கட்டாரிலிருந்து சூட்கேஸில் காசு கடத்திய இளவரசர் சார்ள்ஸ் – கிண்டியெடுக்கும் பிரித்தானிய ஊடகங்கள்

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் தனது ‘வேல்ஸ் அறக்கட்டளை நிதியத்துக்கென’ முன்னாள் கட்டார் ராஜ குடும்பத்தினரிடமிருந்து சட்டவிரோதமாக காசைப் பெற்றிருந்தார் என பிரித்தானிய ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. ‘வேல்ஸ் இளவரசர் அறக்கட்டளை நிதியம் ( Prince of Wales’s Charitable Fund (PWCF)) எனப்படும் தர்ம ஸ்தாபனத்தின் மூலம் இளவர்சர் நல்ல திட்டங்களுக்கு பண உதவி செய்துவருவதாகவும் கட்டாரின் அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள் பல தடவைகள் இந் நிதியத்துக்கு காசாக அன்பளிப்பைச் செய்துவந்திருக்கிறார்கள் என்றும் பிரித்தானிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. சார்ள்ஸ் கட்டாருக்குச் சென்று வரும்போதெல்லாம் சூட்கேஸ்களிலும் ஷொப்பிங் பாக்குகளிலும் இப் பணம் நிரப்பப்பட்டு அவருக்குக் கொடுக்கப்படுகிறது எனவும் தெரியவந்துள்ளது. 2011 முதல் 2015 வரையில் அவர் இப்படிக் கொண்டுவந்த பணம் சுமார் $3 மில்லியன் இருக்கலாமெனக் கருதப்படுகிரது.

இப் பணம் தவறான வழிகளில் கையாளப்பாடது என எவரும் குற்றம் சாட்டாவிட்டாலும் பிரித்தானியாவின் அறக்கட்டளை ஆணையம் இது குறித்து விசாரணைகளைச் செய்யவிருப்பதாக அறியப்படுகிறது.

2015 இல் மட்டும் 1 மில்லியன் ஸ்ரேர்லிங் பவுண்டுகள், 500 பவுண்ட் தாள்களாக இளவரசரிடம் கையளிக்கப்பட்டது. (2001 இரட்டைக் கோபுரத் தாக்குதல்களைத் தொடர்ந்து 500 பவுண்ட் தாள்கள் ‘பின்லாடன்’ என அழைக்கப்பட்டன. பயங்கரவாதிகளுக்கு வழங்கப்படும் பணம் பொதுவாக 500 பவுண்ட் தாள்களாக இருந்தமையால் அத் தாளுக்கு அப் பெயர் சூட்டப்பட்டது. 2019 இல் இத் தாள்கள் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டன). இளவரசரின் பணியாளர்கள் இத் தாள்களை எண்ணி அரச குடும்பத்தின் வங்கியான கூட்ஸ் பாங்கில் வைப்பில் இட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் சந்தேகத்துக்கு இடமாக எதுவும் நடைபெறவில்லையாயினும், பிரித்தானிய அறக்கட்டளை நிதியச் சட்டங்களின் படி, சந்தேகத்துக்கிடமான முறையில் ஒரு அறக்கட்டளைக்கு நிதி வழங்கப்படுமானால் அதன் மூலம் விசாரிக்கப்படவேண்டுமென்பது வழமை. அறக்கட்டளையின் கணக்குப் பரிசோதகர்கள் இப் பணம் சட்டவிரோதமாகப் பெறப்படவில்லை என்பதை அத்தாட்சிப் படுத்த வேண்டும். அது மட்டுமல்லாது இவ்வறக்கட்டளை ஆணையத்தின் விதிகளின்படி, 25,000 பவுண்டுகளுக்கு மேல் ஒரே தடவையில் பணம் பரிமாறப்படும்போது அதன் மூலம் பற்றி விசாரிக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமல்லாது இளவர்சர் சார்ள்ஸின் இன்னுமொரு தர்ம ஸ்தாபனமான ‘இளவரசர் பவுண்டேசன்’, சவூதி அரேபிய கோடீஸ்வரரான டாக்டர் மஹ்ஃபூஸ் மரே முபாரக்கிடமிருந்து பெருந்தொகையான பணத்தைப் பெற்றது எனவும் இதற்குப் பதிலாக அவருக்கு பிரித்தானிய குடியுரிமை வழங்கப்பட்டதெனவும் இது தொடர்பான விசாரணைகளும் நடைபெற்று வருவதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.