Spread the love

அடிப்படை வருமானத் திட்டம் (Universal Basic Income) நடைமுறைக்கு வரலாம்?

கனடிய அரசியல் : ஒரு நோக்கு – சிவதாசன்


கனடாவின் சமூக நலத் திட்டத்தில் உதவிப்பணம் பெறுவது என்பது ஒரு இழிவாகப் பார்க்கப்படும் செயல் என்பதோடு அதைப் பெறுபவர்கள் மிக மோசமான கட்டுப்பாடுகளை எதிர்நோக்குகிறார்கள் என வறுமை ஒழிப்புச் செயற்பாட்டாளர்கள் மிக நீண்டகாலமாகக் குரெலெழுப்பி வருகிறார்கள். பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ அவர்களது சமீபத்திய நகர்வுகள் சரியாகவிருந்தால், இச் செயற்பாட்டாளர்களின் குரல்கள் செவிமடுக்கப்படுகின்றன என ஊகிக்கலாம்.

மிகநீண்ட காலமாக மக்களின் அங்கலாய்ப்புக்களுக்குக் காரணமான இந்த சமூகநல உதவித் திட்டம் பாரிய மாற்றங்களுக்கு உட்படவிருக்கிறது என செய்திகள் கசிந்துள்ளன.

கடந்த வாரம் பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ ஒரு காலத்தில் அவரது நம்பிக்கைக்குரியவராகவிருந்த நிதியமைச்சர் பில் மோர்ணோவைப் அப்பதவியிலிருந்து விலக்கிவிட்டு அந்த இடத்துக்கு அவரது இன்னுமொரு நம்பிக்கைக்குரிய நட்சத்திர அமைச்சர் கிறிஸ்டியா ஃப்றீலாண்ட் அவர்களை நியமித்துள்ளார். மோர்ணோவுக்கும் ட்றூடோவுக்குமிடையில் கொறோணாவைரஸ் ‘கட்டையைப் போட்டுவிட்டதென்று’ கதையொன்றும் உலாவுகிறது. அதாவது கொறோணாவின் பேரில் ட்றூடோ அள்ளிக் கொடுக்கும் திட்டத்துக்கு மோர்ணோ உடன்படவில்லை எனவும் ட்றூடோ எப்போதும் போல, my way or highway attitude இல் இயங்குகிறார் எனவும் கிசு கிசுக்கள் வெளிவந்தன. செலவு என்று வரும்போது, மோர்ணோ தன் Bay Street குணத்தைப் பிரதிபலிப்பவர். ஒரு வகையில் fiscally conservative. அதே வேளை ஃப்றீலாண்ட் ஒரு progressive. அவர் ட்றூடோவின் விருப்பங்களைக் கண்ணை மூடிக்கொண்டு செய்வார்.

கோவிட்-19 கொள்ளைநோய் உலகின் அத்தனை நாடுகளினதும் நிதிக் கொள்கைகளைப் புரட்டிப் போட்டுவிட்டது. அதனால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் வறுமைப்பட்டவர்கள். உலகின் அதி உச்ச பணக்காரர்கள் மேலும் $400 பில்லியன் பணத்தை இக் கொள்ளைநோயின் காரணமாகச் சேர்த்துக்கொண்டார்கள் என்றொரு செய்தியும் கடந்தவாரம் வந்தது. இக் கொரோணாக் குழப்பத்தை முன்வைத்து ட்றூடோ அரசு ஏழை எளிய மக்களுக்கு சில சார்பான திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வழங்கப்பட்டுவரும் சமூக உதவிப் பணத் தொகை உண்மையில் ‘பிச்சைக்’ காசுதான். கனடாவின் அதிகூடிய ‘பிச்சைக் காசு’ நியூபவுண்ட்லாந்து மாகாணத்தில் கொடுக்கப்படுகிறது. தனி ஒருவருக்கு வருடத்துக்கு $11,383. கனடவில் ஒருவரது மிகக்குறைந்த தேவைகளைப் பூர்த்திசெய்ய வருடமொன்றுக்கு $20,000 தேவை.இப் பிரச்சினைகளைத் தீர்க்க, நிபுணர்களின் ஆலோசனையும், வறுமை ஒழிப்புச் செயற்பாட்டாளர்களும் பரிந்துரைப்பதும், கேட்பதும் ஒன்றுதான் – ‘பிச்சைக் காசு’ திட்டத்தை ஒழித்துவிட்டு ஒவ்வொருவருக்கும் அடிப்படை வருமானம் ஒன்றை வழங்குங்கள் என்பதே.

