கண்டி வைத்தியசாலை இரண்டாவது ‘தேசீய வைத்தியசாலையாகத்’ தரமுயர்கிறது

Spread the love

அக்டோபர் 30, 2019

கண்டி போதனா வைத்தியசாலை இன்று முதல் இலங்கையின் இரண்டாவது தேசீய வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்படுகிறது என மருத்துவ சேவைகள் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அறிவித்தார்.

கண்டி தேசீய வைத்தியசாலை மகப் பேற்றுப் பிரிவு

நாட்டின் தேசீய வைத்தியசாலையாக இதுவரை கொழும்பு வைத்தியசாலை மட்டுமே இருந்துவந்தது.

2500 படுக்கைகளைக் கொண்ட இந்த வைத்தியசாலை நாட்டின் 7 மாகாணங்களிலுமுள்ள 60 வீதமான மக்களின் மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்யுமென அமைச்சர் தெரிவித்தார்.

1861 இல் கண்டி பொது வைத்தியசாலை என்ற பெயருடன் ஒவ்வாமைக் கட்டுப்பாட்டு (allergy control) தேவைகளுக்காக இது ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

பேராதனைப் பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவர்களும், கொழும்பு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த முதுகலை மருத்துவ மாணவர்களும், பயிற்சி நெறிகளைக் கற்கும் முதுகலை மாணவர்களும் இங்கு பயிற்சிகளைப் பெறுவார்கள். கண்டி செவிலியர்களுக்கான பயிற்சிகளும் இவ் வைத்தியசாலையில் வழங்கப்படும்.

குழந்தை வைத்தியம், மகப்பேறு வைத்தியம், இருதய வைத்தியம், நரம்பு வைத்தியம், சிறுநீரக வைத்தியம், கண் வைத்தியம், புற்றுநோய் வைத்தியம், உளநோய் வைத்தியம் ஆகியவற்றில் விசேட சேவைகள் இவ் வைத்தியசாலையில் வழங்கப்படவுள்ளது. இதை விடவும், எலும்பு வைத்தியம், பாம்புக் கடி வைத்தியம், தற்கொலைத் தடுப்பு உள்ளிட்ட 69 மேலதிக விசேட பிரிவுகள் இவ் வைத்தியசாலையில் இயங்கவுள்ளன.

இலங்கையில் வரலாற்றிலேயே முதலாவது இருதய மாற்றுச் சிகிச்சை ஜூலை 07, 2017 இல், கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது எனவும், இதைத் தொடர்ந்து தற்போதய மருத்துவ சேவைகள் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் பணிப்பின் பேரில் விசேட இருதய மாற்றுச் சிகிச்சைப் பிரிவொன்று இங்கு உருவாக்கப்பட்டதெனவும் கூறப்படுகிறது.

கண்டி வைத்தியசாலையில் மூன்று ஆலோசனைப் பிரிவுகளும், ஆறு பராமரிப்புப் பிரிவுகளும் இயங்குகின்றன. இருதய நோயாளிகளுக்கு நவீன கருவிகளின் பாவனையுடன், நாடிகளை விரித்துக் கொடுக்கும் (stenting) 24-மணி நேர சேவை இங்கு தற்போது இயங்குகிறது.

ஜப்பான்-சர்வதேச ஒத்துழைப்பு ஏஜென்சி (Japan International Cooperation Agency (JICA)) யின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 10 மாடிக் கட்டிடத்தில் அமைந்திருக்கும் ஆய்வுகூடம், வட மேற்கு, ஊவா, வடக்கு, கிழக்கு, வட மத்தி, மத்தி மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள வைததையசாலைகளுக்குத் தேவையான சேவைகளை வழங்குகிறது.

வெகு விரைவில் விபத்துக்கள், மன நோய் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு அவசர சேவைகளை வழங்கும் பிரிவொன்று இங்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகள், சிறுநீர் சுத்திகரிப்பு சேவைகளை இப் பிரிவு வழங்கும்.

நோயாளிகளின் சிகிச்சை வரலாற்றை 100 வீதம் பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருக்கும் மின்னியல் தரவுக் களஞ்சியம் (electronic storage system) உடனுக்குடன் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள உதவுகிறது.

2018 இல் கண்டி வைத்தியசாலை சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கியதற்காக தங்க விருதைப் பெற்றிருந்தது.

Print Friendly, PDF & Email
>/center>