கந்த சஷ்டி கவசம் விவகாரம் | கறுப்பர் கூட்டத்தினர் கைது, காணொளிகள் அகற்றப்பட்டன!
தமிழக அரசின் நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
‘கறுப்பர் கூட்டம்’ என்ற பெயரில் பதியப்பட்ட யூ டியூப் சனல் மூலம், சில பகுத்தறிவுவாதிகளால் வெளியிடப்பட்ட, தமிழர் கடவுளாகிய கந்தனை அவமதிக்கும் ‘கந்த சஷ்டி கவசம்’ என்ற காணொளி தொடர்பாக பலரைத் தமிழக அரசு கைது செய்துள்ளது.
தமிழக இணையக் குற்றப் பிரிவினால், யூ டியூப் தளத்திலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ள இக் காணொளியில், தமிழ்க் கடவுள் முருகனை அவமதிக்கும் வகையில் சொற்பிரயோகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

‘கந்த சஷ்டி கவசம்’ என்ற தலைப்பிலான இக் காணொளியை வெளியிட்ட ‘கறுப்பர் கூட்டம்’ என்ற குழுவினர் பெரியாரியத்தை ஆதரிக்கும் ‘பகுத்தறிவு வாதிகள்’ எனக் கூறப்படுகிறது. இக் காணொளியில் முருகக் கடவுளை மிக மோசமாக அவமதிக்கும் சொற்பிரயோகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, காணொளியின் அறிவிப்பாளர் சுரேந்திரா நடராஜன், வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில் வாசன், ஓட்டேரியைச் சேர்ந்த சோமசுந்தரம், மறைமலை நகரைச் சேர்ந்த குகன் ஆகியோர் கைதாகியுள்ளனர்.
ஜூலை 13 இல் இக் காணொளி பதிவேற்றப்பட்டதிலிருந்து அதை வைரலாகியிருந்ததென்றும் இதைத் தொடர்ந்து தமிழ்நாடு பா.ஜ.க. சட்டத்தரணிகள் பிரிவைச் சேர்ந்த வினோஜ் பி.செல்வம், தமிழ்நாடு இணையக் குற்றப்பிரிவில் மேர்கொண்ட முறைப்பாடையடுத்து நால்வர் கைது செய்யப்பட்டதுடன் ‘கறுப்பர் கூட்டத்தினால்’ பதிவேற்றப்பட்ட 500 காணொளிகள் அகற்றப்பட்டுள்ளன எனவும் அறியப்படுகிறது.
‘கறுப்பர் கூட்டம்’ என்ற இந்த யூ டியூப் சனலின் பின்னால் தி.மு.க. இருக்கிறது எனப் பல சமூக வலைத்தளச் செய்திகள் வெளிவந்திருந்தாலும், தி.மு.க. இச் செய்தியை மறுத்திருக்கிறது.
“தி.மு.க. வை ஒரு இந்து மதத்திற்கு எதிரான அமைப்பாகக் காட்டுவதற்குச் சில சமூக வலைத் தளங்கள் முயல்கின்றன. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாங்கத்தின் மீதான கவனத்தைத் திசை திருப்புவதற்கான முயற்சிகளில் இதுவுமொன்று” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
பரவி வரும் இச்சச்சரவினால் கோயம்புத்தூரில் உள்ள பெரியார் சிலையொன்று, இந்துத்வவாதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோட்டிலுள்ள பெரியார் சிலையொன்றுக்குக் காவியைப் போர்த்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஜினிகாந்த்

இச் சச்சரவில் இப்போது நடிகர் ரஜினிகாந்தும் நுழைந்திருக்கிறார். ‘கந்த சஷ்டி கவசம்’ காணொளி விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசை இன்று (புதன்) அவர் புகழ்ந்து டுவீட் செய்திருக்கிறார்.
“தமிழ் மக்களின் உணர்வுகளைத் துன்புறுத்திய இக் கேவலமான நடவடிக்கையின் பின்னாலுள்ளவர்களைக் கைதுசெய்ததோடு அக் காணொளியை நீக்கியமைக்காக தமிழ்நாடு அரசை நான் இதயபூர்வமாகப் பாராட்டுகிறேன்” என அவர் தனது டுவீட் மூலம் தெரிவித்திருக்கிறார். “எல்லா மதங்களும் ஒன்றே. கந்தனுக்கு அரோகரா” என அவர் மேலும் தனது டுவீட்டில் தெரிவித்திருக்கிறார்.