World

கடும் பஞ்சத்துக்குத் தயாராகுங்கள் – எச்சரிக்கிறது ஐ.நா. !

உலகின் 2.5 பில்லியன் மக்கள், பெரும்பாலானவர்கள் ஆபிரிக்கர்கள், அடுத்து வரும் வருடங்களில் கடும் பஞ்சத்தை எதிர்நோக்கவுள்ளார்கள் என ஐ.நா. எதிர்வு கூறியுள்ளது. பசியாலும் பட்டினியாலும் பெரும்தொகையான மக்கள் மரணமடைவது தவிர்க்க முடியாதது என அது கூறுகிறது.

ரஷ்ய-யூக்கிரெய்ன் போர் ஒதற்குக் காரணமென பல மேற்குநாடுகள் கூறினாலும் இப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே கால நிலைப் பிறழ்வுகள் இப் பஞ்சத்தை ஆரம்பித்துவிட்டன. இந்த வருடம் மட்டும் கோதுமையின் விலை 60% த்தால் அதிகரித்திருக்கிறது.

உலகின் கோதுமை உற்பத்தியில் சீனாவும் அதற்கு அடுத்த படியாக இந்தியாவும் இருந்தாலும் அவற்றின் பெரும்பகுதி உள்ளூர்த் தேவைகளுக்கே பயன்படுகிறது. அதே வேளை ஏற்றுமதி என்று வரும்போது ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், யூக்கிரெய்ன், ஆவுஸ்திரேலியா, ஆர்ஜென்ரீனா, ஜேர்மனி ஆகிய நாடுகள் முன்ன்ணியில் இருக்கின்றன. இவற்றில் யூக்கிரெய்னின் ஏற்றுமதி அதன் துறைமுகங்களினூடு கருங்கடல் வழியாக ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கும், தரை வழியாக ஐரோப்பாவுக்கும் செல்வது வழக்கம். ஆனால் அநேகமான துறைமுகங்கள் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் தமாக்கான இறக்குமதிகளைச் செய்ய முடியாதுள்ளது. இதனால் அவை தற்போது ரஷ்யாவிடமே தானியங்களை வாங்கவேண்டிய நிலையிலுள்ளன.

சமீபத்தில் ஒன்று கூடிய G7 நாடுகள் தம்மிடையே போதுமான கோதுமை ஏற்றுமதிக்கான இருப்புக்கள் இருந்தும் அவை உலகின் பஞ்சத்துக்கு ரஷ்யாவைக் குறைகூறுவதிலேயே தமது நேரத்தை வீணாக்கின என ஐ.நா. செயலாளர் கவலை தெரிவித்திருந்தார். அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் பெரும்பாலான கோதுமையை ஏற்றுமதி செய்யாமல் பதுக்கி வைத்துள்ளன எனவும் தான் ஆபிரிக்காவின் சஹேல் பிரதேசத்துக்குச் சென்றபோது அங்கு பண்ணை விலங்குகள் பட்டினியால் இறந்துபோவதைக் கண்டதாகவும் விபரித்திருந்தார். இந்தியாவும் தற்போது தனது கோதுமை ஏற்றுமதியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இது தொடருமானால் 21 மில்லியன் குழந்தைகளும், 811 மில்லியன் வளர்ந்தவர்களும் பட்டினியோடு தூங்கப் போகும் நிலைமை விரைவில் ஏற்படுமென ஐ.நா. எச்சரித்துள்ளது.

Image Credit: Earth.org

இதில் ஆச்சரியம் என்னவென்றால் உலகின் சிறு விவசாயிகள், மீனவர்கள், இடையர்கள் ஆகியோரால் 70% மான உணவு உற்பத்தி செய்யப்படுகிறது எனினும் இக் கிராமவாசிகளிடமே அதிக வறுமையும், பட்டினியும் நிலவுகிறது என புள்ளிவிபரமொன்று கூறுகிறது.

பணப்பயிர் வளர்ப்பு என்னும்போது அதிகமாகப் பயிரிடப்படுவது சோளம், சோயா அவரை ஆகியனவே. அதற்கடுத்ததாகவே கோதுமை இருக்கிறது. உலகின் 80 % மான கோதுமை, மாவு தயாரிக்கவே பயன்படுகிறது. இதில் 86% மான கோதுமையை 7 நாடுகளேஏற்றுமதி செய்கின்றன. அதிலும் 3 நாடுகள் உலகின் 68% மான கோதுமையை உற்பத்தி செய்கின்றன.

2020 இல் ரஷ்யாவும் யூக்கிரெய்னும் உலக கோதுமை ஏற்றுமதியின் 30% த்திற்குப் பொறுப்பாக இருந்தன. இவற்றில் பெரும்பாலும் வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா, எகிப்து, இந்தோனேசியா, பங்களாதேசம், துருக்கி, யேமன் ஆக்யனவற்றை அடக்கும். உலக உணவுத் திட்டம் வாங்கும் உணவுப் பொருட்களில் 20% த்தை ரஷ்யாவும், யூக்கிரெய்னுமே தந்துகொண்டிருந்தன. உலகின் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் உணவுப் பாதுகாப்பை உலக உணவுத் திட்டமே நிறைவேற்றி வருகிறது.

ரஷ்ய-யூக்கிரெய்ன் போர் கோதுமை ஏற்றுமதியை 30% த்தால் குறைத்திருக்கிறது எனினும் விலை அதிகரிப்புக்கு அது மட்டும் காரணமல்ல. மாறாக, ஏனைய முன்னணி கோதுமை உற்பத்தி நாடுகள் தமது உற்பத்திகளைப் பதுக்குவதே காரணம். இதுவரை 20 நாடுகள் தமது கோதுமை ஏற்றுமதியை நிறுத்தியுள்ளன. இதனால் கோதுமையின் விலை திடீர் ஏற்றம் கண்டுள்ளது.

இந் நிலை தொடருமானால் தற்போது பஞ்சத்தில் வாடும் 323 மில்லியன் மக்களின் எண்ணிக்கை மேலும் 13 மில்லியன்களால் அதிகரிக்குமென ஐ.நா. எதிர்பார்க்கிறது.