Sri Lanka

கடற்படையினால் கடத்திக் கொல்லப்பட்ட 11 இளைஞர் தொடர்பாக ஐ.நா. அலுவலகத்தில் முறைப்பாடு

2008-2009 காலப் பகுதியில் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் கடற்படையினால் பணத்திற்காகக் கடத்திக் காணாமலாக்கப்பட்ட 11 இளைஞர்களின் வழக்கு தொடர்பாக அரசாங்கத்தினால் உரிய நீதி வழங்கப்படவில்லை எனக்கூறி கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினரின் அமைப்பு கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு முறைப்பாடுகளைக் கொடுத்திருக்கிறது. விசாரணை நடைபெறும் நீதிமன்றங்களுக்குச் செல்வதன் மூலமோ அல்லது அரச அதிகாரிகளுடன் தொடர்புகளைப் பேணுவது மூலமாகவோ எந்த வழியிலாயினும் இவ்வழக்கு தொடர்பாக சர்வதேச தூதரகங்களும், ஆணையங்களும் விழிப்புடன் அவதானித்துக்கொண்டு இருப்பதாக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டுமென இவ்வமைப்பு கோரியுள்ளது.

அது மட்டுமல்லாது காணாமலாக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினர் நீதிமன்றங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகளைச் செய்வதிலோ அல்லது அவர்களது சட்டநடவடிக்கைகளுக்கான செலவுகளைப் பொறுப்பேற்பதன் மூலமோ ஐ.நா. சபை உதவிகளைச் செய்யவேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இவ்வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தி தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்க தாம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஐ.நா. அலுவலகமும் வெளிநாட்டுத் தூதரகங்களும் ஆதரவு நல்கவேண்டுமெனவும் இக்குடும்பங்கள் கோரியுள்ளன. இவர்களில் மூன்று குடும்பத்தினர் மட்டுமே அனைத்து குடும்பத்தினர் சார்பிலும் தற்போது நீதிமன்றங்களுக்குச் சென்றுவருகிறார்கள் எனவும் அவர்கள் கூட முதுமையினாலும் சுகவீனத்தாலும் பலவீனமாக இருக்கிறார்கள்; துர்ப்பாக்கியமாக மேலும் மூன்று குடும்பத்தினர் ஏற்கெனவே மரணமடைந்து விட்டார்கள் எனவும் கூறியுள்ளார்கள். இவ்வழக்கு கடந்த 15 வருடங்களாக நடைபெற்று வருகின்ற போதிலும் 2020 இல் இதற்கான விசாரணை நீதிமன்றம் நியமிக்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒரு விசாரணை தானும் நடைபெறவில்லை என இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.நா. அலுவலகத்திடம் தமது முறைப்பாட்டைச் சமர்ப்பித்த பின்னர் அலுவலகத்திற்கு முன்னால் இவ்வமைப்பு சிறிய ஆர்ப்பாட்டமொன்றையும் செய்துள்ளது.

சில கடற்படை அதிகாரிகள் பணயம் பெறுவதற்காக 11 இளைஞர்களையும் கடத்தினார்கள் என்ற சந்தேகத்தில் 2009 இல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு அதிகாரிகள் மீது வழக்கும் பதியப்பட்டிருந்தது. இவ்வதிகாரிகளில் கடற்படையின் சில உயரதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருந்தனர். ஜோன் றீட், றொஷான் லயன், அமணன் லயன், ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஷ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹாமெட் சாஜிட், ஜமால்டீன் டிலன், மொஹாமெட் அலி அன்வர், கஸ்தூரியாராச்சிகே அன்ரன் மற்றும் தியாகராஜா ஜெகன் ஆகிய 11 இளைஞர்களே கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டவர்களாவர்.