Science & Technology

கணனிவழித் திருட்டு: வயோதிபர் கவனம்!

தொழில்நுட்பத்தைப் பாவித்து பல திருட்டு / ஏமாற்று நடவடிக்கைகள் மிக நீண்டகாலமாக நடைபெற்று வந்தாலும் செயற்கை விவேகத்தின் (AI) வருகையுடன் ,கடந்த சில வருடங்களாக இவை புதிய வடிவங்களை எடுத்து வருகின்றன. தொழில்நுட்ப அறிவு குறைந்த பல முதியவர்களையே இத் திருட்டுக் கும்பல்கள் குறிவைத்து செயற்படுகின்றன என்பதால் அவர்களுக்கு வழங்கும் அறிவுரையாக இக்கட்டுரை வரையப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்க நிறுவனமான AARP எடுத்த கருத்துக் கணிப்பின்படி பின்வரும் வழிகளில் திருட்டுக் கும்பல்கள் தமது சாகசங்களைப் புரிந்து வருகின்றனர்:


1). கடவுச்சொல் (Password) திருட்டு – 87%

2). தகவற் திருட்டு (Phishing) – 84%

3). பொய்த் தகவற் பரப்பல் (Deepfake) – 85%

4). குரல் மாற்றல் (Voice Cloning) – 84%

5). அடையாள மாற்றல் (Synthetic Identities) – 83%

6). தானியக்க திருட்டு (Automated Scams) – 81%

மேற்காணும் நடைமுறைகளை ஆராய்வதர்கு முன் கணனி தொழிற்பாடு மற்றும் செயற்கை விவேகம் பற்றி ஒரு எளிய விளக்கம்.

1946 வாக்கில் கணனித் தொழில்நுட்பம் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து கற்றல் (learning) என்ற சொல் மீது ஒரு புதிய வெளிச்சம் பாய்ச்சப்பட்டது. அதாவது முதன் முதலாக ஒரு எழுத்தை / சொல்லை / வடிவத்தைக் கணனிக்கு அறிமுகப்படுத்தும் செயற்பாட்டை கற்பித்தல் (training) என்றும் அவ்விடயத்தை அக் கணனி ‘மனப்பாடம்’ செய்துகொள்ளும் செயற்பாட்டை கற்றல் (learning ) என்றும் வல்லுனர்களால் அப்போது பதப்படுத்தப்பட்டது. (செயற்கை விவேகம் பற்றிப் புதிது புதிதாக முளைத்துக்கொண்டிருக்கும் சொல்லாடல்களில் இச்சொற்களை நீங்களும் சந்திக்கலாம் என்பதால் அவற்றை இங்கே தருகிறேன்). கணனித் தொழில் நுட்பமும் ஒரு வகையில் இயற்கையிலிருந்துதான் ‘கற்றுக்’ கொள்கிறது என்ற வகையில் மேற்படி செய்கையை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம். ஒருவர் ஒரு குழந்தைக்கு முதன் முதலாகத் தனது நாயைக் காட்டி இது “நாய்” என்று கூறியதும் அக்குழந்தையின் அரும்பும் நரம்புக் கலங்களில் நாயினுடைய தோற்றமும் (visual), அதற்கு கொடுக்கப்பட்ட பெயரும் (label) நிரந்தரமாகச் சேமிக்கப்பட்டு விடுகின்றன. இந்த நடைமுறையே கற்பித்தல் / கற்றல் என எமக்கு அறிவுறுத்தப்பட்டது. குழந்தையின் இந்த சேமக்கலங்கள் (neurons) இறந்துபோகும்வரை அல்லது அவற்றுடனான தொடர்பாடல் துண்டிக்கப்படும்வரை, அக்குழந்தை வேறெந்தவொரு நாயைக் கண்டாலும் அதன் உருவத்தை ஒப்பிட்டு அடையாளத்தை வெளிப்படுத்தும். கணனித் தொழில் நுட்பத்திலும் இதே நடைமுறைதான். குழந்தையின் நரம்புக் கலத்திற்குப் பதிலாக தகவல் சேமிக்கப்பட்டிருக்கும் கணனியின் பகுதியை ROM (Read Only Memory) என்கிறோம். இந்த ROM இற்குள் முதல் தடவையாக சேமிக்கப்படும் தகவலே (data). கேட்கப்படும்போது, அது திரையில் காட்டப்படுகிறது.

இப்படிச் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தையும் நிரந்தரமாகச் சேமித்து வைக்க கணனியில் போதிய இடமில்லாதபோது மேலதிக external hard drive களிலோ அல்லது cloud server களிலோ சேமித்து வைக்கிறோம். தேவையானபோது கணனி இத்தகவல்களை வெளிக்கொணர்ந்து தற்காலிக Memory சிப்ஸ்களில் (Random Access Memory (RAM)) இல் வைத்து அலசி ஆராய்ந்து முடிவுகளை எடுக்கிறது. கணனிக்கான மின்சக்தி துண்டிக்கப்பட்டதும் RAM களில் இருந்த தகவல்கள் அழிந்துபோக ROM களில் அல்லது hard drive களில் சேமிக்கப்படும் பழைய / புதிய தகவல்கள் நிரந்தரமாகச் சேமிக்கப்படுகின்றன. இதுவே கணனியின் அடிப்படைத் தொழிற்பாடு.

