கடைக்குப் போகாமலேயே கடைக்குள் ‘உலாவலாம்’ – ரொறோண்டோவில் Virtual Shopping அறிமுகம்!
Virtual Shopping

கடைக்குப் போகாமலேயே கடைக்குள் ‘உலாவலாம்’ – ரொறோண்டோவில் Virtual Shopping அறிமுகம்!


நமக்கு விருப்பமோ விருப்பமில்லையோ கொறோணாவைரஸ் இந்த உலகத்தில் மகா புரட்சியொன்றைச் செய்துவிட்டுத்தான் போகப்போகிறது. நாம் நேற்றுப் பார்த்த உலகம் நாளை இருக்கப்போவதில்லை. அதிலொன்று கடைத்தெருவுக்குச் சென்று பொருட்கள் வாங்குதல்.

கோவிட் தொற்றினால் 100 வருடங்களாக இயங்கிய பல வியாபாரங்களே இழுத்துமூடப்பட்டு வரும் நிலையில் சில மூளைசாலிகள், தக்கன பிழைக்கும் என்ற தத்துவத்தை அறிந்தவர்கள் தம்மைத் தக்கவர்களாக ஆக்கி வருகிறார்கள்.

கனடாவின் ரொறோண்டோ நகரில் ஒரு பலசரக்கு வியாபாரி இவ்விடயத்தில் முந்திக்கொண்டு விட்டார். McEwan Fine Foods என்னும் பலசரக்கு கடைக்காரர் ஒருவர் தனது கடையிலுள்ள பொருட்களை முப்பரிமாண காமெரா மூலம் இணையவழியாக ஒருவர் தன் வீட்டிலிருந்தபடியே பார்த்து தேர்வு செய்யும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார். மெய்நிகர் கொள்முதல் (Virtual shopping) எனப்படும் நடைமுறை மூலம் நீங்கள் கடைக்குள் போகாமலேயே ‘கடைக்குள் நடந்து சென்று’ பொருட்களைப் பார்த்து வாங்க முடியும். இப்படிக் கணனி அல்லது ‘ஸ்மார்ட் ஃபோன்’ மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களை ஒரு மணித்தியாலத்துக்குள் இன்னுமொரு விநியோக நிறுவனம் மூலம் உங்கள் வீட்டுக்கு அனுப்பி விடுகிறது இந் நிறுவனம்.

இணையவழிக் கொள்முதல் ஏற்கெனவே நடைமுறையில் இருந்தாலும் பொருட்களை விற்கும் நிறுவனத்தில் காட்டப்படும் இரு பரிமாணப் படங்களைப் (அநேகமான நிறுவனங்கள்) பார்த்தே மக்கள் கொள்வனவு செய்கிறார்கள். இப் படங்கள் சிலவேளைகளில் மெருகூட்டப்பட்டவையாக இருப்பின் கொள்வனவு செய்பவர்கள் ஏமாற்றமடையவேண்டி ஏற்படுகிறது.

Virtual Shopping என்ற நடைமுறையில் நிஜமான கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிஜமான பொருட்களைப் பார்த்து, வாங்க விரும்பினால் அவற்றின் மீது சொடுக்குவதன் மூலம் அது உங்கள் மெய்நிகர் கூடைக்குள் வந்து விழுந்துவிடும். கொள்வனனை முடிக்கும்போது, மொத்த விலையும் உங்கள் கடனட்டையில் இருந்து எடுக்கப்பட்டுவிடும்.விநியோகத்துக்காக McEwan Fine Foods அமர்த்தியிருக்கும் நிறுவனத்தின் பெயர் InaBuggy. இரண்டு நிறுவனங்களும் இணைந்து இப் புதிய அனுபவத்தை மக்களுக்கு வழங்குகின்றன.

கோவிட் நோய்த்தொற்றைத் தடுக்க அரசுகள் எடுக்கும் நகர் முடக்க நடவடிக்கைகளினால் பொருளாதாரம் மிக மோசமான அளவுக்குப் பாதிப்படைவதனால் அதை மீளும் கட்டியெழுப்ப இப்படியான புதிய உத்திகள் அவசியமாகின்றன என கடை உரிமையாளர் மார்க் மக்கெவன் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email