ட்றூடோ அரசு இப்படியான ஒரு பாதையில் நகர்கிறதா என்றொரு சந்தேகம் தற்போது எழுகிறது. மோர்ணோவை மாற்றி ஃபிறீலாண்டை நிதியமைச்சராக்கியது இப் புதிய பாதையில் லிபரல் அரசின் நகர்வைத் துரிதப்படுத்தலாமென நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Related:  கோவிட்-19 தடுப்பு மருந்து | 114 மில்லியன் அளவுகள் மருந்துகளைக் கனடா வாங்குகிறது

இந்த அடிப்படை வருமானம் வழங்கும் திட்டம் கனடாவுக்குப் புதியதல்ல. 1970 இல் மனிட்டோபாவிலும், 2018 இல் ஒன்ராறியோவிலும் அறிமுகப்படுத்தப்பட்டவை தான். ஒன்ராறியோவில் டக் ஃபோர்ட் பதவியேற்றதும் அதை நிறுத்திவிட்டார்.

கடந்த மே மாதம் 50 கனடிய செனட்டர்கள் ஒன்றிணைந்து ‘Universal Basic Income (UBI) என்றொரு திட்டத்தைக் கொண்டுவரும்படி அரசைக் கேட்டிருந்தார்கள். அதே வேளை தற்போது வழங்கப்படும் $2000 CERB (கொறோணா உதவிப் பணம்) பணத்தை நிரந்தர அடிப்படை வருமானமாக மாற்றும்படி வினிபெக் மத்தி தொகுதியின் புதிய ஜனநாயகக் கட்சி பா.உ. லீ கசான் பாராளுமன்றதில் ஒரு பிரேரணையைக் கொண்டுவந்தார். நியூபவுண்ட்லாந்தில் அடிப்படை வருமானத்தை பரீட்சார்த்த ரீதியாக நடைமுறைப்படுத்தும்படி அங்குள்ள 20 சமூக அமைப்புகள் கேட்டுள்ளன.

பிரதமர் ட்றூடோவுக்கு ‘வீ’ தர்ம ஸ்தாபனம் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டியிருக்கிறது. தற்காலிகமாகத் தப்பியோட அவர் பாராளுமன்றத்தை செப்டம்பர் மாதம் வரை ஒத்திப்போட்டுள்ளார். பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது கியூபெக் மாகாணக் கட்சியான பார்டி கியூபெக்குவா ட்றூடோ அரசைக் கவிழ்க்கக் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது. அப்படியாக பொதுத் தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில் லிபரல் மீண்டும் ஆட்சிக்கு வருவதில் சிரமமிருக்கும்.இந்த வார இறுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி தன் தலைவரைத் தேர்ந்தெடுக்கப் போகிறது. அநேகமாக பீட்டர் மக்கே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படலாம். அவர் ஒரு முன்னாள் progressive conservative. இப்போதும் அப்படியோ தெரியாது. தேர்தல் ஒன்றை உடனடியாக எதிர்கொள்ள அவரோ, கட்சியோ தயாரோ தெரியாது.

எனவே இந்த நிச்சயமற்ற சூழலைட் ட்றூடோ சாதகமாகப் பாவித்து, ‘அடிப்படை வருமானத் திட்டத்தை’ அறிவித்து மக்களின் ஆதரவைப் பெற்று மீண்டும் ஆட்சியேற யோசிக்கலாம்.

புதிய நிதியமைச்சரும் பழைய பிரதமரும் தமது அடுத்தநகர்வுகளைச் செவ்வனே திட்டமிடுவதற்காகத்தான் பாராளுமன்றத்தைப் பிரதமர் ஒத்திவைத்தாரா?

செய்யக்கூடியவர்.

Print Friendly, PDF & Email
கனடாவின் சமூக நலத் திட்டத்தில் (Welfare System) பாரிய மாற்றங்கள்
ட்றூடோ

கனடாவின் சமூக நலத் திட்டத்தில் (Welfare System) பாரிய மாற்றங்கள்