அப்படியானால் AI யின் தொழில் என்ன என நீங்கள் கேட்கலாம்.

AI தொழில்நுட்பம் புதியதொரு விடயமேயல்ல. மனித விவேகத்தை அடியொட்டி உருவாக்கப்பட்ட தொழில்நுட்பக் காலத்திலிருந்தே கணனிகள் செய்து வருவது செயற்கை விவேக செயற்பாடுகள் தான். ஆனால் இப்போது அவை தரவுச் சேகரிப்பிலும், வேகத்திலும் மனித மூளையின் திறனையும் மீறிச் செயற்பட ஆரம்பித்து விட்டதனால் அதைச் செயற்கை விவேகம் எனப் பெயரிட்டிருக்கிறார்கள். புதிய மொந்தையில் பழைய ஆனால் வெறியூட்டப்பட்ட கள், அவ்வளவுதான். இதுவரை காலமும் அதனால் மனித மூளையை வெல்ல முடியாமற் போனதற்கு முக்கியமான மூன்று காரணங்கள் உண்டு: 1). போதுமான தகவல்கள் சேகரிக்கப்படாமை 2). பிரமாண்டமான தகவற் சேமக்கலங்கள் (servers) இல்லாமை 3). இத்தகவல்களை நொடிப்பொழுதுகளில் அலசி ஆராயத்தக்க வேகமுள்ள processors உருவாக்கப்படாமை.

தகவற் போதாமை: இணைய வெளியிலிருந்து தகவல்களை உருவி எடுக்கும் செயற்பாட்டை 1990 இல் கனடாவின் மக்கில் பல்கலைக்கழக மாணவரான அலன் எம்ரேஜ் என்பவர் கண்டு பிடித்தார். பின்னர்1998 இல் கூகிள் இதை ‘தகவல் தேடு தளமாக’ (Search Engine) விரிவு படுத்தியது. இதன் மூலம் பெறப்பட்ட தகவல்களை விற்று கூகிள் பெருந்தொகையான பணத்தை ஈட்டியதைக் கண்ட இதர தேடுதளங்களும் முகநூல் போன்ற வலைத்தளங்களும் தமது பாவனையாளர்களின் பிரத்தியேக தகவல்களைப் பின்னணியிலிருந்து உருவி வேறு நிறுவனங்களுக்கு விற்றுப் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தன. ஆனால் இத்தகவல்களை அலசி ஆராய்ந்து பொதுமக்களுக்கு உதவும் வகையில் அவை மினக்கெடவில்லை. அந்த வேலையைச் செய்யவென ஆரம்பிக்கப்பட்டது தான் ‘செயற்கை விவேகம்’. ஆரம்பத்தில் இது ஒரு இலாப நோக்கற்ற, மக்கள் சேவைக்கான அமைப்பாகவே உருவாக்கப்பட்டது. பின்னர் இதனால் பெருமளவு பணத்தைச் சம்பாதிக்கலாம் என்று அறிந்தவுடன் பல மூலைகளிலுமிருந்து புதுப்புது AI நிறுவனங்களும், செயலிகளை உருவாக்கும் நிறுவனங்களும் முளைக்க ஆரம்பித்து விட்டன. இப்போது அதைக் கட்டுப்படுத்துவதே பெரும் சிரமமாகிவிட்டது. பூதம் கூசாவிலிருந்து புறப்பட்டு விட்டது.

இரைமீட்பதற்குப் போதுமான அளவு (இப்போதைக்கு) தகவல்களை வைத்துக்கொண்டு AI தனது சாகசங்களைக் காட்ட ஆரம்பித்து விட்டது. போதாததற்கு முகநூல் போன்ற வலைத் தளங்கள் மூன்றாம் நிறுவனங்களின் செயலிகளையும் (apps) தமது தளங்களில் உலாவ விட்டு தகவல் சேகரிப்பு விபசாரத்தைச் செய்து வருகின்றன. அவர்கள் சம்பாதிக்கும் வருமானத்திலும் ஒரு கணிசமான பங்கைப் பெறுகின்றன. இதன் மூலம் சில சட்டச் சிக்கல்களிலிருந்து இத்தளங்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்வது என்பது வேறு விடயம். இத்தளங்களினாலும், அங்கு உலவும் மூன்றாம் தரப்பு செயலிகளாலும் பாவனையாளர்களிடமிருந்து உருவப்படும் தகவல்களை முதலீடாகக் கொண்டு செயற்கை விவேகம் ஆரம்பித்தது. இதன் பின்னர் ChatGPT போன்ற ChatBot தளங்கள் தம்மை நாடி (ஆலோசனை கேட்க) வருபவர்களிடம் நயவஞ்சகமாக உரையாடி அப்பாவனையாளர்களின் அந்தரங்க தகவல்களைச் சேகரித்து தமது தகவற் சேமக் கலத்தைப் பெருப்பித்துக் கொள்கின்றன. இப்படியான ‘உரையாடல்களை’ உங்களுக்கு இலவசமாகத் தருவதாகக் கூறி உங்களிடமிருந்து மேலும் மேலும் தகவல்களைச் சேகரித்து மூலம் தம்மைத் ‘திருத்திக் கொள்வதாகத்’ தம்பட்டமடிக்கின்றன. இவ்வேளைகளில் உங்களது பலம், பலவீனங்களை அறியும் வகையில் உங்கள் நண்பராகவும், எதிரியாகவும், ஆலோசகராகவும், காதல் துணையாகவும் நடித்து தம்மை வளர்த்துக்கொள்ளும் முறைக்கு அவர்கள் வைத்த பெயர் தான் ‘Training’.

