News & AnalysisSri Lanka

“கட்சி பேதங்களை விட்டுவிட்டு நாட்டைக் காப்பாற்றுங்கள்” – ரணிலிடம் முறுத்தெட்டுவ தேரர் வேண்டுகோள்

“நல்லாட்சி அரசை ஒதுக்கிவிட்டு எப்படியான தலைவர்களை நியமித்துள்ளீர்கள் என மக்கள் பிக்கு சமூகத்தைத் துளைத்தெடுக்கிறார்கள்” என அபயராம விகாரையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது விகாராதிபதி முறுத்தெட்டுவ ஆனந்த தேரர் ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்தார்.

” சட்டத்தை உருவாக்கும் அமைப்பாக இல்லாமல் பாராளுமன்றம், ஏமாற்றுப் பேர்வழிகளின் கூடமாகுமானால், நிலைமை மாற்றப்பட்டேயாக வேண்டும். இவ் விடயத்தில் நாட்டைக் காப்பாற்றுவதற்காக, கட்சி பேதங்களை ஒதுக்கிவிட்டு பணியாற்ற முன்வாருங்கள்” எனத் தேரர் வேண்டுகோள் விடுத்தார்.

“நாட்டைப்பற்றி யோசிக்கும் ஒருவர் நீங்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே இத் தவணையில் நீங்கள் பாராளுமன்றத்தில் ஒரு கைதியாக இருக்கிறேன் எனக் கூற வேண்டாம். அமைச்சரவை முழுவதுமே இப்போது கைதிகளாகவே உள்ளனர். மக்களும், நாடும் எதிர்நோக்கும் பிரச்சினையைப் பற்றிப் பேசாமல் அவர்கள் தங்களைப் பாதுகாப்பதில்தான் முனைப்பாக இருக்கிறார்கள். இந்த நாட்டைக் காப்பாற்ற உங்கள் ஆதரவு தேவை என்பதை இந்த இடத்தில் அழுத்திச் சொல்கிறேன். மக்கள் அல்லது உங்கள் முன்னாள் ஆதரவாளர் என்ன நினைத்தாலும் பரவாயில்லை, நீங்கள் ஒரு மதிநுட்பம் மிக்க, தூரப் பார்வையுள்ள ஒரு தலைவர், நாட்டிற்காக எதையாவது செய்வீர்கள் என்பதை நாங்கள் நம்புகிறோம். நாங்கள் முன்னரும் கூறியிருக்கிறோம். நீங்கள் கவனமாகச் சிந்தித்து நாட்டிற்கும் மக்களுக்கும், எதிர்காலத்துக்கும் நல்லதெனக் கருதும் முடிவுகளையே எடுப்பீர்கள் என நான் நம்புகிறேன்” என இச் சந்திப்பிந்போது முறுத்தெட்டுவ ஆனந்த தேரர் விக்கிரமசிங்கவைக் கேட்டுக்கொண்டார்.

இச் சந்திப்புக்கு நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரம் செய்துள்ளன.