Columnsசிவதாசன்

கதறும் கைமுனு | கோதாவின் நாடு கடப்பும் ராஜபக்ச ராச்சியத்தின் வீழ்ச்சியும்

சிவதாசன்

தெய்வம் நின்று நிதானித்து அறுத்திருக்கிறது. அதன் கடமையை அது செய்திருக்கிறது. அத் தெய்வத்துக்கு எவரும் உரிமை கோரலாம்.

மக்கள் ஆடிப் பாடுகிறார்கள். ருவிட்டர் உலகம் பிரகாசிக்கிறது. இதே போல் முன்னர் ஒரு தடவையும் மக்கள் ஆடிப்பாடி, வெண் பொங்கல் கொடுத்து மகிந்திருந்தார்கள். அப்போது தமிழர்களின் இரத்தம் அம் மண்ணில் காயாமல் இருந்தது. அதற்குக் காரணமானவரைக் கடவுளாகக் கொண்டாடினார்கள். இன்று அதே கடவுள் நாடு கடத்தப்பட்டபோது அதையும் கொண்டாடுகிறார்கள். முரண்நகையானாலும் யதார்த்தமும் அதுதான்.

ருவிட்டரில் நிறையப் பதிவுகள். ஏறத்தாள எல்லாமே ஒரே உணர்வடனாவை – மகிழ்ச்சி. அதில் ஒருவரது பதிவு சற்று நெருடலாக இருந்தது. “எனக்குத் தெரிந்த எனது ஒரே வீட்டை விட்டு என்னைத் துரத்திய கோதாபய தனது வீட்டை / நாட்டை விட்டு, உயிருக்கு அஞ்சி, இரவோடிரவாகத் தப்பியோடுவதைக் காண்கிறேன்”. இப் பதிவையிட்டவர் சிங்களவரோ, தமிழரோ தெரியாது. அவரைப் போல் பல இலட்சம் பேர் இருக்கலாம். ஆனால் கோதாபயவின் கொலைவெறியினால் இந்த உலகத்தை விட்டே துரத்தப்பட்ட பற்பல இலட்சம் உயிர்கள் தமது உணர்வுகளை ருவிட்டரில் பதிவு செய்யவில்லை. கோதாவின் நாடு கடத்தலில் அவர்களுக்கும் பெரிய பங்குண்டு.

அரகாலயா ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் பெற்றோர்கள் செய்த பாவங்களுக்கான பிராயச்சித்தங்களைச் செய்து முடித்திருக்கிறார்கள். அவர்களது வேளாண்மை இப்போதும் வயல்களிலேயே குவிக்கப்பட்டுக் கிடக்கிறது. அதைக் கட்டுக்கோப்பாகக் கொண்டுவந்து வீடுகளில் சேர்ப்பது அரசியல்வாதிகளின் கடமை. ஆனால் தற்போது பாராளுமன்றத்தில் வெள்ளை ஆடைகளோடு பவனிவரும் எவரும் இதற்குத் தகுதியானவர்களல்லர். எனவே அரகாலயா 2.0 இத் தொடரோட்டத்தைக் கொண்டு நடத்த வேண்டும். இன்னும் சிலர் நாடுகடத்தப்படவேண்டி இருக்கிறார்கள்.

அரகாலயாவில் தமிழர் அதிகம் கலந்துகொள்ளவில்லை என்பது பல அரகாலயர்களுக்குச் சங்கடமாக இருக்கிறது. ஆனாலும் புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன். தமிழரது வலிகளின் பெறுமதியை அரகாலயர்கள் ஒருபோதும் எட்டப் போவதில்லை. பெரும்பாலான தமிழர்கள் உடலளவில் காலிமுகத் திடலில் இல்லையாயினும் அவர்களது உள்ளங்கள் அங்குதான் நிற்கின்றன.

சமீபத்தில் சந்தித்த மூன்று புலம் பெயர் இளம் கல்வியாளர்கள் சொன்னார்கள் “அரகாலயா முள்ளிவாய்க்காலிலேயே ஆரம்பித்து விட்டது. அதை ஆரம்பித்து வைத்தவர்கள் தமிழர்கள்” என்று. அதில் உண்மையும் இருக்கிறது. தமிழரது அரகாலயா இன்னும் முற்றுப் பெறவில்லை. தமிழரது நீதியான போராட்டத்துக்கான பெறுபேறு ஒன்றை சிங்கள் அரகாலயா பெற்றுத் தரும்வரை தமிழ் அரகாலயா தொடர வேண்டும். முள்ளி வாய்க்காலில் ஆரம்பித்த இந்த தமிழ் அரகாலயா இன்று புலம் பெயர் தளங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. புலம்பெயர் நாடுகளின் அழுத்தங்களுக்கு இனிமேல்தான் வலுவிருக்கிறது. எனவே தமிழ் அரகாலயாவுக்கு இனிமேல்ல்தான் நிரமப வேலை இருக்கிறது.