தகவற் சேமக்கலங்கள் (Servers): நான் ஏற்கெனவே கூறியது போல தகவல்களை நிரந்தரமாகச் சேமிக்கும் வழிகள் பல. முன்னைய Hard Drive போன்ற சுழரும் தட்டுகளை விட Solid State போன்ற சிப் களில் சேமிக்கப்படும் தகவல்களைப் பதிவதற்கும் மீட்பதற்கும் வெகு சொற்பமான நேரமே தேவையென்பதோடு அவற்றிற்கான இடத் தேவையும் மிகவும் சிறிதாகவும் இருப்பதால் இப்படியான சிப்ஸ்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டவையே Serverகள் எனப்படுகின்றன. இச்சேமக்கலங்களில் பல்லாயிரக் கணக்கான சிப்ஸ்கள் ஒன்றிணைக்கப்பட்டு இருப்பதால் தகவற் பரிமாற்றம் அதிகரிக்க அதிகரிக்க இச்சிப்ஸ்கள் விரைவாக சூடாகிக் கொள்வதால் இப்படியான சேர்வர்கள் நிலக்கீழறைகளிலும் குளிரூட்டப்பட்ட அறைகளிலும் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. DELL மற்றும் HP போன்ற நிறுவனங்கள் உலகில் சிறந்த சேர்வர்களைத் தயாரிக்கின்றன.

Processors: கண்னியின் மூளை எனப்படும் பகுதியான சிப் (microprocessor) -சக்கரவர்த்தி – இதுதான். இதை விட மேலும் உப தொழில்களைச் செய்வதற்காய் சிற்றரசர்கள் போல வேறு சிப்ஸ்களும் உண்டு. இச் சிப்ஸ்கள் எவ்வளவு துரிதமாகச் செயற்படுகின்றனவோ அவ்வளவு விரைவாக பாவனையாளரின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். தற்போது உலகில் சிறந்த சிப்ஸ்களைத் தயாரிக்கும் நாடுகள் தாய்வான் மற்றும் தென் கொரியா போன்றவை. Intel, AMD போன்ற நிறுவனங்கள் மிக துரிதமாகச் செயற்படும் சிப்ஸ்களைத் தயாரிப்பன எனப் பெயர் பெற்றவை. அதே போல அதிவேகமான வீடியோக்களை process பண்ணும் சிப்ஸ்களும் இச்செயற்பாட்டுக்கு உதவி செய்கின்றன.

சமூக வலைத் தளங்கள் மற்றும் கூகிள் போன்ற ‘தேடுதளங்கள்’ போன்றவற்றில் நீங்கள் ஒரு தகவலைத் தேடும்போது அது உங்களது இருப்பிடம், விருப்பு வெறுப்புகள், நட்புகள், விருப்பமான உணவுகள் போன்ற வாழ்க்கைத் தடங்களையும் கலாச்சாரப் பழக்க வழக்கங்களையும் உங்களுக்குத் தெரியாமலேயே உருவிச் சேமித்துக்கொள்ளும். உங்களது விருப்ப வெறுப்புக்களை ஆராய்ந்து அவற்றுடன் தொடர்பான பொருட்களை விற்கும் நிறுவனங்களுடன் இணைப்பை ஏற்படுத்தி விடுகின்றன. இதன் மூலம் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் வலைத்தளங்களும் உங்கள் செலவில் பயன் பெறுகின்றன. ஆனால் செயற்கை விவேகம் சற்று வித்தியாசமானது. தமக்குக் கிடைக்கும், உங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு அது உங்களைப் பற்றிய profile ஒன்றைக் கட்டியெழுப்பிவிடுகின்றது. அத்தோடு நின்றுவிடாமல் உங்களைப் போன்ற குணாதிசயங்களைக் கொண்டவர்களையும் ஒன்றிணைத்து உங்களிடமுள்ள பொதுமைகளைக் கோர்த்து செயற்கை விவேகம் இன்னுமொரு தகவற் கோவையையும் தயாரித்துவிடுகிறது. ஏறத்தாழ சோதிடர்கள் பாவிக்கும் ‘காண்டம்’ தகவற் கோவைபோல். உங்கள் வாழிடம், நட்புகள், உறவுகள் போன்றவற்றைச் சேகரித்து அவற்றுடன் தொடர்புடைய சகல விடயங்களையும் நொடிப்பொழுதில் கட்டியெழுப்பி விடுகிறது. ஒவ்வொரு தடவையும் அதற்கு கிடைக்கும் வாய்ப்பைப் பாவித்து அது தன்னை train பண்ணிக் கொள்கிறது. இதே வேளை புதிதாக AI செயலிகளை உருவாக்கவல்ல மூளைசாலிகள் ஏற்கெனவே இலவசமாகக் கிடைக்கும் (ChatGPT) தகவல்களை வைத்துக்கொண்டு புதிய பல செயலிகளை உருவாக்கிவிடுகிறார்கள். இப்படியானவை தான் இளையத் தளங்களில் நீங்கள் பார்க்கும் ‘பேசும் படங்கள்’.

