Tamil History

கடல் கொண்ட பூம்புகாரை டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மீள் நிர்மாணம் செய்ய விஞ்ஞானிகள் தயாராகின்றனர்

பெப்ரவரி 3, 2020

பூம்புகார் துறைமுக நகரம் 15,000 முதல் 20,000 வருடங்களுக்கு முன்னர் தற்போதிருக்கும் இடத்திலிருந்து 30 கி.மீ. தூரத்தில் இருந்திருக்க வாய்ப்புண்டு என செய்மதித் தரவுகளைக்கொண்டு கூறமுடியும்.

விஞ்ஞான, தொழில்நுட்பத் திணைக்கள அதிகாரிகள்

1000 வருடங்களுக்கு முன்னர் சோழப் பேரரசின் காலத்தில் தமிழ்நாட்டில் கடல்கோளினால் காவுகொள்ளப்பட்ட பூம்புகார் துறைமுகப் பட்டினத்தை டிஜிட்டல் முறையினால் ‘மீள் நிர்மாணம்’ செய்வதற்கு இந்திய மத்திய அரசின் விஞ்ஞான, தொழில்நுட்பத் திணைக்களம் தயாராகிறது.

இத் துறைமுகம் தற்போதுள்ள பூம்புகாரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருந்ததற்கான எத்தனையோ ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் பரவிக்கிடக்கின்றன. இலக்கியச் சான்றுகள். அகழ்வாய்வுகள், வரலாறு, கல்வெட்டியல், நீர்க்கீழ் ஆய்வுகள், புவியியல் என்று பலவிதமான ஆதாரங்களிருந்தும் பூம்புகார் இருந்த இடத்தை நிர்ணயிக்க முடியாதிருக்கும் மர்மத்தை இன்னும் துலக்க முடியாமல் இருக்கிறது என விசனிக்கிறார் ஒரு திணைக்கள அதிகாரி.


ஆளில்லா இயந்திரங்களின் மூலம் கடற்படுகையைப் பல தடயவியல் முறைகளைப் பாவித்து ஆராய்ந்து தரவுகளைச் சேகரிப்பதன் மூலம், கடந்த 20,000 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் நிலப்படிவுகள், கடல்நீருயர்வு, காவேரிக் குடிபெயர்வு, வெள்ளப்பெருக்கு, ஆழிப்பேரலை, சூறாவளி, மண்ணரிப்பு போன்றவற்றை அறிந்து பூம்புகாரின் வாழ்க்கைச் சரிதத்தை மீளவும் உருவாக்க முடியும் என அவ்வதிகாரி தெரிவித்தார்.

இதே போன்றதொரு திட்டம் குஜராத்திலுள்ள துவாரகை நகரின் மீது செய்யப்பட்டு அதை மீள் நிர்மாணிப்பதில் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டிருந்தும் பூம்புகார் விடயத்தில் அது நடைபெறவில்லை என விஞ்ஞான, தொழில்நுட்பத் திணைக்களத்தின் ICPS பிரிவின் தலைவர் டாக்டர் K.R.முரளி மோகன் தெரிவித்தார். துவாரகையும் பூம்புகாரும் இந்தியாவின் இருகரைகளிலும் எதிரும் புதிருமாக இருப்பவை. இரண்டு பகுதிகளிலும் நடைபெற்ற மாற்றங்களுக்கிடையில் தொடர்பு இருக்க வாய்ப்புண்டு என அவர் தெரிவிக்கிறார்.


பூம்புகாரை டிஜிட்டல் முறையில் மீள்நிர்மாணம் செய்யும் திட்டம் இத் திணைக்களத்தின் ‘இந்திய டிஜிட்டல் பாரம்பரியத் திட்டத்தில் ஒன்றாகும். இதன் பொருட்டு 13 கல்வியாளர்கள், ஆய்வு நிறுவனங்கள் ஆகியோரைக் கொண்ட வலையமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கடல் விஞ்ஞானக் கல்வி நிலையம், அழகப்பா பல்கலைக் கழகம், சென்னை கடற்கல்வி, பயிற்சி பல்கலைக் கழகம், கடற் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனம் ஆகியன இவற்றில் சில.

“ஒரு காலத்தில் கண்டங்களுக்கிடையேயான வணிகத்தில் பெயர் போன இத் துறைமுக நகரம் இப்போது மறைந்துவிட்டது. அது எப்போ, எங்கே இருந்தது என்பதை நிறுவுவதே எமது முதல் வேலை” எனக் கூறுகிறார் ‘டிஜிட்டல் பூம்புகார் திட்டத்தின்’ தேசிய ஒருங்கிணைப்பாளரும், அழகப்பா பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான எஸ்.எம். ராமசாமி அவர்கள்.

இந்தியாவின் செய்மதித் தரவுகளை உதாரணம் காட்டி, 15,000 வர்டுடங்களுக்கு முன்னர், தற்போதய இடத்திலிருந்து 30 கி.மீ. தூரத்தில் காவேரிப் படுகையில் பூம்புகார் நகரம் இருந்ததாக ஆய்வாளர் தெரிவிக்கின்றனர். 11,000 வருடங்களுக்கு முன்னர் அது 10 கி.மீ. மேற்கேயுள்ள டெல்டா-B யிற்கு நகர்ந்து, தொடர்ந்து 8,000 வருடங்களுக்கு முன்னர், 10 கி.மீ மேற்கேயுள்ள டெல்டா-C யிற்கு நகர்ந்து இறுதியாக 3,000 வருடங்களுக்கு முன்னர் காவேரியின் தோறுவாய்க்கு நகர்ந்தது என இன்னுமொரு அதிகாரி தெரிவிக்கிறார்.

இவ்வாய்வுகள் மூலம் பூம்புகார் துறைமுக நகரத்தின் கட்டமைப்பு, அங்கு வாழ்ந்த மக்களின் நாகரீகம், சமூக வாழ்வு, அக்கால மக்கள் பாவித்த தொழில்நுட்பம் போன்ற பல விடயங்களை அறிந்துகொள்ள வாய்ப்புண்டு என இத் திட்டத்தில் ஈடுபடும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

கட்டுரை மூலம்: இந்தியன் எக்ஸ்பிறெஸ்