Spread the love

டிசம்பர் 3, 2019

ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் பல்லாயிரக் கணக்கான விலங்குகளைப் பலியிடும் சடங்கு

பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் பங்குபற்றும், உலகிலேயே அதி பெரிய விலங்குப் பலித் திருவிழா நேபாளத்திலுள்ள பரியார்பூரில் நடக்கிறது.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தென் நேபாளத்தில் நடைபெறும் இத் திருவிழாவில் எருமை முதல் எலி வரை, பல்லாயிரக்கணாக்கான விலங்குகள் பலியிடப்படுகின்றன. உலகிலேலேயே அதி பெரிய இந்த இந்துமதச் சடங்கைத் தரிசிப்பதற்கென நாடெங்கிலுமிருந்து பக்தர்கள் திரள்கிறார்கள்.

கடாமி திருவிழா என அழைக்கப்படும் இம் மகாபலித் திருவிழா நடைபெறுவதைத் தடுப்பதற்கு உலகெங்குமிருந்தும் கண்டனங்களும், முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டனவெனினும் அவற்றையெல்லாம் சட்டை செயாது அச் சடங்கு இன்று (செவ்வாய்) அதிகாலை ஆரம்பமாகியது.

சம்பிரதாயபூர்வமாக முதலில் ஒரு ஆடு, ஒரு எலி, ஒரு கோழி, ஒரு பன்றி, ஒரு புறா ஆகியன பலியிடப்படுகின்றன. பூசாரி ஒருவர் தனது உடலின் ஐந்து பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தையும் இதில் சேர்த்துக் கொள்கிறார்.

அதைத் தொடர்ந்து 200 கசாப்புக்காரர்கள் கூரிய வாள்கள், கத்திகளுடன் சுவர்களால் சூழப்பட்ட மைதானத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் விலஙகுகளின் கழுத்துகளை வெட்ட ஆரம்பிப்பார்கள். பரப்பரப்பாகும் பக்த கோடிகள் இக் கூட்டுப்பலியைத் தரிசிக்க மரங்களில் ஏறி இருந்து பார்க்கிறார்கள்.

“நாங்கள் இதற்கு ஆதரவளிக்க விரும்பவில்லை. ஆனாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடவுளுக்கான தானங்களுடன் நாடெங்கிலுமிருந்து வருகிறார்கள். இது ஒரு பாரம்பரிய நிகழ்வு” என இச் சடங்கின் ஒழுங்கமைப்பாளர் பிரேந்திராப்பிரசாத் யாதவ் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்துக்குக் கூறினார்.

பல்லாயிரக்கணக்கான இந்து பக்தர்கள் நேபாளம், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பல நாட்களுக்கு முன்னரே பரியார்பூர் கிராமத்துக்கு வந்து விடுகிறார்கள். அங்கு முகாம்களில் தங்கி பூசைகள் போன்ற சடங்குகளில் பங்குபற்றுகிறார்கள்.

“இப் பெண் தெய்வத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனது தாயார் என் மகனின் நல்வாழ்வுக்காக இத்ச் சடங்கில் பங்குபற்றும்படி வேண்டினார். அதற்காகத்தான் நான் இதில் கலந்து கொள்கிறேன்” என்கிறார் 30 வயதுள்ள ராஜேஷ் குமார் தாஸ். அவரது கைகளில் ஆடோன்றை வைத்திருக்கிறார்.

சபு சஹானி, 25, இந்தியாவின் பீஹார் மாகாணத்திலிருந்து ஆடொன்றுடன் வந்திருக்கிறார். இதில் கலந்துகொள்வதயிட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். “நான் திருமணமாகியும் எனக்குப் பிள்ளைகள் இல்லை. இப் பெண் தெய்வத்தை வணங்கி ஆடு பலியிடுவதாக வேண்டுகோள் வைத்திருந்தோம். கடவுள் எங்கள் வேண்டுதலுக்குச் செவிசாய்த்திருக்கிறது. என் மனைவி ஒரு பெண் குழந்தையைப் பெற்றிருக்கிறாள்” என்று ஏ.எஃப்.பி. செய்தியாளரிடம் கூறினார் சஹானி.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற கடாமி பலிச் சடங்கின்போது சுமார் 200,000, ஆடுகள் முதல் எலிகள் வரை பல விலங்குகள் பலியிடப்பட்டிருந்தன.

A volunteer controls a crowd using a stick during the ritual before the sacrificial ceremony of the
மஹாபலியைத் தரிசிக்க வந்திருக்கும் பக்த கோடிகள் [படம்: நவேஷ் சிட்றகார் / ராய்ட்டர்ஸ்]

இந்த இரத்தக் களரியை நிறுத்த முயற்சிக்கும்படி நேபாள உச்ச நீதிமன்றம் அரசாங்கத்தைக் கேட்டிருந்தது. அதன்படி 2015 இல் கோவில் நிர்வாகம் இப் பலிச் சடங்கைத் தடைசெய்திருந்தது. இருப்பினும் நூற்றுக்கணக்கான வருடங்களாக நடைபெறும் இச் சடங்கை நிறுத்த அரச நிறுவனங்களாலோ, கோவில் நிர்வாகத்தாலோ முடியவில்லை.

இந்திய எல்லை அதிகாரிகள் பல விலங்குகளைப் பக்தர்களிடமிருந்து மீட்டிருக்கிறார்கள். இருந்தும் அவர்களாலும் இந்நடைமுறையை நிறுத்த முடியவில்லை.

“அதிகாரிகள் சட்டத்துக்கும் மேலாகத் தமது நம்பிக்கைகள் ஆட்சி செய்வதையே விரும்புகிறார்கள்” என விலங்குரிமைகள் செயற்பாட்டாளர் மனோஜ் கவுதம் கூறுகிறார்.

“வருடா வருடம் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது” எனப் பத்தாவது தலைமுறையைச் சேர்ந்த இக் கோவிலில் பணி புரியும் உள்ளூர் பூசாரி மங்கள் சவுத்திரி கூறுகிறார். “நாங்கள் எங்கள் பாரம்பரிய சடங்குகளைக் கோவிலில் செய்கிறோம். வெளியே மக்கள் செய்துகொள்வது அவர்களது விருப்பம்” என்கிறார் அவர்.

பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் பரிரார்ப்பூரில் ஒரு சிறைக் கைதியின் கனவில் தோன்றிய கடிமை என்ற பெண் தெய்வம் தனக்கு ஒரு கோவில் கட்ட வேண்டுமென்று கேட்டதாகவும் அவர் கட்டிய கோவிலிலேயே தற்போதும் இச் சடங்குகள் நடைபெறுகின்றனவெனவும் பரம்பரைகளாககக் கதை சொல்லப்பட்டு வருகிறது.

Print Friendly, PDF & Email