AnalysisSri Lankaசிவதாசன்

கடவுள் அவர்கள் பக்கம் | அச்சம் தரும் எதிர்காலம்

மியான்மாரின் பாதையில் இலங்கை

அரசியல் அலசல்: சிவதாசன்

ஜூன் 2ம் திகதி ஜனாதிபதி ராஜபக்சவினால் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் உருவாக்கப்பட்ட, கிழக்கு மாகாணத்துக்கான தொல்பொருளியல் பாரம்பரிய முகாமைத்துவப் பணிக்குழுவில் தமிழர்களோ, முஸ்லிம்களோ சேர்க்கப்படாதது அங்குள்ள சிறுபான்மை மக்களிடையே அச்சத்தைத் தோற்றியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் மூன்றில் இரண்டு பங்கினர் தமிழ், முஸ்லிம் மக்களாக இருக்கும்போது ஜனாதிபதியின் இந் நடவடிக்கையின் பின்னால் பூரண இலங்கையையும் சிங்கள, பெளத்த நாடாக மாற்றும் கபட நோக்கம் இருக்கிறதா என அம்மக்கள் ஐயப்படுகிறார்கள்.

இந்த பணிக்குழுவில் சிங்கள புத்த பிக்குகள் அங்கம் வகிக்கும் அதே வேளை இந்து, இஸ்லாம் மதங்களிலிருந்து எவரும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அத்தோடு, இப் பணிக்குழுவின் நிர்வாகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனெரல் கமால் குணரத்னாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



இப் பணிக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள்: வட-கிழக்கு மாகாண தொல்பொருளியல் சக்கரவர்த்தி எல்லாவல்ல மேதானந்த தேரர், தாமன்கடுவ பீடாதிபதி பாணமுறே திலகவன்ஷ தேரர், பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன, தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் ஸெனாரத் பண்டார திசநாயக்கா, காணி ஆணையாளர் ஜெனெரல் சந்திர ஹேரத், நிலவளைவையாளர் நாயகம் ஏ.எல்.எஸ்.சீ.பெரேரா, பேராசிரியர் ராஜ் குமார் சோமதேவா (களனிப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் கபில குணவர்த்தனா (பேராதெனிய பலகலைக்கழகம்), மேற்கு மாகாண பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனெரல் தேசபந்து தென்னக்கூன், கிழக்கு மாகாண காஅணி ஆணையாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திசநாயக்கா, டெரான ஊடக வலைய அதிபர் டிலித் ஜயவீர ஆகியவராவர்.

“இலங்கைபின் தொல்பொருளியல் பாரம்பரியத்தைக் காப்பது அரசின் கடமையாகும் என்பாதல் இப்பணிக்குழுவை நியமிக்கிறேன்” என இது தொடர்பாக கோதாபய ராஜபக்ச தெரிவித்திருக்கிறார்.

இப் பணிக்குழு கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் கண்டு அவற்றை உரிய திட்டத்தின் மூலம் பாதுகாத்து, தேவையானால் அவற்றை மேலும் விஸ்தரித்து கலாச்சார, பாரம்பரிய அடையாளங்களாக உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் பிரபலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப் பணிக்குவின் தலைவராக கமால் குணரத்தனவும், ஜனாதிபதியின் செயலாரான ஜீவாந்தி சேனநாயக்கா செயலாளராகவும் இருப்பார்கள். இத்திட்டத்தின் எண்ணக்கருவுக்குப் பின்னால் மகாநாயக்கர்களை உள்ளடக்கிய புத்த ஆலோசனைக் கவுன்சில் இருக்கிறது. சிங்கள புத்த தேசிய இனத்தின் ஏக பிரதிநிதிகளாகக் காட்டி பாராளுமன்றத்தைக் கைப்பற்றும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிகழ்ச்சிநிரலின் பிரகாரமே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாதுகாப்புச் செயலாளரான கமால் குணரத்னவைத் தலைவராகக் கொண்ட இப் பணிக்குழு தன் கடமைகளையும் இராணுவ அடக்குமுறைகளைப் பிரயோகித்து மேற்கொள்ளத் தயாரவிருக்கிறது என்பதே இதர சிறுபான்மை மக்களுக்கு இதனால் விடப்பட்டிருக்கும் செய்தியாகும்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது சுமார் 10 க்கு மேற்பட்ட தமிழ், முஸ்லிம் தொல்பொருளியலாளர்கள் பணிபுரிந்துவரும் வேளையில் இவர்களில் ஒருவராவது இப் பணிக்குழுவில் இடம்பெறாதது சிங்கள பெளத்த மேலாண்மையை விஸதரிக்கும் நோக்கத்துடனேயே இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை, களனிப் பல்கலைக் கழக தொல்லியல் பேராசிரியர் ஜகத் வீரசிங்க போன்ற பல சிங்களப் புத்திஜீவிகளே ஒப்புக்கொள்கிறார்கள்.