இத் தொழில்நுட்பத்தின் பின்னால் இன்னுமொரு மர்ம விசையும் இயங்குகிறது. சில வருடங்களுக்கு முன்னால் GPS எனப்படும் செயற்கை விண்மதிகள் வானில் ஏவப்பட்டன. இவற்றின் முதல் நோக்கமாக இதர நாடுகளின் இராணுவ, பொருளாதார இரகசியங்களை அறிவதாகவே இருந்தது. இத்தொழில்நுட்பத்தை உருவாக்க அமெரிக்கா போன்ற பலமான நாடுகள் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்து பெருந்தொகையான முதலீடுகளையும் செய்துகொண்டன. திட்டம் வெற்றி பெற்றதும் இத்தொழில்நுட்பத்தின் துல்லியம் குறைந்த ‘சிவிலியன் வேர்ஸன்களை’ பொதுமக்கள் பாவனைக்கு விற்று (வாகனங்களில்) செலவை மீட்டுக்கொண்டன. AI விடயத்திலும் அபப்டித்தான். “நாட்டின் தேசிய பாதுகாப்பு” என்ற அச்சுறுத்தலுடன் AI போன்ற அனைத்து புதிய தொழில்நுட்பங்களினதும் துல்லியம் கூடிய ‘மிலிட்டரி வேர்ஸன்கள்’ அரசுக்கு மட்டுமே சொந்தம். ஒரு நாட்டின் எல்லையைக் கடந்து உள்ளே போகும் ஒருவரது படத்தை வைத்துக்கொண்டு அவரைப் பற்றிய சகல தரவுகளையும் நொடிப்பொழுதில் கொண்டுவர AI தொழில்நுட்பத்தினால் முடியும். ஆனால் இத் தொழில்நுட்பம் பொதுமக்களுக்கு (இப்போதைக்கு) கிடைக்காது.

இதுவரை பாவனைக்கு விடப்பட்ட AI தொழில்நுட்பத்தில் அதிக பயனைத் தருவதாக அறியப்பட்ட ஒன்று மருத்துவ சமூகத்தினால் பாவிக்கப்படும் செயலிகள். X-Ray, Ultrasound, MRI, FMRI போன்ற நோயறியும் தொழில்நுட்பங்களை மருத்துவ பயிற்சிகளைப் பெற்றவர்களே (Radilogists) பாவித்து வருகிறார்கள். இக்கருவிகள் எடுக்கும் ‘படங்களை / காட்சிகளை’ வைத்துக்கொண்டு நோய்களைத் தீர்மானிக்கும் திறமை இவர்களிடமுண்டு. ஆனால் AI தொழில்நுட்பம் இவர்களது திறமைகளைகளையும் மிஞ்சிவிடுகிறது எனத் தற்போது கூறப்படுகிறது. மனித உடலின் தொழிற்பாடுகளை அக்குவேறு ஆணி வேறாகப் பகுத்தறிந்து AI விரைவில் மருதுவர்களையே வீட்டுக்கு அனுப்பிவிடாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இனி AI யைப் பாவித்து திருடர்கள் காட்டிவரும் கைங்கரியங்கள் பற்றிப் பார்ப்போம்.

