கடற்படைத் தளபதி கரன்னகொட விடுதலை – சட்டமா அதிபர் சஞ்சாய் ராஜரத்தினம் வழங்கிய நீதி!
2008-2009 காலப் பகுதியில் கொழும்பின் சுற்றுவட்டாரங்களில் 11 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கப்பம் வசூலிப்பதற்காகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். இக் கொலைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்படிருந்த கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவும் அவரது 13 சகாக்களும் புதிய சட்டமா அதிபர் சஞ்சாய் ராஜரத்தினத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2019 இல், கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட குற்றவிசாரணைப் பிரிவு கரன்னகொடவிடமிருந்து பெற்ற வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு, முன்னாள் சட்டமா அதிபர் டப்புல டெலிவேரா, கரன்னகொட மீது குற்றப்பத்திரிகை தாக்குதல் செய்வதற்குத் தயாராக இருந்தார். ஆனாலும் அரசாங்கத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட சட்டமா அதிபர் சஞ்சாய் ராஜரத்தினம் தற்போது கரன்னகொட உட்பட அனைத்து சந்தேக நபர்களையும் விடுதலை செய்துள்ளார்.
எஸ்.ஏ.லியோன் ஸ்ரான்லி, றொஷான் லியோன் ஸ்ரான்லி, ஜோன் றீட், தியாகராஜா ஜெகன், ராஜீவ் நாகநாதன், ராமலிங்கம் தியாகேஸ்வரன், பிரதீப் விஷ்வநாதன், மொஹாமெட் சஜித், மொஹாமெட் டிலான், மொஹாமெட் அன்வார் முபாரக் மற்றும் கஸ்தூரி ஆராச்சிலகே அந்தோனி ஆகிய 11 இளைஞர்களே 2008-2009 காலப்பகுதியில் கடற்படையினால் கடத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.
பின்னணி
இக் கொலைகளுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேக நபரான, ‘நேவி சம்பத்’ என அழைக்கப்படும் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை ஆகஸ்ட் 2018 இல் குற்றவிசாரணைப் பிரிவு கைது செய்திருந்தது. அதே வேளை இன்னுமொரு முக்கிய சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்து வந்தமைக்காக பாதுகாப்பு அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ணவைக் கைதுசெய்யும்படியும் குற்றவிசாரணைப் பிரிவு கட்டளையிட்டிருந்தது. பெப்ரவரி 2019 இல் முன்னாள் கட்டளைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட இவ்வழக்கின் 14 வது சந்தேகநபராக அறிவிக்கப்பட்டிருந்தார். கடற்படையினரால் பலர் கடத்தப்பட்டுக் கொலைசெய்யப்படுகிறார்கள் என்ற விடயத்தை முற்றாக அறிந்திருந்தும் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது அவர்மீது சுமத்தப்பட்ட குற்றம்.
2019இல் தற்போதய ஜநாதிபதி பதவிக்கு வந்ததும் நியமித்த ‘ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின்’ விசாரணை, கடற்படை அதிகாரிகள் மீதான வழக்கு முந்தய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கை எனத் தீர்ப்பளித்திருந்தது. ஆனாலும் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்படுவதற்கு முன்னரேயே விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என்பதால் அத் தீர்ப்பு செல்லுபடியாகாது என முன்னாள் சட்டமா அதிபர் தீர்மானித்து, கரன்னகொட குழுவினர் மீதான வழக்கை மீளப்பெற மறுத்துவந்தார். இந் நிலையில் அவர் ஓய்வு பெறும்வரை காத்திருந்த அரசாங்கம் புதிய சட்டமா அதிபர் மூலம் கரன்னகொடவை விடுதலை செய்திருக்கிறது.