மியான்மார் (பர்மா) மாதிரி

பர்மாவுக்கும் இலங்கைக்கும் அரசியல், மத ரீதியான பல பொதுமைகள் உண்டு. இரண்டு நாடுகளிலும் பின்பற்றப்படும் தேரவாத பெளத்தம் அதன் சித்தாந்தத்தை நிலைநிறுத்த அரசியலைக் கருவியாகப் பாவித்து வருவது வரலாறு. இரண்டு நாடுகளிலும் காலனித்துவ காலத்தில் அடக்கி வைக்கப்பட்டிருந்த புத்த சங்கங்கள் மிகவும் ஆக்ரோஷமான மீளெழுச்சியை மேற்கொண்டன.

பர்மாவில் 90% மானோரும், இலங்கையில் 70% மானோரும் பெளத்தர்கள். இரண்டு நாடுகளிலும் இரண்டு காரணிகள் பெளத்தத்தை முன்னிலைப்படுத்தத் துணைபுரிந்தன. முதலாவது, புத்த சங்கங்களிலிருந்து வந்த கடும் உள் அழுத்தம், இரண்டாவது, மதச் சிறுபான்மையினரிடமிருந்து வந்த வெளி அழுத்தம். இந்த இரண்டு நாடுகளின் பெளத்த சங்கங்களும் ஜனநாயகம் என்ற கருவியைத் தமது மேலாண்மையை நிலை நிறுத்த வெற்றிகரமாகப் பாவித்தன.

யூ நூ, கோதாபய ராஜபக்ச

யூ நூ | மியான்மாரின் பாதையில் இலங்கை
யூ நூ | மியான்மாரின் பாதையில் இலங்கை

சுதந்திர பர்மாவின் முதல் பிரதமர் யூ நூ வின் வருகையோடு பர்மாவில் புத்த சமயம் மீள்கட்டியெழுப்பப்பட்டது. காலனித்துவத்திலிருந்து விடுபட்ட கையோடு பெளத்த சங்கங்கள் மக்களின் உணர்வுகளைக் கிளறிவிட்டுத் தீவிர தேசியவாதியான யூ நூவைத் தமது தேவைகளுக்காகப் பாவித்தனர். காலனித்துவத்திலிருந்து விடுபட்ட போது இணக்க அரசியலை மேற்கொண்ட சிறுபான்மையினரால் இலங்கையின் பெளத்த சங்கங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் இருக்கவில்லை. பின்னர் தமிழ்த் தேசீயப் போராட்டம், இஸ்லாமிய பயங்கரவாதம் ஆகியன பெளத்த சங்கங்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணியிருந்தாலும், அவர்களுக்கு யூ நூ போன்ற தேசியாவதி கிடைத்திருக்கவில்லை. மீட்பர் கோதாபய ராஜபக்சவின் வருகைக்காக அவர்கள் காத்திருக்க வேண்டி வந்தது. எப்படிக் காலனித்துவ காலத்தில் பின்தள்ளப்பட்டிருந்த பெளத்தத்தை யூ நூ மீளெளச் செய்தாரோ அதேபோல கோதாபயவும் சாதிப்பார் என இலங்கையின் பெளத்த தேசியவாதிகள் நம்புகின்றனர். பெளத்த சங்கங்களின் உள்ளழுத்தமும், சிறுபான்மையினரின் வெளி அழுத்தமும், யூ நூ போன்றொரு தேசியவாதியும் ஒருங்கு சேரக் கிடைத்திருக்கின்ற அருமையானதொரு சந்தர்ப்பம் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.