1). கடவுச் சொற் திருட்டு

கணனியையோ அல்லது மூன்றாம் தரப்பு இணையத்தளங்களையோ பாவிக்கும் பலர் தமது பிரத்தியேக தகவல்களைக் கொண்டிருக்கும் வங்கிக் கணக்கு, வரித்திணைக்களக் கணக்கு, மருத்துவக் குறிப்புக் கணக்கு, மின்னஞ்சல் கணக்கு போன்ற தளங்களையும், சமூக வலைத்தளங்களில் தமது பக்கங்களையும் தரிசிக்கும்போது கடவுச் சொல் ஒன்றின் மூலம் இக்கணக்குகளைப் பாதுகாத்து வைத்திருப்பீர்கள். இவற்றின் திறப்புக்கள் (கடவுச் சொற்கள்) உங்களிடமும் அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களிடமும் பாதுகாப்பாக இருக்கும். இச்சொற்கள் விசேட எழுத்துக்கள், அடையாளங்கள், குறியீடுகளைக் கொண்டிருப்பது வழக்கம். இவற்றை நினைவில் வைத்திருக்க ஏதுவாக பலரும் தமது பெயர்களின் சுருக்கங்களையோ அல்லது நெருக்கமானவர்களின் சுருக்கமான பெயர்கள் மற்றும் பிறந்த திகதி, ஆண்டு போன்றவற்றின் பகுதிகளையோ கொண்டு தமது கடவுச் சொற்களை உருவாக்குகிறார்கள். பெரும்பாலான தருணங்களில் இவை பாதுகாப்பாக இருப்பினும் செயற்கை விவேகம் இப்பாதுகாப்பை உடைக்கும் வழிகளைத் திருடர்களுக்குக் கற்றுக் கொடுத்து விடுகிறது. உங்கள் profile ஐக் கட்டியெழுப்பும் செயற்கை விவேகம் உங்கள் பிறந்த இடம், பெயர், பிறந்த திகதி, வயது, உங்களுக்கு நெருக்கமானவர்கள் பற்றியெல்லாம் அறிந்து வைத்திருப்பதால் ஒரு கெட்டிக்காரத் திருடன் இவற்றை வைத்து கடவுச்சொற்களை சிருஷ்டித்துக் கொள்ள முடியும். Hacking எனப் பொதுவாக அழைக்கப்படும் இம்முறையின் மூலம் திருடர்கள் உங்கள் கடவுச்சொற்களைத் திருடவோ அல்லது மீளுருவாக்கிக்கொள்ளவோ முடியும்.

இதே வேளை எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலோ அல்லது சிறு தொழில் (கடைகள்) நிலையங்களிலோ கிறெடிற் கார்ட் பாவிப்பவர்களது PIN எண்களும் திருடர்களால் கையகப்படுத்தப்படுகின்றன. உங்கள் கிறெடிட் கார்ட்டுகளின் பின்பக்கத்தில் இருக்கும் magnetic strip இல் தான் உங்கள் பிரத்தியேக தகவல்கள் பதியப்பட்டுள்ளன. இதை நீங்கள் கிறெடிட் கார்ட் மெஷினுக்குள் நுழைக்கும்போது இவ்வியந்திரம் உங்கள் தகவல்களை வாசித்து கிறெடிட் கார்ட் நிறுவனக் கணக்குடன் ஒப்பிட்டு நீங்கள் கார்ர்டுக்கு உரியவர்தானா என சரிபார்த்துக் கொள்ளும். அதற்கு முன்னர் உங்களுக்கும் கிறெடிட் கார்ட் நிறுவனத்துக்கும் மட்டுமே தெரிந்த PIN இலக்கத்தை நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும்.

சில சந்தேகத்துக்குரிய வியாபார / எரிபொருள் நிலையங்களில் திருடர்கள் இந்த ‘கிறெடிட் கார்ட்’ மெஷினையே அகற்றிவிட்டுத் அசல் போலிருக்கும் தமது சொந்த மெஷின்களைப் பொருத்தி விடுகிறார்கள். இது உங்கள் கணக்கு விபரங்களை மட்டுமல்ல நீங்கள் பதியும் PIN எண்ணையும் பிரதி செய்து வைத்துவிடும். இவற்றைக் கொண்டு திருடர்கள் புதிய கார்ட்டுகளைச் செய்துவிடுவார்கள். சில நிலையங்களில் தலைக்கு மேலே பொருத்தியிருக்கும் கமராக்கள் மூலம் PIN எண்களை அறிந்துகொள்வதுமுண்டு. சனநடமாட்டம் குறைந்த, சந்தேகத்துக்குரிய நிலையங்களைப் பாவிப்பவர்கள் பம்புகளிலுள்ள கிறெடிட் கார்ட் மெஷின்கள் புதியனவாகவோ அல்லது முறையாகப் பொருத்தப்படாமலோ (இடைவெளிகளுடன் கூடிய) இருப்பதை அவதானித்தால் அம்மெஷின்களை கைகளால் இழுத்துப்பார்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இவை தற்காலிகமாகப் பொருத்தப்படுவதால் இலகுவாக வெளியே வந்துவிடுகின்றன என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அத்தோடு தலைக்கு மேலே கமராக்கள் இம்மெஷின்களை நோக்கி பொருத்தப்பட்டுள்ளனவா என்பதையும் அவதானித்துக்கொள்ள வேண்டும்.

2). தகவற் திருட்டு

நீங்கள் மின்னஞ்சல் மூலமோ அல்லது வட்ஸப் மூலமோ தகவற் பரிமாற்றங்களைச் செய்பவாராகில் இவற்றில் பதிவாகியிருக்கும் பிரத்தியேக தகவல்களை, சம்பந்தப்பட்டவரைத் தவிர வேறெவராலும் பார்க்க முடியாது எனவே நினைத்திருப்பீர்கள். End-to-end encryption (E2EE) என்னும் பொறிமுறையின் மூலம் அனுப்புபவரது கணனி அனுப்பப்படும் தகவலைக் ‘குழப்பி’ சங்கேத மொழியில் அனுப்புகிறது. அதே போன்று இத்தகவலை வாசிப்பவரது கணனியும் இத்தகவலைச் சீர்செய்து (decrypt) அனுப்பப்பட்ட வகையில் மீள ஒப்புவிக்கிறது. இன்டர்நெட் வழங்குனருட்பட, எவராலுமே இடையிலிருக்கும் இக்குழப்பப்பட்ட செய்தியை வாசிக்க முடியாது. ஆனால் செயற்கை விவேகம் இக்குழப்பத்தைச் சீர் செய்து திருடர்களுக்கு உதவி செய்வதாகக் கூறுகிறார்கள். இதனால் மின்னஞ்சல்கள் மூலம் பிரத்தியேக தகவல்களை அனுப்புவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். எம்மில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தைத் தவிர வேறுமொழிகளில் தகவல்களை அனுப்பினால் தமிழ்த் திருடர்களைத் தவிர ஏனையோரிடம் மாட்டிக்கொள்ளத் தேவையில்லை.