அடுத்த கட்டமாக இலங்கையில் என்ன நடக்குமென்பது எதிர்வுகூற முடியாதது. 1956 முதல் நடைபெற்றுவரும் இப்படியான பல எதிர்வுகூற முடியாத காலங்களும் நிகழ்வுகளும் எமக்குப் பரிச்சயமானவை. இக் கால இடைவெளியில் மூன்று நான்கு சந்ததிகளைக் கடந்து வரலாறு வந்திருக்கிறது. தமிழரைப் பொறுத்த வரையில் நம்பிக்கையீனம் ஒன்றே வலுவடைந்து வருமொன்றாக இருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க அரியணையில் ஏற்றப்பட்டிருக்கிறார். பலமில்லாத பாராளுமன்றத்தில் அவரே பலவான். நவம்பர் 2024 வரை அவரே பகவானும் கூட. கோதாபயவுக்கும் ஜே ஆர் ஜயவர்த்தனாவுக்கும் பிறக்கும் ஒரு கலப்பாக அவரது ஆட்சி இருக்கும் என எதிர்பார்க்கலாம். மூளையுள்ள கோதாபாயவாக அவர் இயங்க முற்பட்டால் அது மிகவும் ஆபத்தாக இருக்கும். ஏற்கெனவே பஸ்களில் இராணுவம் கொண்டுவரப்பட்டு கொழும்பில் குவிக்கப்படுகிறது. அரகாலயயர்கள்ல் அரசாங்க கட்டிடங்களைத் தூசு தட்டிக் குப்பையகற்றிக் கையளிக்கத் தயாராகும் நிலையில் இது நடைபெறுவது அச்சத்தைத் தருகிறது.

இராணுவத்திலும் அரகாலயாவுக்கோ ஜே.வி.பி / முன்னணி சோசலிஸ்ட் கட்சிக்கோ விசுவாசமானவர்கள் ஏகப்பட்டவர்கர் இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. சில வேளைகளில் இராணுவத்தினர் பலர் ஆயுதங்களோடு அரகாலயர்களுடன் இணைந்துகொள்ளும் சந்தர்ப்பங்களுமுண்டு. பாராளுமன்றம் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதால் அரச நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு அதிகரிக்க வாய்ப்புண்டு. எனவே அரகாலயா 2.0 வன்முறையானதாக மாறுவதற்கான அத்தனை களப் பண்புகளும் இருக்கின்றன.

தேர்தல் என்று ஒன்று நடைபெறும்வரை ஜே.வீ.பி. / மு.சோ.க. ஆட்சியைப் பிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. ரணில் விக்கிரமசிங்க அதை அனுமதிக்கப் போவதில்லை. அதற்கான புற அழுத்தங்கள் நிறைய இருக்கின்றன. எனவே இக் குழப்பமான நிலையில் ரணில் விக்கிரமசிங்கவிடமே ஆட்சியைக் கொடுப்பது நல்லது. நாட்டின் பொருளாதாரத்தை அவர் முன்னேற்றுகிறாரோ இல்லையோ அதனால் அவர் புகழப்பட்டாலுங்ஜ் சரி, இகழப்பட்டாலுஞ்சரி அடுத்த தேர்தலின் முடிவை அவரே தீர்மானிக்கப் போகிறார். அது ஒரு பலமான பாராளுமன்றமாக இருந்தால் அதற்குள் முற்போக்கு அரசியல்வாதிகளின் பங்களிப்ப்பு இருந்தால் தமிழருக்கு சாதகமான சில முடிவுகள் எடுக்கப்படலாம். அதுவரை ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருப்பாரேயானால் மேற்குநாடுகளின் வாய்ப்பாடுகளை அவர் பயன்படுத்தியாக வேண்டும். அங்குதான் தமிழ் அரகாலயர்களின் பங்களிப்ப்பு மிகவும் பலன்தருவதாகவிருக்கும்.

திருமதி கோதாபயவுக்கு எஅமது அனுதாபம். சகல அரகாலயர்களுக்கும் நன்றி