நாட்டின் வளர்ச்சிக்கு சிறுபான்மையினரின் உரிமைப் போராட்டம் எப்போதும் தடையாக இருக்கிறது என்பது யூ நூவின் சித்தாந்தம். அதனால் நாட்டில் சிறுபான்மையினரை அவர் ஒடுக்கி வந்தார். அவருக்குப் பின்னர் வந்த இராணுவ அரசாங்கம் சிறுபான்மைச் சமூகங்களைப் பலவந்தமாக இடம் மாற்றி ஒரே நாடு, ஒரே தேசிய இனம் என்ற போர்வைக்குள் கொண்டுவர முயற்சித்து ஓரளவு வெற்றியும் கண்டது. ஆனாலும் புத்த சங்கங்களுக்கு, இராணுவ ஆட்சியினர் யூ நூ காலத்தில் போல ஆதரவு வழங்கவில்லை. ஓங் சான் சூ சி யின் ஜனநாயக நாடகத்துடன் பெளத்த சங்கங்கள் மீண்டும் ‘ஆட்சியைப்’ பிடித்தன. றொஹிங்யா சிறுபான்மையினர் தொடர்ந்தும் புற அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றமை அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் தமிழ்த் தேசியம் அடக்கப்பட்டதன் பின்னர் தீவிரமற்றுப் போயிருந்த பெளத்த தேசிய பெரு நெருப்பை உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு மீண்டும் ஊதிப்பெருக்க வைத்தது. கோதாபய என்ற தேசியவாதி முடிசூடப்பட்டார். அடுத்த இலக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான பாராளுமன்றம். இஸ்லாமிய தீவிரவாதமும், தமிழ்த் தேசியவாதமும் அவர்களது எதிர்பார்புக்கு ஏற்றவாறு இல்லை. கோதாபயவும் இராணுவ, மகாசங்க தீவிரவாதிகளும் இந்த இரண்டையும் மீண்டும் ஊதிப்பெருக்க வைக்கப் பெரும் பிரயத்தனம் எடுக்கிறார்கள். சுமந்திரன் மீதான கிளேமோர்த் தாக்குதல் முயற்சி, ஹெயேஸ் ஹிஸ்புல்லாவின் கைது போன்ற பல இந்த வெளி அழுத்தத்தை உயிர்த்தெழ வைக்கும் முயற்சிகள். இது தொடர்ந்துகொண்டே இருக்கப்போகிறது.

பெளத்த சங்கங்களின் உள்ளழுத்தங்களுக்குத் தீனி போடுவது போன்றது தான் தற்போதைய கிழக்கு மாகாண தொல்லியல் பாரம்பரியக் காப்பு முயற்சிகள். அதைக் கிழக்கு மாகாணத்துக்கு மட்டும், அதுவும் புத்தசாசன / கலாச்சார அமைச்சுகளின் கீழல்லாது பாதுகாப்பு அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படுவது மீண்டும் ‘வெள்ளைவானை’ ச் சிறுபான்மையினரின் முன் ஓடிக்காட்டுவது போன்றது.

இலங்கையில் சிறுபான்மையினரின் எதிர்காலம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு இருண்டதாகவும் ஆபத்துள்ளதாகவும் இருக்கிறது. ஜனநாயக வழியிலோ அல்லது ஆயுதப்போராட்ட வழியிலோ தீர்வொன்று கிடைக்கும் என நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது போலானது.

சிங்கள பெளத்த தேசியவாதிகள் அதிர்ஷ்டசாலிகள். எல்லாளனின் பெருந்தன்மை, இந்திரா காந்தியின் கொலை, இரட்டைக் கோபுரத் தாக்குதல், ராஜிவ் காந்தி கொலை, ஆழிப்பேரலை, கருணாவின் பிரிவு, மாவிலாறு தண்ணீர் மறுப்பு, உயித்த ஞாயிறு குண்டுவெடிப்பு, சிறிசேனவின் பல்டி, கோதாபயவின் வருகை என்று இக்கட்டான தருணங்களில் அவர்களைக் ‘கடவுள்’ காப்பாற்றியிருக்கிறது.



இவையெல்லாம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது நமது அரசியல்வாதிகள் இன்னும் தம்முள் பிடித்த குடுமிகளை விடாது இன விடுதலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல்கள் அண்மிக்கும்போது கொழும்பில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலோ அல்லது ஆயுதங்களுடன் ஒரு தமிழரோ அல்லது முஸ்லிமோ கைதுசெய்யப்பட்டாலோ, கடவுள் இன்னுமொரு தடவை அவர்களுக்கு உதவுகிறார் என்று நினைத்துக் கொள்ளவும்.

தந்தை செல்வா உயிருடன் இருந்தால் இன்னுமொரு தடவை அச் சொல்லைப் பாவிக்கமாட்டார் என நம்புகிறேன்.