ஒரு குறிக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் நிறுவனமோ அல்லது தனி ஒருவரோ உங்களுக்கு பொருட்களை விற்கவோ அல்லது இம்சை தரும் குறிப்புக்களை அனுப்பினாலோ அல்லது மிரட்டல் கடிதங்களை அனுப்பினாலோ, பணம் தருமதி இருக்கிறதென்று எச்சரித்தாலோ இவை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படிக் கிடைக்கும் மின்னஞ்சல்கள் பற்றி ஏற்கெனவே புகார்கள் செய்யப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மின்னஞ்சல் பரிவர்த்தனை நிறுவனம் இம்மின்னஞ்சல் கணக்குகளுக்கு ‘SPAM’ என லேபலை ஒட்டிவிடும். Spam Filter எனப்படும் இச்செய்கையால் இப்படியான கடிதங்கள் உங்களது inbox இல் போகாமல் spam folder இற்குள் சேமிக்கப்பட்டுவிடும். ஆனால் இந்த AI யின் வருகைக்குப் பிறகு இப்படியான கடிதங்கள் spam filter ஐ வெற்றிகரமாக உடைத்துக்கொண்டு உங்கள் inbox இல் வந்து குந்தி விடுகின்றன. இக்கடிதங்களை நீங்கள் திறக்கும்போது உங்கள் பிரத்தியேக விடயங்களை அது உருவிக்கொள்ள வாய்ப்பாகிவிடுகிறது. எனவே சந்தேகப்படும் மின்னஞ்சல்களை நீங்கள் திறக்கவே கூடாது.

3). தகவற் குழப்பம் (பொய்த் தகவல்கள் Deep Fake)

உங்கள் வங்கி, வருமானவரித் திணைக்களம், நகரசபை போன்ற நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலிருந்து உத்தியோகபூர்வ கடிதங்களைப் போல மின்னஞ்சல்கள் வரலாம். இவை பெரும்பாலும் நீங்கள் ‘செய்த ஒரு குற்றத்திற்கான’ தண்டத்தைச் செலுத்தும்படியோ அல்லது இது தொடர்பாகத் தொடர்புகொள்ளும்படியோ அவசரச் செய்திகளாக (Notifications) உங்களுக்கு அனுப்பப்படலாம். இவற்றையும் நீங்கள் உதாசீனம் செய்துவிட வேண்டும். வருமானவரித் திணைக்களம், நகரசபைகள் போன்றவை தபால் மூலமாகவோ அல்லது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட மின்னஞ்சல்கள் மூலமாகவோ மட்டுமே தொடர்பு கொள்ளும். அது மட்டுமல்லாது அவர்களது ‘தண்டங்கள்’ செலுத்தப்படுவதற்கு போதுமான கால அவகாசங்களையும் தருவார்கள். ஆனால் திருடர்களது கால அவகாசம் சில நாட்களாக இருப்பது வழக்கம்.

4). குரல் மாற்றம் (Voice Cloning)

AI இன் வருகையால் அதிக பலன் பெறும் திருடர்கள் ‘கப்பம்’ கேட்பவர்களே. இது பெரும்பாலும் வயோதிபர்களையும் பலவீனமானவர்களையும் குறி வைத்து செய்யப்படுமொன்று. உதாரணத்திற்கு உங்களுக்கு ஒரு தொலைபேசி வருகிறது. மறுபக்கத்தில் உங்கள் பேரனோ, பேத்தியோ தமது பெயர்களைச் சொல்லி “நான் இந்த நாட்டிற்கு / நகரத்திற்கு ஒரு தேவை காரணமாக வந்தபோது எனது ‘பேர்ஸ் / வலட்’ தொலைந்துவிட்டது. எனக்கு அவசரமாகக் கொஞ்சம் பணம் தேவை. இந்த கணக்குக்கு அனுப்பிவிட முடியுமா?” என அக்குரல் கேட்கும். குரலை நீங்கள் உடனடியாக அடையாளம் கண்டுவிட்டீர்கள். ‘அப்பா / அம்மாவிடம் கேட்டால் பிரச்சினை வருமென்று என்னிடம் கேட்கிறானாக்கும்’ என்ற இரக்க சிந்தனையில் நீங்கள் உடனடியாக அவ்வேண்டுகோளை நிறைவேற்றி விடுகிறீர்கள். பின்னர் சாவகாசமாக விசாரித்தபோது தான் தெரியவந்தது உங்கள் பேரனோ, பேத்தியோ எங்கேயும் போகவில்லை. இதற்குள் திருடர்கள் உங்கள் வங்கியிலிருந்து பலநாட் சேமிப்பை அகற்றி விடுவார்கள்.

