கனடா | ட்ரூடோ 2.0 அரசின் அமைச்சரவை - ஒரு சிறுபான்மைப் பார்வை -

கனடா | ட்ரூடோ 2.0 அரசின் அமைச்சரவை – ஒரு சிறுபான்மைப் பார்வை

நவம்பர் 21, 2019

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, ஆளுனர் ஜூலி பாயெட்டுடன் அமைச்சர் பார்டிஷ் சாகர்

கனடாவின் 43 வது பாரளுமன்றத்தின் 37 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை நியமனங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இது சென்ற தடவையைவிட 2 பேரால் அதிகரித்திருக்கிறது. சென்ற தடவை போல் ஆண் பெண் சமத்துவம், சிறுபான்மையினரை உள்வாங்கல், பிரதேச முக்கியத்துவம் எனப் பல அம்சங்களை அமைச்சரவை பிரதிபலிக்கிறது.

இந்தத் தடவையும் நான்கு இந்திய வம்சாவளியினர் அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர், சென்ற தடவை பாதுகாப்பு அமைச்சராகவிருந்த ஹர்ஜித் சாஜன் தொடர்ந்தும் அதே பதவியை வகிக்கிறார். இவர் வான்கூவர் தெற்கு தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர். அரசியலுக்கு வருவதற்கு முன் இவர் வான்கூவர் காவற்துறையில் புலனாய்வுப் பிரிவிலும், கனடிய இராணுவத்திலும் பணியாற்றியவர்.

இன்னுமொரு சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த நவ்டீப் பெயின்ஸ் சென்ற தடவை போல் விஞ்ஞானம், தொழில்துறை அமைச்சராகப் பதவியைத் தொடர்வார். கணிசமான இந்திய வம்சாவளியினர் வாழும் மிசிசாகா-மால்டன் தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அரசியலுக்கு வருமுன் இவர் ஒரு பட்டயக் கணக்காளராவர்.

சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான பார்டிஷ் ஷாகர் பல்லின, இளையோர் நல அமைச்சராகப் பணியேற்கும் இவர் வாட்டலூ-கிச்னர் தொதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

அனிற்றா ஆனந்த், பொதுச் சேவைகள், கொள்முதல் அமைச்சர்

இந்த தடவை ஓக்வில் தொகுதிக்குப் புதிதாகப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட இந்து சமூகத்தைச் சேர்ந்த அனிற்றா ஆனந்த் பொதுச் சேவைகள், கொள்முதல் அமைச்சைப் பொறுப்பேற்கிறார். அரசியலுக்கு வருமுன் இவர் ரொறோண்டோ பல்கலைக் கழகத்தில் சட்டப் பேராசிரியராகக் கடமையாற்றினார்.

இவர்களை விடப் புதிய அமைச்சரவையில் கறுப்பினத்தவர்களைப் பிரதிநித்தித்துவப்படுத்த சோமாலிய வம்சாவளியைச் சேர்ந்த அஹ்மட் ஹுசேன், சீன வம்சாவளியிலிருந்து மேரி எங் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெறுகிறார்கள். இவர்கள் இருவரும் பழையவர்கள்.

இவர்களை விட இத்தாலிய, பிரன்ச்சு வம்சாவளியினரும் இடம்பெறுகின்றனர்.

கனடிய அமைச்சரவை நியமனத்தில் பிரதமர் ட்ருடோவின் சிறுபான்மைச் சமநிலைக் கொள்கை ஒரு உணர்வுநிலை அரசியல் சம்பந்தப்பட்ட விவகாரமே தவிர வெளியுறவு, உள்ளுறவு, பொருளாதார வளர்ச்சி விடயங்களில் தூரப்பார்வையுடையதெனக் கூற முடியாது.

குறிப்பாகச் சீனாவுடனான வர்த்தகப் பிணக்குகளைத் தீர்க்கவல்ல, அல்லது இந்தியாவின் மோடி அரசுடனான அரசியல் பிணக்கைத் தீர்க்கவல்ல சாமர்த்தியமான அணுகுமுறைகளை இந்த அமைச்சரவை மூலம் கையாளவில்லை. நடந்து முடிந்த தேர்தல் கொஞ்சம் வலது பக்கம் நகர்ந்திருக்கிறது எனும்போது கொஞ்சம் இயக்கவியல் சூட்சுமங்களைப் பாவித்திருக்கலாம். ட்ரூடோ v2.0, ட்ரூடோ v1.0 வைப் போலவே அசமந்தப் போக்கும் அனுபவமற்ற தன்மையையுமே காட்டிநிற்கிறார், பெரிதாகப் பாடம் எதுவும் கற்றதாகத் தெரியவில்லை.

அரசியலென்று வரும்போது உலகம் இன்னும் ஒரு முதியோர் சங்கங்களின் நிகழ்ச்சிநிரலின்படிதான் இயங்குகிறது. ட்ரூடோவின் இளையதலைமுறை இன்னும் பயிற்சி ஓட்டுனர் பத்திரத்துடந்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜான் கிரெத்தியேன், பிறையன் மல்றோனி போன்ற அனுபவஸ்தர்களின் முத்திரைகளைக் காணமுடியாமல் போனது துரதிர்ஷ்டவசமே.

Related:  பிரம்டனில் இரண்டு குழந்தைகள் கொலை | தந்தை கைது!

இதுவும் ட்ரூடோவின் இன்னுமொரு செயற்பாட்டுத் தன்மையற்ற ஆனால் நல்லுணர்வு தரும் நடவடிக்கையின் வெளிப்பாடுதான்.

-சிவதாசன்
Print Friendly, PDF & Email
Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)