட்டபோது கேட்டபோது, “ஒரு தலைமுறை அவகாசம் கொடுங்கள் யாழ்ப்பாணம் புளோரிடா போல வந்துவிடும். இளையவர்கள் ஆனந்தத்தை அனுபவிக்கும், வல்லுனர்கள் புதிய தொழில்களை ஆரம்பிக்கும், முதியவர்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கும் நிலமாக மாறும்” என்றார்.

ஒரு தலைமுறை? சுகந்தனைப் போல ஐம்பது பேர்கள் இருந்தால் வெகு முன்பதாகவே அது சாதிக்கப்பட்டுவிடும்.