இது எப்படி நடைபெறுகிறது? நீங்கள் தொலைபேசியில் கேட்ட குரலைத் தயாரித்துக் கொடுப்பது AI. உங்கள் பேரனதோ அல்லது பேத்தியினதோ உண்மையான குரல்கள் பாடசாலை அல்லது பொது நிகழ்வுகளில் பதிவுசெய்யப்பட்டு இணையவெளியில் உலாவுமானால் அந்த ஒலிப்பதிவைத் திருடர்கள் பிரதி செய்துவிடுகிறார்கள். இதன் அலை வடிவத்தை AI ஆராய்ந்து அதன் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப (voice signature), தேவைக்கேற்ற வகையில், புதிய குரல்களை கணப்பொழுதில் வடிவமைத்துக் கொடுத்துவிடுகிறது. “அம்மம்மா நான் உங்கள் பேரன் பேசுகிறேன்” என்ற வார்த்தையை கணனியில் டைப் செய்யும்போது அது உங்கள் பேரனின் குரலாக வெளிவரும். இதையே voice cloning என்கிறார்கள். மேற்கு நாடுகளில் ஏற்கெனவே இது பல தடவைகள் நடைபெற்றிருந்தாலும் நமது நாடுகளில் நடைபெற்றதாக நான் கேள்விப்படவில்லை. இப்படியான சந்தர்ப்பங்களில் உடனடியாக நீங்கள் செய்யவேண்டியது, ‘பேரனை / பேத்தியை’ அப்படியே லைனில் நிற்கும்படி சொல்லிவிட்டு இன்ன்னுமொரு தொலைபேசி மூலம் உண்மையான அவர்களது தொலைபேசிகளுக்கு அழைப்பை எடுத்து விசாரித்துக் கொள்வதுவே. அதையும் விடச் சிறந்தது ‘சந்தேகத்துக்குரிய இலக்கங்களிலிருந்து’ வரும் தொலைபேசி அழைப்புக்களை எடுப்பதைத் தவிர்ப்பது.

AI இல் கொஞ்சம் மெருகூட்டப்பட்ட வடிவம் Generative AI என அழைக்கப்படுகிறது. ஏற்கெனவே பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு எழுத்துக்களையோ (text), காட்சிகளையோ (images), ஒலித்துண்டுகளையோ (audio) விரும்பிய வகையில் பிரதி செய்து தருகிறது இந்த GenAI. பழைய கருப்பு / வெள்ளைப் புகைப்படங்களிலிருந்து உருவங்கள் எழுந்துவந்து பேசுவதன் பின்னால் இருப்பது இந்த GenAI யின் உழைப்புத்தான்.

5). அடையாள மாற்றம் (Synthetic Identities)

பெரும்பாலான நாடுகளில் கடவுச்சீட்டு முதல் அடையாள அட்டை வரை தனித்துவமான அடையாளங்களைக் கொண்டுள்ளவையாக இருப்பது வழக்கம். கனடாவைப் பொறுத்தவரை ‘சோஷியல் இன்சூரன்ஸ் நம்பர்’ எனப்படும் இலக்கம் ஒவ்வொரு பிரஜைக்கும் வழங்கப்படும். இவ்விலக்கம் தானெழுந்தவாரியாக உருவாக்கப்படுவதில்லை. உங்கள் பிறந்த திகதியை வைத்து ஒரு சூத்திரம் மூலம் இவ்விலக்கம் உருவாக்கப்படுகிறது. கடவுச்சீட்டு உருவாக்கப்படுவது முதல் வங்கிக்கணக்கு ஆரம்பிப்பது வரைக்கும் இந்த ‘சின்’ இலக்கம் தேவை. திருடர்கள் இதற்காகப் பெருமளவு பணத்தை அறவிடுவது வழக்கம். இப்போது AI இந்த வேலைகளை எளிதாக்கி விட்டிருக்கிறது.

6). தானியக்கத் திருட்டு (Automated Scams)

