கண்டியில் நடைபெறவிருந்த மனித உரிமைகள் தினக் கூட்டம் ‘புலிகளின் கூட்டமெனக்’ கூறி அனுமதி மறுப்பு
கண்டி, வத்தகமவில் உள்ள தேவாலய அருட்தந்தையினால், வெள்ளி 10 அன்று ஒழுங்கு செய்யப்படிருந்த மனித உரிமைகள் தினக் கொண்டாட்டமொன்றை, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டதெனக்கூறி, திகான பொலிஸ் தடை செய்துள்ளது.
கண்டி, முல்கம்பொல ஓட்டல் ஒன்றில் நடைபெறவிருந்த இக்கூட்டத்துக்கான இக்கூட்டத்தை நடத்த அனுமதிக்கக்கூடாது என ஓட்டல் நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றம் மூலம், பொலிஸ் தடுப்பாணை ஒன்றைப் பெற்றுள்ளது.
“கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்துதல்” என்ற தலைப்பில் வத்தேகமவில், மாத்தளை வீதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றின் அருட்தந்தை ஒருவர் இக்கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார். இக்கூட்டத்தில் கைதிகளாக இருக்கும் விடுதலைப் புலிகளின் குடும்பங்களுக்கும், காணாமலாக்கப்பட்ட சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவிருந்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி சிரிசேனவைக் கொலை செய்ய முயற்சித்தார் எனக்கைது செய்யப்பட்டு பின்னர் சிரிசேனவினால் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் உறுப்பினரான சேனன் என அழைக்கப்படும் சிவராஜ ஜெனிவன் இவ் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது.
உலக மனித உரிமைகள் தினமெனப் பிரகடனப்படுத்தப்பட்ட வெள்ளி 10 அன்று நடைபெறவிருந்த இக் கூட்டத்தை ஒழுங்குசெய்த அருட் தந்தை நத்தாரன்ம்பொத்தையில் மனித உரிமைகள் சபை அலுவலக்மொன்றை நடத்தி வருவதாக திகான பொலிஸ் தெரிவித்துள்ளது.