இப்போது அவனைத் தேடி மேலும் பிரச்சினைகள் வருகின்றன.

கடன்களின் ஈர்ப்பு

தர்ஷனுக்குத் தெரிந்த ஒவ்வொருவரும் அந்தப் பிரதேசத்தில் இயங்கி வரும் பல கடன் நிலையங்களில் ஒன்றிலிருந்தாவது கடன் பெற்றுத்தான் இருந்தார்கள். “எனது சகோதரன் வாரத்துக்கு மூன்று கடன்களாவது பெறுவான்” என்றான் தர்ஷன். “கடன் தான் வாழ்க்கை” உள்ளங்கைகளை மேலே திருப்பியவாறு அவன் கூறினான். சரணடைவதற்கான அடையாளம் அது. தர்ஷனும் ஒரு பெரிய கடனொன்றை எடுத்திருக்கிறான். அக் கடனில் ஒரு சிறிய பாரவண்டியொன்றை வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறான். மாதமொன்றுக்கு 16,000 ரூபாய்களை அவன் கடன் நிலையத்துக்குக் கொடுக்க வேண்டும். அதிர்ஷ்டமிருந்தால் மாதமொன்றுக்கு 20,000 ரூபாய்கள் அவனுக்கு வருமானம் வரும்.

எப்படிச் சமாளிக்கிறாய் என்று கேட்டோம். “நீ கடன் எடுத்தால் திருப்பிக் கட்டியே ஆக வேண்டும்” சிரித்துக் கொண்டே கூறினான். “கடன்களைத் திருப்பிக் கொடுப்பதற்காக சாப்பாட்டையே தவிர்ப்பதற்கு நம் கிராமத்தவர் பழகிக்கொண்டு விட்டனர்” என்றான்.

நாங்கள் தர்ஷனின் வீட்டில் 20 நிமிடங்களுக்கு மேல் இருந்திருக்கவில்லை, கிராமத்து மக்கள் அங்கு நிறைந்து விட்டனர். தங்களது நிலமைகள் பற்றி மேலும் தகவல் பெற நாங்கள் வந்திருக்கிறோம் என்ற தகவல் காட்டுத் தீ போல் பரவியிருந்தது. எங்களோடு பாயிலும், வெறும் தரையிலும், படியிலும், வெளியிலுமென இருந்தும் நின்றும் கொண்டு தங்கள் கதைகளைச் சொன்னார்கள்.

தமிழினிக்கு 67 வயது. உடல் நலமின்றி வீட்டில் இருப்பவர். அவரது கணவர் வெதுப்பகம் ஒன்றில் பணி புரிகிறார். மாதச் சம்பளம் 22,000 ரூபாய்கள். கடந்த 8 வருடங்களாகத் தமிழினி கடனில் தான் வாழ்கிறார். மொத்தக் கடன் 600,000 ரூபாய்கள். கடனைத் திருப்பிக் கொடுப்பதென்பது சிரமமான காரியம். என்ன செய்வதென்பது பற்றித் தமிழினி யோசிக்கிறார். வீட்டைத் திருத்த வேண்டும், கிணறு வெட்ட வேண்டும். எதற்கும் பணம் தான் வேண்டும்.

அத்தோடு வாழ்க்கைச் செலவுகளும், மருத்துவச் செலவுகளும் உண்டு. இதையெல்லாம் சமாளிப்பதற்கே அவர் சிறி சிறு கடன்களைப் பெறுகின்றார்.

தர்ஷனின் வீடு Photo Credit: Roar.Media

வாழ்வதற்கெனக் கடன் பெறுவதென்பது கிராமத்தவர்களுக்குப் புதிதல்ல. போடனுக்கு 34 வயது. வீட்டில் அடுப்பு எரிய வேண்டுமென்றால் அவன் அடிக்கடி கடன் வாங்கியேயாக வேண்டும். அவசரம் ஏற்பட்டால் கடனைப் பெற்றுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கொடுப்பான். இப்படி வாழ்வதில் இஷ்டமில்லை எனினும் “வேறென்ன வழி எங்களுக்கு இருக்கிறது?” என்கிறான்.

நேர்மையற்ற கடன் சுறாக்கள்

இக் கிராமத்தில் வாழும் பெரும்பாலானவர்களுக்கு நிரந்தர வேலைகளில்லை. வவுனியா நகரத்தில் சிறு சிறு தொட்டாட்டு வேலைகளைச் செய்தே சமாளிக்கிறார்கள். இவர்களுக்கு நிரந்தர வேலைகளில்லை என்பது பற்றி கடன் கொடுப்பவர்களுக்குக் கவலையில்லை. கட்ன் வழங்கும் நிலையங்கள் தங்கள் முகவர்களைக் கிராமங்கள் தோறும் அனுப்பிப் பணமுடையுள்ளவர்களை அணுகி ‘இலகுவானதும்’ ‘வசதியானதும்’ எனக் கடன்களை விற்பனை செய்கிறார்கள்.

“இக் கடன் நிலையங்கள் பொதுவாக நம்பிக்கைக்குரிய ஸ்தாபனங்கள்” என அங்கு மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளும் ரவீந்திர டி சில்வா கூறுகிறார். “லங்கா ஓறிக்ஸ் லீசிங் கம்பனி (LOLC)”, கொமேர்ஷல் பாங்க், பூமிபுத்ர ஆகியன இவற்றில் சில. இராசேந்திரன்குளம் கிராமத்து மக்கள் இதை ஒத்துக்கொண்டனர்.

