News & AnalysisUS & Canada

கனடாவின் புதிய ஆளுனராக பூர்வ குடிப் பெண் ஒருவர் நியமனம்

154 வருட வரலாற்றில் திருப்பம்

கனடாவின் 30 ஆவது ஆளுனராக மேரி சைமன் எனப்படும் பூர்வகுடிப் பெண் ஒருவர் நியமமிக்கப்பட்டுள்ளார் எனவும் இன்நியமனத்தைப் பிரித்தானிய மகாராணி, இரண்டாம் எலிசபெத் அங்கீகரித்துள்ளார் எனவும் கனடியப் பிரதம்ர் ஜஸ்டின் ட்றூடோ நேற்று (06) அறிவித்திருக்கிறார். கனடாவின் 154 வருட வரலாற்றில் ஒரு பூர்வ குடிப் பெண் ஆளுனராக நியமிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

இதுவரையில் ஐரோப்பிய, ஆபிரிக்க, சீன வம்சாவளியினரே ஆளுனர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

கனடா சுதந்திரமான ஒரு நாடாக இருந்தாலும், அது இன்னும் சம்பிரதாய முடியின் (constitutional monarchy) கீழ்ப்பட்ட வகையில் இருந்து வருகின்றது. கனடாவில் பிரித்தானிய மகாராணியின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுனர் கனடிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதிலும் தலையிடுவதில்லை. கனடாவின் முப்படைகளின் தளபதியாக இருக்கும் அவர், கனடாவிலும், வெளிநாடுகளிலும் பிரித்தானிய முடிக்குரிய பிரதானியாகக் கடமையாற்றி வருகிறார். கனடா ஒரு சம்ஷ்டி நாடாக உருவாகுவதற்கு முன்னரிருந்தே ஆளுனரின் சேவைகள் இங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இனுவிற் (inuit) பூர்வ குடியைச் சேர்ந்த மேரி சைமன் தனது மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், அவர்களது கலாச்சாம், பண்பாட்டு, பாரம்பரியம், மொழி ஆகியவற்றைப் பேணுவதற்காக அயராது போராடி வருபவர். முன்னர் எஸ்கிமோ என்ற பெயரால் அழைக்கப்பட்ட இனுவிற் மக்கள் சைபீரியா, அலாஸ்கா, வட கியூபெக் (கனடா) ஆகிய பிரதேசங்களில் துருவப்பகுதிகளை அண்டி வாழும் மக்களாவர். எஸ்கிமோ என்ற பெயரால் அழைப்பது இழுக்காகும் என்பதால், தற்போது அப் பெயர் பாவனையிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது.

கடந்த நாற்பது வருடங்களாக இனுவிட் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிவரும் மேரி, பல பூர்வகுடி அமைப்புக்களின் பிரதிநிதியாக கனடிய மத்திய, மாகாண அரசுகள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுப் பல ஒப்பந்தங்களையும் செய்திருக்கிறார். முன்னாள் ஒளிபரப்பாளராக அவர் பல உலகத் தலைவர்களைச் சந்தித்திருக்கிறார். கனடாவின் தூதுவராக டென்மார்க் நாட்டிலும் பணிபுரிந்திருக்கிறார்.

கியூபெக் மாகாணத்தில் பிறந்தாலும் அவர் பிரெஞ்சு மொழியைக் கற்கவில்லை. ஆங்கிலத்திலும், அவரது தாய் மொழியான இனுக்டிட்டுட் மொழியிலும் சரளமாகப் பேச வல்லவர். புதிய பதவிக்காலத்தில் பிரெஞ்சு மொழியைக் கற்கப்போவதாகக் கூறியுள்ளார்.

முந்தைய காலங்களில் போலல்லாது, இந்த தடவை ஆளுனரைத் தெரிவு செய்ய ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழு பலரது தகமைகளையும் ஆராய்ந்த பின்னர் மேரி சைமனைப் பிரதமருக்குப் பரிந்துரைத்திருந்தது.

கடைசியாக ஆளுனராக இருந்த ஜூலி பயட் அவமானத்தின் மத்தியில் பதவியிலிருந்து விலகவேண்டி ஏற்பட்டது. எவரது ஆலோசனைகளையும் பெறாது தன் சுய விருப்பத்தின்படி கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ பயட்டின் நியமனத்தைச் செய்திருந்தாரெனப் பரவலாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த படியால் இந்தத் தடவை ஆளுனரைத் தெரிவு செய்யும் பொறுப்பு குழுவொன்றுக்கு வழங்கப்பட்டிருந்தது.

மேரி சைமன் ஆளுனராகத் தெரிவு செய்யப்பட்டதை கனடா முழுவதிலுமுள்ள பூர்வகுடி மக்கள் வரவேற்று மகிழ்கிறார்கள். குறிப்பாக கட்டாய மத, கலாச்சார மாற்றத்துக்குட்படுத்தப்பட்டு மார்க்கப் பள்ளிகளில் தடுத்துவைக்கப்பட்டபோது இறந்துபோன முகங்களற்ற குழந்தகளின் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுவரும் இக் காலத்தில் பூத்வகுடியினர் ஒருவர் ஆளுனராக வருவதென்பது நல்லிணக்க முயற்சிகளுக்கு மேலும் உந்துதலை ஏற்படுத்தும் எனப் பேசப்படுகிறது.

கனடாவின் எதிர்க்கட்சிகள், பத்திரிகைகள் போன்றவை மேரி சைமனின் நியமநத்தை வாழ்த்தி இப் பதவிக்கு அவர் மிகவும் தகமையுள்ளவர் எனப் பாராட்டியுள்ளன.