சில திருடர்கள் ஒவ்வொன்றாகத் தமது திருட்டு தொழிலைச் செய்து நேரத்தை வீணடிக்காமல் AI தொழில்நுட்பத்தைப் பாவித்து கணனியைக் கொண்டே திரும்பத் திரும்ப சில காரியங்களைச் செய்வதற்குப் பழக்கிவிடுகிறார்கள். Bots எனப்படும் சில புரோகிராம்கள் மீண்டும் மீண்டும் ஒரே நடவடிக்கையை மேற்கொண்டு சில காரியங்களை நிறைவேற்றுகின்றன. உதாரணத்திற்கு ஒரு இணையத்தளத்தில் தலைகாட்டும் விளம்பரமொன்றை பார்க்கும் ஒருவர் ‘கிளிக்’ செய்து சில் நொடிகள் பார்த்தால் தான் அவ்விளம்பதரரிடமிருந்து இணையத்தளத்திற்கும் பணம் கிடைக்கும் (சில சதங்கள்). இதற்காகச் சிலர் தமது பேஸ்மெண்ட்டுகளில் பத்து இருபது கணனிகளை வைத்து (வித்தியாசமான IP addresses உடன் ) சில பள்ளிக்கூடப் பிள்ளைகளைப் பாவித்து இவ்விளம்பரங்களைக் ‘கிளிக்’ செய்து பணம் உழைப்பார்கள். இது சில வருடங்களுக்கு முன்னர். இப்போது Bots என்ற புரோகிராம் மூலம் ஒருவரே இதைச் செய்துகொள்ள முடியும். எனவே நீங்கள் பார்க்கும் யூ-டியூப் சனலை 5 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள் என்றால் அதை Mr.Bot தான் அதிகம் பார்த்திருக்க வாய்ப்புண்டு. சீனாவில் இது ஒரு பெரிய வியாபாரமாக இயங்குகிறது. சில நிறுவனங்கள் bots ஐ முறியடிக்கும் வகையில் சில புரோகிராம்களை செய்து வைத்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.

1). தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் SIN இலக்கம், வங்கிக்கணக்கு விபரம் தரும்படி கேட்டல். இணைய வழியாக நீங்கள் நிரப்பும் எந்தப் பத்திரத்திலும் SIN ஒரு தேர்வாக (option) மட்டுமே இருக்கும்; கட்டாயமாகக் கொடுக்கப்படவேண்டுமென்று நிர்ப்பந்திக்க முடியாது. யாராவது நிர்ப்பந்தித்தால் அது திருட்டு கும்பலாக மட்டுமே இருக்க முடியும்.

2). உங்களது பழைய விலாசம், பழைய தொலைபேசி இலக்கம் போன்றவற்றுடன் மேலதிக தகவல்களைக் கேட்டல். இங்கு திருடர்கள் AI போன்ற பொறிமுறைகளைப் பாவிப்பதால் அவை பழைய தகவல்களைக் கிண்டியெடுத்துக்கொண்டு வருவது வழக்கம். இதுவும் ஆபத்தின் ஒரு அறிகுறி.

3). பண்டிதத்தனமான எழுத்து நடை. தற்போதைய காலங்களில் தொடர்பாடலுக்காகப் பாவிக்கும் மொழிநடை மிகவும் எளிதானதும், சாதாரணதும், நவீனமானதுமான வார்த்தைப் பிரயோகங்களையும் கொண்டிருக்கும். ஆனால் AI மூலம் எழுதப்படும் கடிதங்கள் இன்னமும் பழைய ஷேக்ஸ்பியர் காலத்து இலக்கண நடையுடன் கனதியான வார்த்தைப்பிரயோகங்களையும் கொண்டிருப்பதால் அவை மீது சந்தேகம் கொள்ள வேண்டும்.

4). அவசரமானதும், மிரட்டல் பாணியுடனும், எச்சரிக்கையுடனுமான கடிதங்கள். உதாரணத்திற்கு ‘தண்டத்தைச் செலுத்துவதற்கு போதிய அவகாசம் தராமை’; ‘கிறெடிட் கார்ட் மூலம் அல்லது wire transfer மூலம் தண்டத்தைச் செலுத்தும்படி நிர்ப்பந்தித்தல்; பொலிஸாரை அனுப்பி கைது செய்யப்போவதாக மிரட்டுதல் போன்ற உத்திகள் சந்தேகம் கொள்ள வைப்பவை.

5). வழக்கற்ற முறைகளில் பணம் செலுத்தும்படி வற்புறுத்தல். உதாரணத்திற்கு தண்டத்தின் பெறுமதிக்குச் சமனான Gift Card களை வாங்கி அனுப்பும்படி கோருதல் அல்லது கிறிப்டோ கறன்சி முறையிலோ அல்லது wire transfer முறையிலோ பணத்தை அனுப்பும்படி கோருதல் குறித்து அவதானம் தேவை.

6). சீரற்ற ஒலி / ஒளி (audio / video inconsistencies). சில திருடர்கள் கணனி செயலிகளைப் (apps) பாவித்து தொடர்பாடல்களைச் செய்கிறார்கள். குறிப்பாக கணனி மூலம் உருவாக்கப்பட்ட ஒலிச்செய்தியை, பெரும்பாலும் எச்சரிக்கையுடன், உங்கள் voice mail இல் விடுவார்கள். இவற்றை அவதானித்து செயற்படுவது நல்லது.

1). தொழில்நுட்பத்தைப் பாவித்து திருடர்கள் தம்மமைத் தாமே முன்னேற்றிக் கொள்வது போல நீங்களும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக்கொள்தல் அவசியம் (stay uptodate).

2). எங்கிருந்த தகவல் வருகிறதோ அதன் மூலத்தை அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் (verify source).

3). உங்கள் பிரத்தியேக தகவல்களைப் பகிர்ந்துகொள்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

(இக்கட்டுரை பயந்தருவதாயின் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள். மேலும் புதிய தகவல்களை தரமுடியும்)