US & Canada

கனடாவின் மனிதாபிமான, அகதிகள் விடயங்களின் விசேட தூதராக பொப் றே நியமனம்

மார்ச் 10, 2020

ஒட்டாவா: முன்னாள் லிபரல் கட்சித் தலைவர் பொப் றே, கனடாவின் மனிதாபிமான, அகதிகள் விடயங்களுக்கான விசேட தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ அறிவித்துள்ளார்.

மியான்மாரிலிருந்து 600,000 றொஹிங்யா அகதிகள் அவர்கள் வீடுகளிலும், கிராமங்களிலுமிருந்தும் துரத்தப்பட்டபோது ஏற்பட்ட மனிதாபிமான அவலங்கள் தொடர்பாக பொப் றே அவர்கள் 2017-2018 காலப்பகுதியில் மதிப்பீடுகளை மேற்கொண்டு கனடிய மத்திய அரசுக்கு ஆலோசனைகளை மேற்கொண்டிருந்தார். இதன் பெறுபேறாக அவர் வழங்கிய 17 சிபார்சுகளை அடிப்படையாகக் கொண்டு கனடா பல மனிதாபிமான உதவிகளைச் செய்ததோடு, பல றொஹிங்யா அகதிகளை நாட்டுக்குள் அனுமதித்துமிருந்தது.

பொப் றே அவர்களின் மெச்சத்தக்க இப்பணியின் காரணமாக, அவரை மனிதாபிமான, அகதிகள் விடயங்களுக்கான விசேட தூதுவராக நியமிப்பதாகப் பிரதமர் ட்றூடோ அறிவித்துள்ளார்.



றொஹிங்யா பிரச்சினையை ராஜதந்திர முறையில் அணுகித் தீர்த்துவைப்பது மற்றும் ஐ.நா. வுடனும், சர்வ தேசங்களுடனும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இதர நாடுகளில் வரக்கூடிய மனிதாபிமான, அகதிகள் விடயங்களை அவரால் கையாளமுடியுமெனத் தான் நம்புவதாக பிரதமர் ட்றூடோ தெரிவித்துள்ளார்.

மூலம்: கனேடியன் பிறெஸ்