கடற்படை அதிகாரிகளைக் காப்பாற்ற நீதிமன்ற உத்தரவை மீறும் ஜனாதிபதி ஆணையம்!

நகைப்புக்கிடமாகும் இலங்கையின் நீதிபரிபாலனம்

ஜனவரி 27, 2020

தசநாயக்கா, வசந்தா கரன்னகொட

ட்ரயல்-அற்-பார் நீதிமன்றத்தில் ஏற்கெனவே எடுத்துக்கொள்ளப்பட்ட 13 கடற்படை அதிகாரிகள் மீதான வழக்கை நிறுத்தும்படி, குற்றஞ்சாட்டாப்பட்டவர்கள் மீதான தனிப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணையம் அட்டோர்ணி ஜெனெரலுக்கு உத்தரவிட்டுள்ளது.

முந்தய அரசினால் பதியப்பட்ட வழக்குகளின் காரணமாகக் கடந்த சில நாட்களில், 13 பேருக்கும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட போது, ஜனாதிபதி ஆணையத்தின் விசாரணைகளின் முடிவுகள் வெளியிடப்படும்வரை அதை நிறுத்தி வைக்குமாறு பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை ட்ரயல் – அற்-பார் நீதிபதிகள் மறுத்திருந்தார்கள். ஜனாதிபதி ஆணையம் நியமிக்கப்படுவதற்கு முன்னரே இப் பதின்மூன்று பேர் மீதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன என அந் நீதிபதிகள் தமது மறுப்புக்கான காரணத்தைக் கூறினர்.

தற்போது அதையும் மீறி ஜனாதிபதி ஆணையம், இவ் வழக்கை நிறுத்தி வைக்கும்படி அட்டோர்ணி ஜெனெரல் மூலம் உத்தரவு வழங்கியிருக்கிறது.

முந்தய அரசாங்கத்தில் நடைபெற்றதாகக் கருதப்படும் அரசியல் பழிவாங்கல்கள் மூலம் பாதுகாப்புப் படையினர் உட்படப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை ஆராய்வதற்கு இந்த ஆணையம் உருவாக்கப்பட்டிருந்தது.

குற்றஞ்சாட்டப்பட்ட 13 பேர்களில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்தா கரன்னகொட மற்றும் கடற்படைப் பேச்சாளர் றியர் அட்மிரல் டிகேபி தசநாயக்கா அவர்களும் அடங்குவர். 2008-2009 காலங்களில் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பணத்திற்காகப் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டௌக் காணாமலாக்கப்பட்ட குற்றங்களுக்காக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அரசியல் அழுத்தங்களுக்காகவே 13 பேரின் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டதெனக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை விசாரிப்பதற்காக ஜனாதிபதி ஆணையம் உருவாக்கப்பட்டது.

ஜனாதிபதி ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட மூன்று பேரைக் கொண்ட இந்த ஆணையம், ஜனவரி 8, 2015 முதல் நவம்பர் 16, 2019 வரையில் பொதுப் பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் அரசியற் பழிவாங்கல்களை ஆராயும்.

இவ்வாணையத்தின் தலைவரான, இளைப்பாறிய உச்சநீதிமன்ற நீதிபதி உபாலி அபயரத்னவுடன் இளைப்பாறிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா சந்திரசிறி ஜயத்திலக்காவும், இளைப்பாறிய காவற்துறை அதிபர் சந்திரா பெர்ணாண்டோவும் பணியாற்றுவார்கள்.

முந்திய அரசின் மீது வசந்தா கரன்னகொடவும், தசநாயக்கவும் செய்யப்பட்ட முறையீடு தொடர்பான விசாரணையை இவ்வாணையம் முதலாவததாக எடுத்துக்கொள்கிறது. இந்த மாதம் (ஜனவரி) 22 ம் திகதி அவர்கள் இருவரும் இம் முறையீட்டைச் செய்திருந்தார்கள். அடுத்த நாளே ஆணையம் அம் முறையீடு மீதான விசாரணையைச் செய்து முடித்து அட்டோர்ணி ஜெனெரலுக்கு உத்தரவும் வழங்கிவிட்டது.