எப்படியான அடையாளப் பத்திரங்களைக் கடன் வழங்கும் நிலையங்கள் கேட்கின்றன என்று கேட்டதற்கு ” எங்கள் அடையாள அட்டையின் பிரதி ஒன்றை மட்டுமே பெற்றார்கள்” என்றார் தமிழினி. கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்குரிய தகைமைகள் இருக்கின்றனவா என்பது பற்றி எதுவுமே கேட்கப்படுவதில்லை. கிராமத்தவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது செலுத்தாமல் விட்டாலோ கடன் நிலையங்களின் முகவர்கள் கிராமத்தவர்களை மிரட்டுகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள்.

” முகவ்ர்கள் எங்களைக் கெட்ட வார்த்தைகளால் பேசியோ அல்லது வன்முறைகளைப் பிரயோகித்தோ துன்புறுத்துகிறார்கள்” எனத் தர்ஷன் முறையிட்டார். கடன் பெற்றவர்களுக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கப்படும். அதையும் மீறினால் முகவர்கள் வீடுகளுக்கு வந்து இருந்துவிடுவார்கள். கடன் திருப்பிக் கொடுக்கும்வரை வீடுகளை விட்டு நகர மாட்டார்கள்.

இப்படியான அழையா வருகைகள் பெரும்பாலும் பிரச்சினைகளில் முடிகின்றன. சில குடும்பங்களில் இளம் பெண்களைப் பாலியல் தொடர்புக்கு முகவர்கள் வற்புறுத்துகிறார்கள். பல அமைப்புகளின் முறையீட்டைத் தொடர்ந்து தற்போது பொலிசார் தலையிட்டு மாலை 6 மணிக்குப் பிறகு முகவர்கள் வீடுகளுக்குப் போகக்கூடாது எனக் கட்டளையிட்டுள்ளார்கள்.

நிதியறிவு

“நுண் கடன் சம்பந்தமான பிரச்சினைகள் வடக்கில் மட்டும் நிகழவில்லை, அது நாடு முழுவதும் இருக்கிறது” என்கிறார் டபிள்யூ. ஏ. விஜேவர்த்தன. இவர் முன்னாள் மத்திய வங்கி ஆளுனரும் 1992 முதல் 2000 ஆண்டு வரையில் நாட்டின் முதலாவது நுண்கடனுதவித் திட்டத்தை நிர்வகித்தவருமாவார்.

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமையால் கடந்த வருடம் மட்டும் 195 பேர் தமதுயிர்களை மாய்த்துக் கொண்டனர் என ஜே.வி.பி. தலிவர் அனுர குமார திசநாயக்க கூறுகிறார். “இப் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். கடனுக்குப் பதிலாக பாலியல் சரணாகதி அடைய நிர்ப்பந்திக்கப்படுபவர்கள் பலர்” என அமைச்சர் மங்கள சமரவீர கூறுகிறார்.

இதன் விளைவாகச் சென்ற வருடம் பதியப்பட்ட கடன் நிறுவனங்களிலிருந்து  பெற்ற பெண்களின் கடனில் 100,000 ரூபாய்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என அரசாங்கம் கட்டளையிட்டது. அத்தோடு நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் தமது வட்டி வீதத்தை வருடமொன்றுக்கு 30% த்துக்கு மேல் அறவிட முடியாது எனவும் சட்டம் கொண்டு வந்தது.

ஆனாலும் நுகராக் கடன்களைப் பெற்ற திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருனாகல, புத்தளம், அனுராதபுரம், பொலனறுவ மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களுக்கு, தொடர்ச்சியாக ஐந்து பருவங்கள் பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இன் நிவாரணம் கிடைக்கும்.

இருப்பினும், 40% முதல் 220% வரை வட்டி அறவிடும் நுண்கடன் நிறுவனங்களுக்கு மக்கள் இன்னும் இரையாகிக் கொண்டுதானிருக்கிறார்கள்.

2012 கணக்கெடுப்பின்படி வடக்கில் அண்ணளவாக 58,000  பெண் தலைமத்துவக் குடும்பங்கள் இருக்கிறார்கள். 30 வருடப் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு இதர மாகாணங்களை விடப் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. நுண்கடன் பிரச்சினையின் தாக்கம் இங்கு அதிகமாக இருப்பதாகவே சமூகச் சுட்டிகள் காட்டுகின்றன.

வடக்கிலும் கிழக்கிலும் வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் மிகவும் மோசமாக உள்ளன.

நிதி பற்றிய அறிவின்மை பிரச்சினைகளை மேலும் வலுவாக்குகிறது. “அடிப்படை நிதி நிர்வாகம் பற்றியே அறியாமல் மக்கள் இருக்கிறார்கள். வாழ்க்கைச் செலவுகளையும் கடனை மீளச்செலுத்துதலையும் எப்படி ஒரே வேளையில் அவர்களால் சமாளிக்க முடியும்?” என்கிறார் டி சில்வா.

இராசேந்திரன்குளம் மக்களுக்கு கடன் கொடுப்பவனே மீட்பனும் எஜமானும் என்பது மட்டும் உண்மை.