Science & Technology

கடல் நீரைக் குடிநீராக்கும் ‘கையடக்க’ இயந்திரம்!

கைகளால் காவிச்செல்லக்கூடிய கடல் நீரைக் குடிநீராக்கும் இயந்திரமொன்றை அமெரிக்காவின் மசச்சூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள். 10 கி.கி. எடைக்கும் குறைவான எடையுள்ள இவ்வியந்திரத்தை ஒரு சூட்கேஸ் பெட்டியினுள் அடக்கிவிடலாம் எனவும் இவ்வியந்திரத்தை இயக்குவதற்கான மின்வலுவை ஒரு செல் ஃபோன் சார்ஜர் மூலமாகவோ அல்லது சிறிய காவிச்செல்லக்கூடிய சூரிய ஒளித்தகடுகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இவ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதனால் உற்பத்தியாக்கப்படும் குடிநீர் உலக சுகாதார நிறுவனத்தின் தராதரத்தை விட அதிகமாகவிருக்கிறது. ஒரு பொத்தானை மட்டும் அழுத்துவதன் மூலம் இவ்வியந்திரத்தை இயக்கிக் கொள்ள முடியும்.

ஏற்கெனவே பாவனையிலிருக்கும் கடல் நீரை நன்னீராக்கும் இயந்திரங்களில் கடல் நீர் சில வடிகட்டிகளினூடு செலுத்தப்பட்டு உப்பு அகற்றப்படுகிறது. ஆனால் இப்புதிய இயந்திரத்தில் வடிகட்டிகள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக மின்சாரத்தைக் கொண்டு கடல்நீரிலிருக்கும் உப்பு அகற்றப்படுகிறது. இதனால் அடிக்கடி வடிகட்டிகளை மாற்றவோ தொடர்ச்சியான பராமரிப்புக்களோ தேவையில்லை.

இவ்வசதிகள் காரணமாக வசதிகள் இல்லாத சிறிய தீவுகளிலோ அல்லது நீண்ட தூர கடற் பயணம் செய்யும் கப்பல்களிலோ இவ்வியந்திரத்தை எளிதாகப் பாவிக்கலாம்.

தற்போது பாவனையிலிருக்கும் கடல் நீரை நன்னீராக்கும் இயந்திரத்தில் கடல் நீர் அதிக அழுத்தத்துடன் வடிகட்டிகளினூடாக செலுத்தப்படுகிறது. இதற்கான அழுத்தம் பிரயோகிக்கும் கருவியை இயக்குவதற்கு மிதமிஞ்சிய மின்வலு பாவிக்கவேண்டி இருக்கிறது. அதிக பணத்தைச் செலவழித்து சொற்ப இலாபமடையும் இந்நடைமுறை வினைத்திறன் இல்லாத ஒன்றாக இருக்கிறது. அதற்குப் பதிலாக அயன் செறிவு துருவமுனைப்பு (ion concentration polarization (ICP)) என்னும் புதிய தொழில்நுட்பத்தைப் பாவித்து கடல் நீரிலுள்ள உப்பு, பக்டீரியா, வைரஸ் போன்ற மிதக்கும் துணிக்கைகளை அகற்றிவிட்டு சுத்தமான நீரை வெளியே தருகிறது. இரண்டு சவ்வுகள் மின்னியக்க முறையில் எதிரெதிரான துருவமுனைப்புகளை எய்தும்போது இத்துணிக்கைகள் அவற்றினால் ஈர்க்கப்படுகின்றன. இவை பிறிதொரு பாதையால் அகற்றப்பட்டு பிரித்தெடுக்கப்படுகின்றன. இங்கு கடல் நீரைச் செலுத்துவதற்கு அதிக அழுத்தத்துடனான (hig pressure) பம்புகள் தேவையில்லாதபடியால் அவற்றை இயக்குவதற்கு அதிக மின்வலுவும் தேவைப்படுவதில்லை. இப்படிச் சுத்தீகரிக்கப்படும் நீர் இரண்டாவது மின்பகுப்பு (electrolysis) நடைமுறைக்குட்படுத்தப்பட்டு எஞ்சிய துணிக்கைகளும் அகற்றப்பட்ட பின்னரே குடிப்பதற்கு ஏற்ற நீராகச் சேகரிக்கப்படுகிறது.

இவ்வாராய்ச்சியில் றிசேர்ச் லபோறற்றோறி எலெக்ட்றோணிக்ஸ் (Research Laboratory of Electronics (RLE)) ஆய்வுகூடத்தில் பணியாற்றும் யங்க்யோ யூன், ஹைக்ஜின் ஜே.குவோன், சுங்கு காங் ஆகியோருடன் அமெரிக்க இராணுவ ஆய்வுப் பிரிவும் இணைந்து ஈடுபட்டிருந்தனர். (Photo: M. Scott Brauer/ MIT News)